Antharangam

மாற்றம் வேண்டும்!

By  | 

கேள்வி:

நான் எனது குழந்தைகளை ஒழுக்க சீலர்களாக வளர்க்க விரும்புகிறேன். அதற்காக, வீட்டில் சில முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறேன். அதிகாலையில் எழுந்து கல்வி கற்பது, நேரத்துக்கு ஏற்ப வேலைகள் செய்வது, தொலைக்காட்சியை நீக்கிவிடுவது, பேச்சில் கட்டுப்பாடு, செலவில் கட்டுப்பாடு என்று பல மாற்றங்களைச் செய்ய நினைத்திருக்கிறேன். ஆனால் என் குடும்பத்தினர் எனது இந்த யோசனைகளை கடுமையாக எதிர்ப்பதுடன் என்னுடன் கோபித்துக்கொள்கிறார்கள். ஒழுக்கமாக வாழ நினைப்பது தவறா?

பதில்:

உங்கள் எண்ணம் நிச்சயமாகத் தவறேயில்லை… ஆனால் அதற்காக நீங்கள் எடுக்க நினைக்கும் நடவடிக்கைகள்தான் நடைமுறைக்கு கொஞ்சம் சாத்தியமில்லாததாக இருக்கிறது.

பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்ப்பதற்கு நீங்கள் செய்யவேண்டியது தொலைக்காட்சியை விலக்கிவிடுவதல்ல. மாறாக, தொலைக்காட்சியை ஒரு சுய கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தச் சொல்லித் தருவதே! ஏனென்றால், வீட்டுக்குள் அவர்களுக்கு ஆரோக்கியமான சூழலை மட்டும் ஏற்படுத்த நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் வீட்டுக்கு வெளியே, சமூகத்தில் அவர்கள் நல்லதும் கெட்டதும் கலந்த சூழலையே முகங்கொடுக்க நேரும்.

ஒருவேளை நீங்கள் வீட்டுக்குள் நேர்மறையான சூழலை மட்டும் ஏற்படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, எதிர்மறையான சூழல் எது என்பதை உங்கள் பிள்ளைகள் எப்படி அடையாளம் காண்பார்கள்? அப்படி அடையாளம் காண முடியாத குழந்தைகள், வெளியில் – சமூகத்தில் இருக்கும் அனைத்தையும் தமக்கு சார்பானதாக எண்ணிப் பின்பற்றத் தொடங்கிவிட்டால், எவ்விதமான விளைவுகள் ஏற்படும் என்று சிந்தித்தீர்களா?

உதாரணமாக, தொலைக்காட்சி நல்லதும் கெட்டதும் கலந்ததே! ‘இது நல்லது, இது கெட்டது… எனவே, நாம் நல்லதை மட்டும் தெரிவுசெய்ய வேண்டும்’ என்று தொலைக்காட்சி மூலமே சொல்லிக்கொடுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு நல்லதைத் தெரிந்தெடுக்கும் திறன் வளரும்.

நேரத்தைப் பின்பற்றுவது முக்கியம்தான். அதை, நீங்கள் நடந்துகொள்வதன் மூலம் அவர்களுக்கு உணர்த்துங்கள். குழந்தைகளைக் கட்டாயப்படுத்தினால், இப்போது அவர்கள் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டாலும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வரும்போது அவர்கள் தங்கள் விருப்பத்தையே நடைமுறைப்படுத்துவர். அதை நிச்சயமாக உங்களால் தாங்க முடியாது.

You must be logged in to post a comment Login