Stories

மின்மினி விளக்கேற்றியது!

By  | 

இன்று விஜயதசமி…

எங்கள் வகுப்பறையே கலைகட்டியிருந்தது

வாசலில் கரும்பிற்கும் வாழைக்கும் கலப்பு திருமணம்

இன்று வாழைகூட தென்னையை போல் வளைந்து கொண்டிருந்தது .

வெட்கம் போலும்…

வகுப்பறையின் உள்ளே நுழைகிறேன்

வீணையோடு கலைத்தாய்…

விதவிதமான பூக்கள்

ஆங்காங்கே அழகான உடையோடு நடமாடும் பூச்செடிகள்…

அச்செடிகளின் காலில் சிணுங்கியும் சிரித்தும் சில கொலுசுகள்…

படையலுக்கு பலகாரங்கள்

உருண்டையாய் வடை,

தட்டையாய் உருண்டை,

வெள்ளை நிறத்தில் பொங்கல்…

எல்லாமே வித்தியாசமாய் .

பூஜை தொடங்க புயல்போல புகுந்தாள் ஒருத்தி

கலர் கலரான உடையணிந்த பூச்செடிகளின் மத்தியில், அவளொரு கருப்பு உடையணிந்த நந்தவனம் ..

கண்ணாடியும் கருப்பு சிறகும் அணிந்த தேவதை அவள்

ஆடம்பரத்தின் நீள, அகலம் குறைத்திருந்தாள்

அழகானவள்…

அவள் இடையின் அளவுதான் அவளது வயதாக இருக்கக்கூடும் …

பதினாறு .. .

கண்ணாடி கலட்டி இதயத்தின் இடம் தொட்டு இரண்டங்குல இடைவெளி விட்டு மாட்டிக்கொண்டாள். மீசை வைத்த கண்ணாடி போலும் மேலும் இறுக்கமாய் ஒட்டிக்கொண்டது.

விளக்கேற்ற ஐயர் சொல்ல ..

அவள்தான் சென்றாள்

மின்மினி விளக்கேற்றியது.

கலையரசிக்கு மாலையிட ஐயர் சொல்ல

அவள் அருகில் சென்றாள்

அப்பப்பா…

அவளிடம் மட்டும் ஒரு வீணை இருந்திருந்தால்

கலையரசியே அவளிற்கு மாலையிட்டிருந்திருப்பாள்

அல்லது நான் .

பூமாலை சூட்டியது ஒரு பூங்காவனம்.

அடுத்து ஐயர் வள்ளிமாலை பாடச்சொல்ல… ,

வன், டூ, த்ரீ, ஸ்டார்ட் சொல்லி ஆரம்பித்தாள் அவள்தான் .

எது? வல்லிமாலைக்கு முன் வன், டூ, த்ரீயா?

வித்யாசமானவள் அவள் .

தப்பு தப்பாய் உச்சரித்தாள்

பக்கத்தில் உள்ளவள் அவளை நச்சரித்தாள்

நான் மட்டும் மெச்சரித்தேன்

அது சரி..

வை.மு சொல்வது போல மழையில் நனைவதால் கிளி சாயம் போய்விடுமா என்ன !

தேங்காயில் சூடமேற்றி அவள்தான் கொணர்ந்தாள்

அவள் கைகளை தொட்டு கடவுளை கும்பிட்டேன் நான் .

புரியாத மொழியில் பூஜை முடிய, ஆறேழு நாள் கழித்துதான் நான் அவளை கண்டேன்

அவளை பார்க்கும் போதெல்லாம் வன், டூ, த்ரீ வந்தாலும் வார்த்தைகள் மட்டும் ஸ்டார்ட் அவதில்லையே ஏன்?

-லிங் சின்னா

You must be logged in to post a comment Login