Astrology

முதலாம் எண்ணுக்குரிய எண் கணித ரகசியங்கள்  

By  | 

எண் கணிதம் -பல நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய அற்புதமான ஜோதிட சாஸ்திரம். எண்களின் அருமையை தற்போது எம்மில் அனைவருக்கும் உணர்ந்தேயிருக்கிறோம். கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் நாம் பேருந்தில் பயணிக்க வேண்டுமென்றால், எம்முடைய அடையாள எண்ணில் ஏதேனும் இரண்டு எண்கள் கொண்டவர்கள் மட்டுமே அனுமதியளித்திருக்கிறார்கள். இதனையும் நாம் எண்களின் வழியாகவே அறிகிறோம். அதேபோல் வாழ்க்கையிலும் எண்கள் என்பது எம்முடைய கண்கள் போல் செயல்படும். உங்களுடைய உடலில் அல்லது உள்ளத்தில் ஏதேனும் சிக்கல், இடையூறு, கோளாறு, குளறுபடி, வேறுபாடு, முரண்பாடு, மாறுபாடு என எது ஏற்பட்டாலும் அதைக் கண்டு முதலில் கலங்குவது கண்கள்தான். அதனால் எண்கள் என்பது எப்போதும் எம்முடன் இருக்கும். எமக்கு ஆற்றல் தரும். எம்மை தீமையிலிருந்து காக்கும். ஆகவே எண்கள் எம்முடைய கண்கள் போல் செயல்படுவதால், எண்ணியல் மந்திரங்களில் உள்ள எண் கணிதத்தில் உள்ள சூட்சும விடயங்களைப் பற்றி, அதிகமாக யாரும் அறிந்திராத, சில உள்ளக ஆற்றலைப் பற்றி இப்போது காணலாம்.

முதலாம் எண்ணுக்கு நான்கு, இரண்டாம் எண்ணிற்கு ஏழு, மூன்றாம் எண்ணிற்கு ஒன்பது, நான்காம் எண்ணிற்கு ஒன்று, ஐந்தாம் எண்ணிற்கு எட்டு, ஆறாம் எண்ணிற்கு ஒன்று, ஏழாம் எண்ணிற்கு இரண்டு, எட்டாம் எண்ணிற்கு ஒன்று, ஒன்பதாம் எண்ணிற்கு மூன்று என ஒன்றிலிருந்து ஒன்பது எண்ணிற்குரிய முதன்மையான உதவி செய்யும் எண்கள் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். இதில் குறிப்பிடப்படுவது எல்லாம் உங்களின் பிறந்த திகதி மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இவற்றில் தற்போது முதலாம் எண்ணுக்குரியவர்களின் பலன்களும், சில இரகசியங்களையும் காணலாம்.

பொதுவாக முதலாம் எண் காரர்கள் தங்களது திருமணத்தையோ அல்லது காதலனையோத் தெரிவு செய்யவேண்டும் என்றால் நான்காம் எண்ணுக்குரியவர்களை முதன்மையானவர்களாக தெரிவு செய்யலாம். நான்காம் எண் என்றால், 4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் நன்மை செய்வார்கள். இவர்கள் தான் தங்களுக்கு ஆகச்சிறந்த பொருத்தமுடையவர்கள். உங்களது பெற்றோர்கள் தாய் அல்லது தந்தை நான்காம் திகதியில் பிறந்திருந்தால் அவர்கள் மீது பாசம் கொண்டவர்களாக இருப்பீர்கள். அவர்கள் சொல்வதை கேட்பீர்கள். அவர்கள் தவறு செய்தாலும் மன்னிப்பீர்கள். நான்காம் திகதியையுடைய காதலனாக இருந்தால், சூழல் காரணமாக அவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், அவர்கள் மீதான ஈர்ப்பு ஆயுள் முழுவதும் குறையாமல் இருக்கும்.

அதேப்போல் திருமணமான பெண்கள் அல்லது தனியாக பணியாற்றும் பெண்களாகயிருந்தால் நீங்கள் வாடகைக்கு வீடு தேடுவதாகயிருந்தாலும் இந்த நான்காம் எண்ணுடைய வீடாக அமைந்தால் எதிர்காலம் சிறக்கும். அதே போல் நீங்கள் பயன்படுத்தும் கைபேசி எண், வாகன எண், தொழில் தொடங்கும் எண் என அனைத்திலும் நான்காம் எண் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவை உங்களுக்கு சூழலுக்கேற்றவாறு உதவி செய்து கொண்டேயிருக்கும். அதாவது உங்களின் வாழ்க்கையில் எப்போது உதவி தேவைப்பட்டாலும் நான்காம் எண்ணுக்குரியவர்களிடம் கேட்டால் உடனடியாக கிடைக்கும். இவர்களால் உங்களுக்கு தீங்கு ஏற்படாது. அதே போல் நீங்கள் வேலைக்காக அல்லது தொழில் தொடங்குவதற்கான அனுமதிக்காக இந்த நான்காம் எண்ணுக்குரிய திகதிகளில், மாலை நான்கு மணியளவில் சந்தித்தால் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த வெற்றிக் கிடைக்கும்.

முதலாம் எண்காரர்கள், உடல் உஷ்ணம் மற்றும் சூட்டினால் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு பொறுமை குறைவு. அதேபோல் இந்த எண்ணுடைய மனைவி அல்லது கணவர் அல்லது காதலர் ஆகியோர்களை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். இவர்கள் புகழை விரும்புவார்கள். அதே தருணத்தில் இவர்கள் தங்களின் சுய முயற்சியால் முன்னேற்றம் பெறுவார்கள். யாருடைய உதவியும் இன்றி முன்னேற கூடிய துணிச்சலும் உண்டு. ஆனாலும் ஒன்று என்பது விபத்திற்குரிய எண் என்பதால், இவர்களின் வேகம் நல்லதல்ல. இவர்கள் விபத்தை தவிர்க்க வேண்டுமென்றால், நான்காம் எண்ணுக்குரியவர்களை உடன் அழைத்துச் செல்வது நலம். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது போல் விபத்து ஏற்பட்டாலும் காயம் குறைவாகவே ஏற்படும்.

அதேபோல் இவர்களுக்கு கண்பார்வையில் பாதிப்பு ஏற்படும். அதிலும் இவர்களின் ஜாதகத்தில்(ஜாதகத்தில் லக்னத்திற்கு 7ஆம் இடத்தில் அல்லது ராசிக்கு ஏழாம் இடத்தில் சூரியன் இருந்தால்) லக்னத்தில் சூரியன் இருந்தால் 10, 19, 28, 37, 46, 55, 64 ஆகிய வயதுகளில் கண் தொடர்பான பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க இயலாது. இதனை முன்கூட்டியே உணர்ந்து, கண் மருத்துவ பரிசோதனை செய்து, தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் இவர்களுக்கு கண்ணைத் தவிர்த்து இதயம், சிறுநீரகம், மூளை, ஜீரண மண்டலம் ஆகியவற்றிலும் மேற்கூறிய வயதுகளில் பாதிப்பு ஏற்படலாம். இது அவர்களின் ஜாதகத்தைப் பொருத்தும், நடைபெறும் திசா புத்தியை பொருத்தும் அதிகமாகவோ  குறைவாகவோ பாதிப்பு ஏற்படக்கூடும். ஏனெனில் முதலாம் எண் என்பவர் சூரியனை போன்றவர்கள். சூரியன் எப்போதும் மறைவதில்லை, இடைவிடாது இயங்குகிறது. அதேபோல் எம்முடைய உடலில் இடைவிடாது இயங்குவது இதயம், சிறுநீரகம், மூளை, ஜீரண மண்டலம் என்பதால் இவைகளிலும் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம். இதனை தடுக்கவே இயலாதா..? என்றால், இயலும். இவர்கள் புற்று வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். அதாவது அருகில் புற்று இருந்தால்.. அதனை வழிபட தொடங்குங்கள். தொடர்ச்சியான வழிபாட்டின் மூலம் உங்களது நலம் காக்கப்படும்.

முதலாம் எண்ணிற்குரியவர்களுக்கு நான்காம் எண் கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது?. கவலை வேண்டாம். அதற்கு பதிலாக 8 மற்றும் 6 ஆகிய எண் கொண்டவர்களையும் நீங்கள் கணவராகவோ, காதலராகவோ அல்லது நண்பராகவோ பெறலாம். இவர்களும் உங்களுக்கு உதவி செய்வார்கள். ஆனால் முதலாம் எண்ணுக்குரியவர்கள், எட்டாம் எண்ணையோ அல்லது ஆறாம் எண்ணையோ தங்களுடைய வாழ்க்கை துணையாக தெரிவு செய்து இருந்தால்… தயவுசெய்து நான்காம் எண்ணுடையவர்களை உங்களது தோழியாகவோ அல்லது நண்பராகவோ இருந்தால், அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள். ஏனென்றால் இந்த நான்காம் எண்ணுக்குரியவர்கள், முதலாம் எண்ணுக்குரியவர்களை வசப்படுத்தி விடுவார்கள். உதாரணத்திற்கு முதலாம் எண்ணுக்குரிய மனைவி மற்றும் எட்டாம் எண்ணுடைய கணவரும் மனமொத்த தம்பதிகளாக இனிமையாக இல்லறம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, நான்காம் எண்ணுக்குரிய ஒருவர், கணவரின் நண்பராக அறிமுகமானால்… முதலாம் எண்ணுக்குரிய மனைவியானவர்களுக்கு, அந்த நான்காம் எண்ணுக்குரிய நண்பர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படும். அவர் ‘தாலிக்கொடியை கழட்டி கொடு. நான் அடவு வைத்துவிட்டு. பிறகு மீட்டுத் தருகிறேன்’ என்று சொன்னால்.. அந்த நேரத்தில் கணவரை கூட கேட்காமல், அந்த பெண்கள் எடுத்துக் கொடுத்து விடுவார்கள். அந்த அளவிற்கு நான்காம் எண்காரர்கள் முதலாம் எண் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆகவே முதலாம் எண்காரர்கள், நான்காம் எண்காரர்களை துணையாக பெற்றிருந்தால்.. நலம். நான்காம் எண் துணையாக இல்லாமல், வேறு எண் கொண்டவர்களை துணையை அமைந்திருந்தால், நான்காம் எண்காரர்களை உங்கள் வாழ்க்கையில் அனுமதிக்காதீர்கள். இதை எப்படி நாகரீகமாக தெரிந்து கொள்வது என்றால், வீட்டிற்கு வருகைத்தரும் கணவரின் நண்பர்களையோ அல்லது மனைவியின் தோழிகளையோ அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து சொல்வது வழக்கம் அதனால் உங்களின் பிறந்த திகதி மற்றும் மாதத்தை மட்டும் கேளுங்கள். அவர்கள் இதன் உள்ளக சூட்சுமத்தை புரியாமல் தங்களின் பிறந்த திகதியைச் சொல்வர்கள். அதன் மூலம் அவர்களின் நட்பைத் தொடர்வதா? அல்லது அவர்களின் தொடர்ந்து வீட்டிற்குள் அனுமதிப்பதா? என்பதை தீர்மானிக்கலாம்.

அதே வேளை ஒரு எண், மற்றொரு எண்ணிற்கு பகையில்லை என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு எண் மற்றொரு எண்ணிற்கு உதவும். இதனை எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பதில்தான் எம்முடைய அவதானம் இருக்கவேண்டும். அதாவது ஒரு எண், மற்றொரு எண்ணை நேர்மறையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

தொடரும்…

தொகுப்பு: ராணிதாசன்

You must be logged in to post a comment Login