Antharangam

முதலில் தொழிலாளியாக இருங்கள்

By  | 

கேள்வி:

எனக்கு 41 வயது. இதுவரை ஆறேழு வியாபார முயற்சிகளைச் செய்தும் தோல்வியடைந்துவிட்டேன். என்னால் இன்னொருவருக்குக் கீழ் வேலை செய்ய முடியாது. ஆனால் என் மனைவியோ எங்காவது ஒரு நிறுவனத்தில் வேலைவாய்ப்புப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார். பொதுவான நபராக, நீங்கள் எனக்குச் சொல்லக்கூடிய அறிவுரை என்ன? 

பதில்:

நல்ல தொண்டனாக இருப்பவன்தான் நல்ல தலைவனாகப் பரிணமிக்க முடியும். நீங்கள் என்னடாவென்றால், எடுத்த எடுப்பிலேயே முதலாளியாகத்தான் வருவேன் என்கிறீர்களே? ஒருவேளை, முதலாளி மனப்பான்மையில் தொடர்ந்து நீங்கள் இருப்பதனால்தான் உங்கள் தொழிலாளர்களைச் சரியாக நடத்தத் தெரியாமல் வியாபாரத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறீர்களோ என்னவோ!

ஒரு வியாபாரத்தைத் தொடங்குவதற்கு முன், அந்த வியாபாரத்தின் அடி முதல் நுனிவரை அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வெறும் ஆர்வம் மற்றும் வெற்றிபெறப் போதாது.

உங்கள் வியாபாரத்தில் முதலில் நீங்கள் ஒரு தொழிலாளியாக இருந்திருக்க வேண்டும். உங்களை முதலாளியாகவே நினைத்துக்கொண்டால் அது பயன்தராது.

இதுமட்டுமன்றி, ஒரு வியாபாரம் பெருகுவதற்கு இடத் தேர்ச்சி, தொழில் தேர்ச்சி, பேச்சுத் திறன், உடனடியாகத் தீர்வுகள் எடுக்கும் திறன் என்பன அடிப்படைத் தேவைகள். செட்டியார் தெருவில் காய்கறிக் கடை வைத்தால் என்ன நடக்கும்? கல்லுக்குழியில் கொண்டுபோய் நகைக் கடை வைத்தால் எப்படி இருக்கும்?

மூலதனத்தைப் போட்டுவிட்டு, காலை ஆட்டிக்கொண்டு பணத்தை எண்ண வேண்டும் என்றால் அது வேலைக்காகாது. எனவே, உங்கள் மனைவி கூறுவது போல், என்ன துறையில் உங்களுக்கு ஈடுபாடு இருக்கிறதோ, அந்தத் துறையில் வெற்றிகரமாக இயங்கும் ஒரு நிறுவனத்தில் போய் இணையுங்கள். மூன்று அல்லது நான்கு வருடங்கள் அந்த வியாபாரத்தை அனுபவபூர்வமாகக் கற்றுக்கொண்ட பின் மீண்டும் ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள். வாழ்த்துக்கள்!

You must be logged in to post a comment Login