Articles

முன்னோக்கிச் செல்…!

By  | 

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளை கடந்து செல்வதே ஒரு பெரிய சவால்தான். ஒரு நாள் முடிவதற்குள் எத்தனை எத்தனை பாடுகள், இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஒரு நாள் கழிந்து ‘மறுநாள்’ என்பது எமது வாழ்க்கையை புதிதாக ஆரம்பிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் தான்.

ஒரு சிலருக்கு ஒரு பழக்கம் உண்டு. கடந்து வந்த நாட்களில் நடந்த விடயங்களை மனதில் இருத்திக்கொண்டு அதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகுவர்.

இன்னும் சிலருக்கு எதிர்காலத்தை நினைத்து பயம். கடந்த காலத்தில் விட்ட தவறுகள் எதிர்காலத்தை பாதித்துவிடுமோ அல்லது அது பெரும் பிரச்சினையாக வந்து நின்றுவிடுமோ என நடக்காத ஒரு விடயத்துக்கு கற்பனை வடிவம் கொடுத்து, மனதளவில் சோர்வடைந்து, இறுதியில் மனநோயாளியாக கூட மாறிவிடுகின்றனர்.

உண்மையில், நாம் புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், கடந்த காலம் என்பது நாம் வாழ்ந்து முடிந்த ஒன்று. அதை திரும்ப திரும்ப மனதில் எண்ணிக்கொண்டே, செய்துவிட்ட தவறுகளுக்காக மனம் வருந்துவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

அதேபோல் எதிர்காலம் என்பது நாம் வாழப்போவது. அது எவ்வாறு அமையும் என்பது யாருக்கும் தெரியாது. வாழும் இந்த நொடி மாத்திரமே நிச்சயமானது. அதை அர்த்தமுள்ளதாக்குவதும் அர்த்தமற்றதாக்;குவதும் நமது கையில்தான் உள்ளது.

பல சங்கடங்களை கடந்துதான் மனிதன் வாழவேண்டும் என்பது நியதி. பல தவறுகள் செய்ததன் பின்னரும் அவன் எப்படி தன்னை திருத்திக்கொண்டு வாழ்கிறான் என்பதே முக்கியம்.

ஒரு சிலருக்கு கற்பனைத்திறன் மிக அதிகம். நடக்காத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றை, ‘இது இப்படி நடந்துவிடுமோ’, ‘அது அப்படி நடந்துவிடுமோ’ என்று தனக்குத்தானே கற்பனை செய்து தவிப்பர்.

இது காலப்போக்கில் மன ரீதியான பாரிய பிரச்சினைக்கு உள்ளாக்கிவிடும்.

ஒரு சிறு விடயத்தில் தவறு ஏற்பட்டுவிட்டால் கூட, தலையில் இடி விழுந்தாற்போல் அப்படியே சோர்ந்துபோய் அமர்ந்துவிடுவர்.

அவ்வாறன்றி, எதையும் சமாளிக்கும் திறனை எம்மில் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பெண்பிள்ளைகள்.

எந்தவொரு விடயத்தையும் அளவுக்கதிகமாக ஆராயக்கூடாது. அந்த ஆராயும் குணமே நமக்கு ஆபத்தாகக் கூட முடியலாம்.

‘வருவது வரட்டும்… போவது போகட்டும்… எது வந்தாலும் நான் சமாளிப்பேன்…’ என்று நமக்கு நாமே மனதளவில் நம்பிக்கை தரும் வார்த்தைகளை சொல்லிக்கொள்ள வேண்டும்.

மனிதனை இயக்குவதே மனம்தான். அது சில வேளைகளில் நல்லதை கூறும். பல நேரங்களில் தீயதை கூறும். தீயதை கூறும்போதும் அதிக பயத்தை வெளிக்காட்டும்போதும் நமது மனதுக்கு நாமே தைரியம் சொல்லவேண்டும்.

தேவையற்ற சிந்தனைகள், பயங்கள், கவலைகள், சக மனிதரைக் குறித்தான தீய எண்ணங்கள்  என்பவை எம் மனதில் எழும்போது, நாம் நமது மனதை வேறு பக்கத்துக்கு திசைதிருப்ப முயற்சிக்கவேண்டும். எமக்கு எதில் ஈடுபாடு அதிகமோ அல்லது எமது மனதுக்கு அமைதியை எது தருமோ, அதை நாடவேண்டும்.

எனவே, கடந்த காலத்தை நினைத்து கவலைப்பட்டு சோர்ந்திருப்பது எமது எதிர்காலத் திட்டங்களை பாதிக்கக்கூடும்.

அதனால் கடந்த கால மனநிலையிலிருந்து விடுபட்டு எந்த சந்தர்ப்பத்திலும் முன்னோக்கிச் செல்லவே முயற்சிக்கவேண்டும்.

ஆக, நேற்று என்பது ‘முடிந்தது.’ இன்று என்பது ‘நடப்பது.’ அதேபோல் நாளை என்பதும் நம் கையில்தான் உள்ளது. அதை சிறப்பாக்குவோம்!

-து.சிந்துஜா

 

You must be logged in to post a comment Login