Articles

வங்கியாளர் ஆனார் பொற்கொல்லர்

By  | 

முதன்முதலில் வங்கியாகச் செயற்பட்டது யார் தெரியுமா?பொற்கொல்லர்கள்தான்.

அந்தக் காலத்தில் இரும்பு பீரோக்கள் கிடையாது. பாதுகாப்புப் பெட்டகங்களும் கிடையாது.  தங்களிடம் உள்ள தங்கத்தையும், தங்க நகைகளையும் எப்படிப் பாதுகாப்பது என புரியாமல் பணக்காரர்கள் பயந்தார்கள். கொள்ளைகள் மிகுந்திருந்த அக்காலத்தில் அவர்கள் தங்களிடம் உள்ள தங்கத்தையும், அதிகப்படியான தங்க நகைகளையும் பொற்கொல்லர்களிடம் கொடுத்து வைக்கத் தொடங்கினார்கள். தங்களுக்குத் தெரிந்த, நன்றாக அறிமுகமான பொற்கொல்லர்களிடம்தான் இப்படிக் கொடுத்தார்கள்.

இந்தப் பொற்கொல்லர்கள் மிகவும் நேர்மையாக நடந்துகொண்டு, உரியவர்கள் தாங்கள் கொடுத்துவைத்த நகைகளைத் திரும்பக் கேட்கும்போது நாணயமாக திருப்பிக் கொடுத்தனர். இதனால் அவர்கள் மேல் நம்பிக்கை பரவியது.

பெரிய வணிகர்களிடமும் நிறைய தங்கம் இருந்தது. அவர்களும் பொற்கொல்லர்களிடம் வந்தார்கள். ‘தயவுசெய்து எங்களிடம் உள்ள தங்கத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, நாங்கள் கேட்கும்போது திருப்பித் தாருங்கள்” என்று கெஞ்சினார்கள். இப்படிப்பட்ட வணிகர்கள் யாரும் பொற்கொல்லர்களுக்கு அவ்வளவாக அறிமுகமானவர்கள் கிடையாது. எனவே, வெறுமனே வார்த்தை நம்பிக்கையைச் சார்ந்து இவற்றை பாதுகாத்து வைப்பது சாத்தியமா என்ற சந்தேகம் எழுந்தது. தங்களுக்குப் பழக்கமானவர்களின் நகைகளை பொற்கொல்லர்களுக்கு அடையாளம் தெரியும். ஆனால், வணிகர்கள் குவித்து வைத்திருக்கும் பெருமளவு தங்கத்தை அடையாளம் காண்பது மலைப்பாக இருந்தது.

எனவே ஒரு உபாயம் கண்டுபிடித்தார்கள். ‘எவ்வளவு தங்கத்தைப் பெற்றுக்கொண்டோம்” என்பதை ஒரு சீட்டில் எழுதி, தங்கள் முத்திரையை அதில் பதித்து வணிகர்களிடம் கொடுத்தார்கள். வணிகர்கள் இந்தச் சீட்டை வேறு விதத்தில் பயன்படுத்தினார்கள். நெல், தானியங்கள், வெல்லம் என உற்பத்தியாளரிடமிருந்து பொருளை வாங்கும்போது தங்கமோ பணமோ தருவதற்கு பதிலாக, பொற்கொல்லர் தனக்குக் கொடுத்த சீட்டை உற்பத்தியாளரிடம் கொடுத்துவிட்டு பொருளை வாங்கிக்கொள்ளத் தொடங்கினார்கள். உற்பத்தியாளர் நாளடைவில் தன்னிடம் இப்படிச் சேர்ந்த சீட்டுக்களை பொற்கொல்லரிடம் கொடுத்துவிட்டு தங்கத்தைப் பெற்றுக்கொள்ளத் தொடங்கினார்.

இதில் வணிகருக்கும் வசதி. காரணம், தங்கத்தை சுமக்கவேண்டிய அபாயம் இல்லை. ஒரு வகையில் யோசித்தோமானால், இப்போது நம் வங்கிகளில் பயன்படுத்தும் காசோலை (செக்)க்கு இதுபோன்ற சீட்டுகள்தான் முன்னோடியாக இருந்தன என்பது புரியும்.

பொற்கொல்லர்கள் வேறு மாதிரி யோசிக்கத் தொடங்கினார்கள். ‘நம்மிடம் இந்த வணிகர்கள் கொடுத்து வைக்கும் தங்கத்தை உடனடியாக அவர்கள் வாங்கிக்கொள்வதில்லை. நம்மிடம் எதற்காக இந்தத் தங்கமும் பணமும் சும்மா தூங்கிக்கொண்டிருக்க வேண்டும்? இவற்றை தேவைப்படும் மக்களுக்கு வட்டிக்குக் கடனாகக் கொடுக்கலாமே” என்று நினைத்தவர்கள், அதைச் செயற்படுத்தவும் செய்தார்கள். இப்படித்தான் வங்கிகள் செயற்படத் தொடங்கின.

You must be logged in to post a comment Login