Antharangam

வருந்தத் தேவையில்லை!

By  | 

கேள்வி:

நான் திருமணமாகாத ஒரு இளைஞன். என் மனதில் எப்போதும் கெட்ட எண்ணங்களே (உடலுறவு பற்றிய எண்ணங்களே) தோன்றுகின்றன. இது எனது எதிர்காலத்தைப் பாதிக்குமோ என்ற ஐயம் என்னைத் துளைத்தெடுக்கிறது. இதனை இல்லாதொழிக்க என்ன செய்யவேண்டும்?

பதில்:

உடலுறவு மீதான ஆவல் தோன்றுவது கெட்ட எண்ணம் என்ற தவறான புரிதலைக் கைவிடுங்கள். இளமைப் பருவத்தில் உடல்வேட்கை அதீதமாக உருவாவது இயற்கையே. அதனை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்தீர்களானால், அது இன்னும் இன்னும் வளருமே தவிர குறையாது.

எந்நேரமும் உடலுறவு குறித்தே உங்கள் எண்ணம் செல்கிறது என்றால், ஒன்று நீங்கள் எந்தவொரு வேலைக்கும் செல்லாதவராக இருக்கவேண்டும். அல்லது நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு அதிக நேரம் உபரியாக – அதாவது வேலையின்றி – இருக்க வேண்டும். அல்லது நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பெண்களும் வேலை செய்யக்கூடும். அல்லது, பெண்கள் அடிக்கடி வந்து போகும் இடத்தில் நீங்கள் வேலை செய்பவராக இருக்க வேண்டும்.

வேலைக்குச் செல்லாதவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், புத்தகங்கள் வாசிப்பது, தொலைக்காட்சியில் விளையாட்டுக்களை (மட்டும்) கண்டு ரசிப்பது, நன்றாகத் தூங்குவது, ஏதேனும் தொலைநிலைக் கல்வியொன்றைத் தொடர்வது என்று, உங்களை ஏதேனும் ஒரு வேலையில் ஐக்கியப்படுத்திக்கொள்ளுங்கள்.

வேலையில் இருந்தும் பொழுதுபோகவில்லை என்றால், அந்த நேரத்தைக் கொண்டு ஏதேனும் பணம் சம்பாதிக்க முடியுமா என்று பாருங்கள். ஏனென்றால், திருமணம் ஆகாத நீங்கள், உங்கள் திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரத்தை சம்பாதித்து வைத்துக்கொள்ள இதுவொரு நல்ல வாய்ப்பு.

ஆனால், பரபரப்பான வேலை நேரத்திலும் உங்களுக்கு உறவு குறித்த எண்ணம் தோன்றுமாயின், செய்யும் வேலையில் உங்கள் கவனம் இல்லை என்றே பொருள். இவ்வாறான நேரங்களில், முடிந்தவரை வேலையின் மீதே உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள். அதற்கு, தினந்தோறும் தியானம் அல்லது ‘சைலன்ட் சிட்டிங்’ என்று சொல்லப்படும், கண்களை மூடி, மௌனமாக ஒரு இடத்தில் அமர்ந்துகொள்வது என்று, ஏதேனும் ஒரு பயிற்சியைச் செய்யலாம்.

சிலநேரங்களில், வேலைசெய்யும் இடத்தில் பெண்கள் யாரேனும் இருந்து, அவர்களைப் பார்க்கும்போது உங்களுக்குள் இதுபோன்ற எண்ணங்கள் தலைதூக்கலாம். இது சகஜமானதே. இதற்காக வருந்தவேண்டியதில்லை. இதற்காக, அவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பதைத் தவிர்த்து, கூடியவரையில், அவர்களுடன் சிரித்து கதைத்து, கேலி செய்து நேரத்தைச் செலவிடலாம். ஓரிரு வாரங்களில் உங்கள் பிரச்சினை தானாகவே தீர்ந்துவிடும்.

உங்களுக்குத் தோன்றும் வேட்கை உணர்வு சாதாரணமானதே. இதையிட்டு நீங்கள் வருந்தத் தேவையில்லை.

You must be logged in to post a comment Login