Antharangam

வலிதரும் உறவுகள்!

By  | 

நான் ஒரு பெண். வயது 33. இன்னும் திருமணமாகவில்லை. அம்மா, அக்கா, தம்பியுடன் வாழ்ந்துவருகிறேன். எனது பதினைந்து வயதில் எனது தந்தை மரணமானதும் வாழ்க்கை தத்தளிக்க ஆரம்பித்தது.
அதீத உடல் எடை என்பதால் அம்மாவால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. அக்கா படிப்பில் கெட்டிக்காரி. தம்பிக்கு என்னைவிட மூன்று வயது குறைவு. ஆக, குடும்பத்தின் வருமானத்தைத் தேடும் பொறுப்பு நான் கேட்காமலேயே என் தலையில்விழுந்தது. தையல் கடை ஒன்றுக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். சொந்த வீடு என்றாலும் நான்கு பேரின் உணவு, உடை, இருவரின் கல்வி என்று செலவுகள் தலைக்குமேல் இருந்தன.
தனது கல்வித் திறமையை வைத்து ஒத்துழைக்க எனது அக்கா முன்வரவேயில்லை. எப்படியோ காலம் ஓடிவிட்டது.
அக்காவுக்கு கல்யாணம் செய்துவைத்தேன். தம்பியும் தொழிற்கல்வி பயின்று இப்போது இ.போ.சவில் நிரந்தரப் பணிவாய்ப்பு பெற்றுவிட்டார்.|இப்போது எனது திருமணத்துக்காக வீட்டை சீதனமாகக் கேட்கிறார்கள். அதற்கு தம்பியும் அக்காவும் மட்டுமல்லாமல் அம்மாவும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். எந்தவிதத்திலும் எனது திருமணத்துக்கு ஒத்துழைப்புத் தரவும் அவர்கள் தயாராக இல்லை. வெறுத்துப் போய்விட்டது. என்னடா இந்த உலகம் என்று சலிப்பாக இருக்கிறது. ஆறுதலாக ஏதேனும் சொல்வீர்களா?

பதில்:

ஒரு அற்புதமான, தைரியமான பெண்ணான உங்களுக்கு எதற்கு ஆறுதல் வார்த்தைகள்?

மனிதர்களில் பல வகையினர் இருக்கிறார்கள். அதில் நீங்கள் உயர் வகையைச் சார்ந்தவர். அந்த வகையில், வாழ்க்கையை வெற்றி கொள்வதற்கான உறுதியான மனம்படைத்தவர் நீங்கள். பதினைந்து வயது முதல் இன்றுவரை, உங்கள் போராடும் மனமும் தைரியமான குணமும்தான் உங்களை வழிநடத்தி வந்திருக்கிறது.

இப்போது நீங்கள் துவண்டு போயிருப்பது உங்கள் தடுமாற்றத்தையும் ஏமாற்றத்தையுமே காட்டுகிறது. நீங்கள் நிச்சயமாக எதையும் எதிர்பார்த்து உங்கள் குடும்பத்தினரைப் போஷித்திருக்கமாட்டீர்கள். ஆனால், உங்கள் இளமைப் பருவத்தையே அவர்களுக்காகத் தியாகம் செய்தும் ஒரு வீட்டை விட்டுத்தரக் கூட அவர்கள் தயாராக இல்லையே என்ற ஆதங்கம்தான் உங்களை நிலைகுலைய வைத்திருக்கிறது.

நீங்கள் செய்தவற்றை உங்கள் குடும்பத்தினரிடம் கூறி நியாயம் கேட்டால் கூட, செய்ததைச் சொல்லிக் காட்டுகிறீர்கள் என்று உங்கள் மீதுதான் குற்றம் சுமத்துவார்கள். நிச்சயமாக இது நடந்தும் இருக்கும்.

தூக்கணாங் குருவியைச் சிறைப் பிடிக்கலாம். ஆனால், அற்புதமாகக் கூடு கட்டும் வித்தையை அதனிடமிருந்து திருடிவிட முடியாது. நீங்களும் அப்படித்தான்!

ஒரு குடும்பத்தையே தலையில் சுமக்கவேண்டிய சூழலை பதினைந்து வயதிலேயே எதிர்கொண்டவர் நீங்கள். சிறுபராயத்துக்கான சந்தோஷங்களையெல்லாம் விட்டுவிட்டு, குடும்ப முன்னேற்றத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு உழைத்திருக்கிறீர்கள். உங்கள் இலக்கையும் ஏறக்குறைய பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் எட்டியும் இருக்கிறீர்கள். பிறகேன் இந்தத் தயக்கமும் தடுமாற்றமும்?

வெற்றியாளர்கள் எப்போதும் ஒரு இலக்கை அடைந்ததும் தமது உழைப்பை நிறுத்தி விடுவதில்லை. மாறாக, அடுத்த இலக்கை நிர்ணயித்து, அதை அடைவதற்காக ஓடத் தொடங்குவார்கள். நீங்களும் ஒரு வெற்றியாளர்தான். உங்கள் குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்து விட்டீர்கள். அது ஒரு இலக்குமட்டுமே! அடுத்து, உங்கள் திருமணத்தை இலக்காகக்கொண்டு இயங்க ஆரம்பியுங்கள்.

உங்களிடம் சீதனத்தை எதிர்பார்ப்பவரைவிட, உங்களையே சீதனமாக, இன்னும் தெளிவாகச் சொல்வதானால், உங்கள் ஆற்றலை சீதனமாகக் கருதும் ஒருவரைத் தேடுங்கள். ஒருவேளை, அவ்வாறான ஒருவர், தானாகவே உங்களைத் தேடி வரவும் வாய்ப்பிருக்கிறது. அப்படியொரு வாய்ப்பை அடையாளம்கண்டு பெற்றுக்கொள்ளுங்கள். பிறகென்ன…? அடுத்து உங்களுக்கே உங்களுக்காக உங்கள் ஆற்றலைப் பயன்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கையும் உயர ஆரம்பிக்கும்.

பிறருக்காக உழைத்த போதே இவ்வளவு ஆற்றலுடன் இயங்கியிருக்கிறீர்கள் என்றால், உங்களுக்காக உழைக்கும்போது எவ்வளவு ஆற்றலுடன் இயங்கமுடியும்? யோசித்துப் பாருங்கள்.

நீங்களாக நினைத்தால் அன்றி, உங்களைத் தோல்வியடையச் செய்வதற்கு யாருமில்லை. எனவே, உங்களை நீங்களே வெற்றி கொள்ளத் தொடர்ந்தும் முன்னேறுங்கள். வாழ்த்துக்கள்.

 

You must be logged in to post a comment Login