Stories

விடியலை நோக்கிய தவிப்பு

By  | 

சோலைக்குயில்கள் காலைக் கதிரவனின் வருகையை வரவேற்று ஆரவாரித்து கொண்டிருந்தன. அந்த அற்புதமான அதிகாலைப் பொழுதில் நிசப்தமாகிப்போன நினைவலைகளை மனதில் தாங்கியபடி தலையில் கைவைத்து கண்ணீர் கடலில் மூழ்கி விட்டிருந்தாள் றூபி.

இவள் யாழ்ப்பாணத்தில் செல்வத்திலே பெயர்போன வரதராசா பார்வதி தம்பதிகளில் ஏக புத்திரி.

செல்வத்திலே எந்த குறையும் இல்லாததால் நினைத்ததையெல்லாம் ஒற்றைக்காலில் நின்று வாங்கி விடுவாள். இருந்தாலும், பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றும் நோக்குடன் கல்வியிலும் விளையாட்டிலும் கெட்டிகாரி இவள்.

சாதாரண தர பரீட்சையிலும் எதிர்பார்த்த பெறுபேற்றை பெற்றதால் அவளின் விருப்பப்படியே… நவீனரக பெறுமதியான கைப்பேசி ஒன்றை வரதராசா வாங்கிக் கொடுத்தார்.

அத்துடன் “றூபி நீங்கள் பெரிய டாக்டராக வரவேண்டும். இதுதான் இந்த அப்பாவின் ஆசை” என்ற அப்பா… “உங்கள் படிப்புக்காக என்ன கேட்டாலும் வாங்கித் தருகிறேன்…” என்பதையும் அவள் காதில் போட்டு வைத்தார்.

அவள்தான் அப்பா பிள்ளை ஆச்சு அவர் சொன்னபடியே படித்தாள்.

அழகிலோ குணத்திலோ படிப்பிலோ அவளுக்கு நிகர் அவள் மட்டும்தான். அவளைப் பார்த்து ஊரே பெருமைப்படும் அளவுக்கு மரியாதையுடன் வாழ்ந்தாள்.

இப்படியான வேளையில் றூபிக்கு நள்ளிரவில் ஒரு புதிய தொலைப்பேசி இலக்கத்திலிருந்து அழைப்பு வந்தது. அவளும் யாரோ தன் வகுப்பு நண்பர்கள்தான் என்று நினைத்து “ஹலோ யார் நீங்கள் என்று கேட்டாள்” மறுமுனையில் யாரோ ஒரு இளைஞனின் குரல் “உங்கட போனில் இருந்து மிஸ்டு கோல் வந்திருந்தது… நீங்கள் யார்?” என்று கேட்டான் அவன்.

அது தன் நட்பு வட்டத்திற்குள் இல்லாத ஒரு குரல் என்பதால் றூபி அந்த அழைப்பினை நிறுத்திவிட்டு நித்திரையானாள்.

மறுநாளும் அதே நேரத்தில் அந்த இலக்கத்தில் இருந்து அழைப்பு வந்தது.

அந்த குரல் ‘ஹலோ’ என ஆரம்பித்து பேச ஆரம்பிக்கும் முன்னரே “ஹலோ உங்களை எனக்குத் தெரியாது ரோங் நம்பர்” என்றாள் றூபி.

மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்படாது “தெரியாது என்றால் என்ன நான் ஸ்ரீகாந்த்” என பதில் வந்தது மட்டுமன்றி “நாங்கள் நண்பர்களாக இருப்போமே” என அந்த இளைஞனின் குரல் நட்பு வலையை விரித்தான்.

இப்படியே அந்த இரவு அழைப்பில் இருவரும் தினமும் பேச ஆரம்பித்தார்கள்.

இந்த தொடர் உரையாடல் அவர்களை நண்பர்கள் ஆக்கியது. முகம் பார்க்காது வந்த நட்பு தொடர்ந்தது.

ஸ்ரீகாந்த் றூபியோடு பேசிப் பேசி அவளது குடும்ப நிலையை முழுவதுமாக அறிந்துக் கொண்டான்.

அதேவேளை ஸ்ரீகாந்த் தான் சொந்தமாக கைப்பேசிகளை விற்பனை செய்யும் கடை ஒன்றினை வைத்திருப்பதாக கூறினான்.

நட்பு காதலாக மலர்ந்தது…

இவர்கள் தினமும் இரவில் வழமையை விட நீண்ட நேரம் பேச ஆரம்பித்தார்கள்இ

ஒருநாள் அவள் அப்பா…

“றூபி யாரம்மா… இரவில் போன்ல”

“அப்பா அது யசோ இன்றைக்கி படிச்ச பாடத்தில் விளங்காத சில பகுதிகள் பற்றி கேட்டாள் அப்பா அதுதான் பேசிட்டிருந்தேன்” என்றாள்.

உண்மையென நம்பும் அளவில்…

“அட என்ற மகள் இப்ப டீச்சரம்மா…” என்று மனைவியிடம் பெருமையாக சொன்னார் அவள் அப்பா.

சில மாதங்கள் செல்ல…

றூபியின் செயற்பாடுகளில் அவள் அப்பாவுக்கு சந்தேகம் வந்தது.

அவளிடம் விசாரித்த போது… விடயத்தை சொல்வதற்கு காத்திருந்தவளாய் எல்லா உண்மைகளையும் கொட்டிவிட்டாள்.

வரதராசாவின் கனவுகள் உடைந்தன.

மறுத்தாலும் றூவி ஏதாவது செய்து விடுவாளோ என்ற அச்சத்தில்… ‘ஸ்ரீகாந்தை வீட்டுக்கு அழைப்போம்… பிறகு பேசி ஒரு முடிவு எடுப்போம்’ என்றார்.

அதன்படி மறுநாள் மதியம் ஸ்ரீகாந்த் வந்துவிட்டான்.

அவனை முதன் முறையாக பார்க்க போகும் சந்தோஷத்தில் அவள் பட்டாம் பூச்சியாய் சிறகடித்தாள்.

வாயின் மணி அடித்தது.

கதவைத் திறந்த அவள் அப்பா அதிர்ந்து போனார். ‘வாங்கள்’ என அழைப்பதற்கு கூட அவருக்கு வார்த்தை வரவில்லை.

“கிளிக்குஞ்சு போன்ற பொண்ணுக்கு இந்த நாற்பது வயது மனுசன் மாப்பிள்ளையா…?

ஸ்ரீகாந்த் சென்றவுடன் வரதராசாவும் பார்வதியும்… “கிளிய வளர்த்து பூனை கையில கொடுக்கிறதா… நேரில பார்க்காமல் இந்த மனுசனை எப்படி காதலித்தாய்… நாங்கள் இவனுக்கு உன்னை கட்டி வைக்க மாட்டோம்…” என உறுதியாக கூறிவிட்டனர்.

அவள்தான் பிடிவாதக்காரியாயிற்றே…  தான் நினைத்ததை சாதிப்பதிலும் கெட்டிக்காரி.

அப்பா அம்மாவின் வார்த்தைகளை கேட்டவளுக்கு மூலை வேகமாகவே இயங்கியது.

அவள் வீட்டுக்கு வந்துவிட்டு சென்றவன் பாதி தூரம் போகும் முன்னே… அவனுக்கு அழைப்பெடுத்து…

தான் கூட வருவதாக கூறி நிற்கும்படி கூறிவிட்டு…

தன்னுடைய நகைகள், உடைகள், தாய் இரகசியமாக ஒளித்து வைத்த பணத்துடன்… அன்று இரவே அவனுடன் சென்று விட்டாள்.

இருவரும் எந்தக் குறையுமே இல்லாதவாறு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

சில மாதங்களில் அவள் கருவுற்றாள்…

ஸ்ரீகாந்த் நன்றாக அவளை கவனித்துக் கொண்டான்.

சில நாட்களில் கடனாளிகள் ஸ்ரீகாந்தை அவன் வீட்டுக்கே தேடி வரத் தொடங்கினர்.

கடனை திருப்பி செலுத்த மாற்று வழிகள் இல்லாத நிலையில் றூபி தன்னுடைய நகைகள் அனைத்தையும் கொடுத்தாள்.

அவற்றை விற்றும் அவனால் முழுமையாக கடனை அடைக்க முடியவில்லை…

அவமானம் தாங்க முடியாமல் போக தூக்கில் தொங்கிவிட்டான்.

இப்போது தனிததுப்போன றூபிக்கு ஆறுதல் கூற கூட யாருமே இல்லை.

சிறகிழந்த பறவை போல… வாழ்க்கையின் சுயங்களை இழந்தவளாய்… விடியலை நோக்கி காத்திருக்கிறாள்.

-எஸ். எஸ். கன்யா

You must be logged in to post a comment Login