Stories

விடைகொடு!

By  | 

திகாலை மூன்று மணி… குமாருக்கு உறக்கம் வரமறுத்தது. அந்த அமைதியான பொழுதில் கேட்ட சிறிய சத்தம்கூட அவனுக்கு பயமுண்டாக்கியது.

குமார் மலையகத்தில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். அக்கா, தங்கையோடு சேர்த்து இன்னும் இரு தம்பிகள் அவனுக்கு.
அம்மா காலையில் வேலைக்கு சென்றால் வீடு திரும்ப மாலை நான்கு மணியை கடந்துவிடும். அப்பாவுக்கு அடிக்கடி உடற்பகுதிகள் இயங்க மறுத்து அப்படியே அமர்ந்துவிடுவார். சில முதலுதவிகள் செய்தே பழைய நிலைக்கு அவரை கொண்டுவரமுடியும்.

அப்படியும் இயலாதபோது, அன்றாட உணவுக்கு தேவையான மரக்கறிகளை வீட்டுக்கு முன்பாகவுள்ள சிறிய தோட் டத்தில் பயிரிட்டுவந்தார்.

குமாரின் குடும்பநிலை இவ்வாறிருக்க, ஆயிரம் ரூபா சம்பளம் கோரி இடம் பெற்ற போராட்டத்தினால் இரண்டு கிழமைகளுக்கு மேலாக யாரும் வேலைக்குச் செல்லவில்லை.

இதனால் உணவுக்கே வழியில்லாமல் துன்பப்பட்ட தன் குடும்பத்தினரை வறுமையின் பிடியிலிருந்து காப்பாற்ற நினைத்தான், குமார்.

சாதாரண தரப்பரீட்சை எழுதிய தோடு படிப்பை இடைநிறுத்திக் கொண்டான். அயல்வீட்டு மாணிக்கம் மாமாவிடம் சென்று, “மாமா, நானும் கொழும்புக்கு வந்தா எனக்கொரு வேல பேசித் தருவீங்களா?” என்று கேட்டான்.

அவன் கண்ட பட்டதாரிக்கனவு கண்ணீராய் வழிந்தோடியது. அவன் நிலை தெரிந்தவர், மாணிக்கம் மாமா.

“கவலப்படாத… படிச்சவன் மட்டுமா நல்லாருக்கான்? உழச்சவனும் நல்லாத்தானே இருக்கான்… நாளைக்கு நான் ஏழரை மணி பஸ்ஸுக்கு போறேன், நீயும் வா…” என்று அவனுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு வந்ததும் குமார் பெற்றோரிடம் தான் வேலைக்கு போக முடிவெடுத்திருப்பதாக கூறியபோது,

“நீ படிச்சு குடும்பத்த பாத்துக்குவனு தானே கால்வயிறு கஞ்சி குடிச்சும் குடிக்காமலும் உன்ன படிக்கவச்சேன். டெஸ்ட்தான் எழுதிட்டியே… இன்னும் கொஞ்ச காலமிருக்கு… அதையும் படிச்சி முடிச்சிடு….” என கண்ணீர்விட்டாள் அம்மா. உடனே அவள் கைகளை பற்றிக்கொண்டபடி,

“அம்மா, உங்களால என்ன மட்டுந் தான் படிக்க வைக்கமுடியும். ஆனா, நா வேலைக்கு போனா அக்காவையும் கெம்பஸ் அனுப்புவேன்… தம்பி, தங்கச்சிகளையும் படிக்க வைக்கமுடியும்” என ஆறுதல் சொன்னான். இயங்க முடியாமல் இருக்கும் அப்பாவையும் திரும்பிப் பார்த்தான்.

அவர் எண்ணிலடங்கா உள்ளக்கு மறல்களோடு மகனை அழைத்து கட்டியணைத்தார். அவன் நெற்றியில் முத்தமிட்டார். அன்றிரவு அப்பாவின் மடியிலேயே உறங்கிப்போனான். கண் விழித்துப் பார்த்தபோது காலை ஆறு மணி.

மகனை தாங்கியபடியே சுவரில் சாய்ந்துறங்கும் தந்தையை பார்த்துக் கொண்டேயிருந்தான்.”என்னப்பா, அப்பாவையே பார்த்துக்கிட்டிருக்க. தண்ணி சுட வச்சிருக்கேன்… போய் குளி” என்றுவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள் அம்மா.

குமார் குளித்துவிட்டு வர மாணிக்கம் மாமாவும் வந்துசேர்ந்தார். முருகன் படத்துக்கு விளக்கேற்றிவிட்டு குமாரின் நெற்றியில் விபூதியிட்டு, “’பழனியப்பன் உனக்கு ஒரு குறையும் வெக்கமாட்டான்” என்றாள் அம்மா. அப்பாவின் காலில் விழுந்து வணங்கினான். உடன்பிறப்புகளின் கைகளை பிடித்துக்கொண்டான். கண்கலங்கிவிட்டான்.

ஒரு கையில் துணிப்பையையும் மறுகையில் மாணிக் கம் மாமாவின் கையையும் பிடித்தபடி மலையகத்துக்கு விடைகொடுத்து பஸ்ஸில் ஏறினான்.

கடைசியாக உறவுகளை விட்டுப்பிரிந்த அக்காட்சி அதி காலையிலேயே அவன் நினைவுக்கு வந்து கண்ணீரை வரவழைத்தது.

பிறகு சுயத்தை உணர்ந்தவன் கைப் பேசியைத் தேடினான். அறை முழுவதும் இருட்டு என்பதால் கைப்பேசி கைக்கு கிடைக்க தாமதமானது. உலக நடப்புக் களை தெரிந்துகொள்ள வழக்கம்போல முகநூல் பக்கத்தை பார்வையிட்டான்.

கொரோனா வைரஸ் தொற்று இலங்கைக்கும் பரவிவருவதாக இருந்த செய்தியைக் கண்டு அதிர்ந்துபோனான். எப்போது விடியும் என்றிருந்தது அவனுக்கு.

முதல் வேலையாக விடுமுறை பெற்றுக்கொண்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என வேலைதளத்துக்குச் சென்றான். முதலாளியிடம் விடுமுறை கேட்க, “லீவுமில்ல ஒண்ணுமில்ல… நீ கேட்குறப்போல்லாம் லீவு தரமுடியாது…. போறதுனா இப்பவே போ, திரும்பி வராத” என்று அவர் சொன்னதும் மனமுடைந்து வீட்டுக்கு செல்லும் எண்ணத்தை கைவிட்டான்.

கொழும்புக்கு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. பெற்றோ ரைப் பார்க்கவில்லை என்ற எண்ணம் மட்டுமே அவனைச் சுற்றிக் கொண்டி ருந்தது. அன்று வேலை முடிய தாமதமானது. அவசர அவசரமாக சாப்பாடு வாங்கச்சென்றான். உணவகம் மூடியிருந்தது. “சரி, இன்னைக்கு பட்டினிதான்” என்று நினைத்துக் கொண்டே குளித்துவிட்டு உறங்கினான்.

மறுநாள் காலை அரசு ஊரடங்கு சட்டம் அறிவித்திருப்பதாக வானொலி செய்தியில் கேட்டான். மனதில் ஆயிரம் யோசனைகள்.

கையில் பணம் இருக்கிறது. ஆனால், சாப்பாடு வாங்க எந்தக் கடையும் திறக்கப்படவில்லை. ஊருக்கு செல்ல பேருந்தும் இல்லை. வெளியிலும் செல்லமுடியாது, என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்தான். அப்போது குமாரின் கைப்பேசி ஒலித்தது. அழைப்பெடுத்தது யார் என்றுகூட பார்க்காமல் எடுத்து ‘ஹலோ’ என்றான். அடுத்து கண்களில் கண்ணீர்….

“குமார், எப்படிப்பா இருக்க? கொரோனானு ஏதோ நோய் பரவுதுன்னு ஊரடங்கு சட்டம் போட்டுட்டாங்களேப்பா… என்னப்பா செய்ற? ரூம்லயா இருக்க” என்றார் குமாரின் அப்பா.

“’ம்… ஆமாப்பா” என்று மட்டுமே அவனால் கூறமுடிந்தது. “சாப்பாட்டுக்கு என்னப்பா செய்யிற? சாப்பிட்டியா?” என்று கேட்க, “சாப்பிட்டேம்பா… இன்னைக்கு மட்டுந்தான் ஊரடங்கு சட்டம் போட்டிருக்காங்க. நாளைக்கு எடுத்திடுவாங்க” என திக்கித்தினறி மகன் பதிலளிப்பதை கேட்டு அப்பா அழுதார். குமாருக்கும் அழுகை வந்தது.

“அப்பா, எனக்கு ஒன்னுமில்ல. நா நல்லாதான் இருக்கேன். என்ன பத்தி கவலப்படாதீங்க” என கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

அன்று முழுவதும் தண்ணீரை மட்டும் குடித்து வயிற்றை நிரப்பிக்கொண்டான். மறு அறிவித்தல் வரை கொழும்பு உட்பட ஆறு மாவட்டங்களுக்கு ஊரடங்கு, மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் தடை என்கிற செய்தி கேட்டு தடுமாறினான்.

முகநூல் பக்கம் சென்றான். “மலையகத்திலிருந்து கொழும்புக்கு வேலைக்கு சென்றவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல இந்த இலக்கங்களுக்கு அழைக்கலாம்” என்று இடப்பட்டிருந்த பதிவுகளில் தரப்பட்டிருந்த எல்லா இலக்கங்களுக்கும் அழைப்பெடுத்து விபரம் கேட்டான். ஆனாலும் பயனின்றிப்போனது.

இதற்கிடையில் வீட்டிலிருந்து அழைப்பு வந்துகொண்டிருந்தது. “எதுவும் வேணாம்… ஊருக்கு வந்துடு” என்று அம்மா கதறினாள்.

“பயப்படாதீங்க அம்மா, எனக்கு ஒன்னுமில்ல, நா வந்திடுவேன்” என குமார் ஆறுதலாக பேசியபோது திடீரென கைப்பேசியினூடாக சத்தமொன்று கேட்டது.

‘ஐயோ’ என்று அலறினாள் அம்மா. “என்ன நடந்தது” என குமார் பதறினான். தொடர்பை துண்டிக்காமல் கைப்பேசியில் கத்தினான்.

“என்னாச்சு அம்மா, ஹலோ ஹலோ!”

ஃபோனை எடுத்த குமாரின் கடைசித் தம்பி “அண்ணா, அப்பா விழுந்திட்டாரு… கையும் காலும் இயங்கல” என்றபோது மூச்சடைத்ததுபோல் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்தான்.

சற்று நேரத்தில் கைப்பேசியை எடுத்து “நீ பயப்படாத தம்பி, அப்பாவ நாங்க பாத்துக்குறோம். நீ கவலப்படாத…” என்றாள் அக்கா.

குமாருக்கு உயிர்திரும்பியது. இதற்கு மேலும் இங்கிருக்க முடியாதென அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு ஓடினான். “அனுப்ப முயற்சிக்கிறோம்” என்றார்கள் பொலிஸ்காரர்கள்.
ஒவ்வொரு நாளும் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகளில் வாழைப் பழமும் பிஸ்கட்டும் வாங்கி சாப்பிட்டு நாட்களைக் கடத்தினான்.

அன்றும் கைப்பேசி ஒலித்தது. “தம்பி, அப்பாவுக்கு ஒன்னுமில்ல. ஹொஸ் பிடல்லருந்து இப்பதா கூட்டிட்டு வந்தோம். உன்ன நெனச்சு அழுதுக்கிட்டே இருக்காரு. சீக்கிரமா வந்திடு” என்ற அக்காவிடம் ஆறுதலாக பேசிவிட்டு கைப்பேசியை கீழே வைத்தான்.

முடக்கி வைத்திருக்கும் ஊரடங்குக்கு அரசு விடைகொடுக்குமா? உயிர்குடித் தது போதுமென கொரோனா விடை கொடுக்குமா? இல்லை என்னைப் போல பெற்றோர், சுற்றத்தை பிரிந்து வயிற்றுக் கும் வாழ்க்கைக்கும் உழைக்கவந்த இளைஞர்கள் சொந்த ஊருக்கு செல்ல கொழும்பு விடைகொடுக்குமா?

எண்ணிக்கொண்டே குமாரின் நெற்றி வியர்வைத்துளிகளும் கண்ணீர்த் துளி களும் தாடியில் இணைந்தபடி நகர்கின் றன நிமிடங்கள்.

-பாலச்சந்திரன் கனகேஸ்வரி,

யாழ். பல்கலைக்கழகம்.

(ஊடக கற்கைகள் துறை)

 

 

 

You must be logged in to post a comment Login