Beauty

வியர்க்குரு(Prickly)பிரச்சினைக்கு தீர்வு

By  | 

மே மாதம் மழைகாலம் என்பார்கள். அதனை உண்மைதான் என கூறும் விதமாக அவ்வப்போது நாட்டில் ஆங்காங்கே மழை பெய்தாலும் கூட வெயிலின் உக்கிரம் சிறிதும் குறையவில்லை.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றால் வீட்டில் இருப்பவர்களும் வெப்பமான காலநிலையால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் வெயிலில் செல்பவர்களுக்கு மட்டும் தான் வியர்க்குரு பிரச்சினை என்று இல்லாமல் வீட்டில் இருப்பவர்கள் தொடக்கம் பிறந்த குழந்தைகளையும் கூட வியர்க்குரு விட்டுவைக்கவில்லை.
வியர்க்குரு வந்தால் அவை சில நாட்களில் மறைந்துவிடும் என்றாலும் உஷ்ணம் அதிகரிப்பால் வியர்க்குரு சமயங்களில் வேனல் கட்டிகளாகவும் படையெடுக்கிறது. உஷ்ணக்கட்டி பிரச்சினையாகவும் மாறுகிறது. மேலும் உடலில் சிறு சிறு கொப்புளங்கள் உருவாகி அரிப்பை ஏற்படுத்துகின்றது. இதனை சொரிவதால் புண் போன்ற அடையாளங்கள் உருவாகி அழகையும் கெடுக்கிறது.
கடைகளில் இதற்கென பவுடர்கள் கிறீம்கள் விற்கப்பட்டாலும் கூட அவை முழுமையான தீர்வை தருவதில்லை.
எனவே தான் வியர்க்குருவை கண்டதும் விரட்டி அடிக்க சில இயற்கை வழிமுறைகளை பார்ப்போம்…

மஞ்சள் தூள்
கிருமி நாசினியாக செயல்படுவதால் உடலில் தேங்கும் உப்பு கழிவுகளை வெளியேற்ற இவை உதவும். உடலில் இருக்கும் நச்சுகள் வியர்வை துளிகளாக உடலில் வெளியேறும் போது அவை சருமத்தில் அடைத்து கொள்ளும்போது தான் சருமத்தில் வியர்க்குரு பிரச்சினை உண்டாகிறது. இதை அகற்றி மேலும் சரும பாதிப்புகளையும் விரட்டி அடிப்பதில் மஞ்சள் சிறப்பாக உதவுகிறது. மஞ்சளுடன் கெட்டித்தயிர் கலந்து வியர்க்குரு இருக்கும் இடத்தில் பற்று போல் போட்டு இளநீரில் கழுவி வந்தால் வியர்க்குரு நீங்கும்.வியர்க்குரு இல்லாதவர்கள் வாரம் ஒரு முறை முகம், மார்பு பகுதியில் தடவி வரலாம்.
(இளநீர் குளிர்மை இந்த கால சூழலுக்கு ஒத்துவராது சளி ஏற்படும் என்பவர்கள் இளநீருக்கு பதில் வெது வெதுப்பான நீரை பயன்படுத்தலாம்)

வேப்பிலை
வேப்பிலை கிருமி நாசினி என்பதோடு சருமத்தில் பிரச்சினைகளையும் நீக்கும் வல்லமை கொண்டது. குறிப்பாக வெயில் காலங்களில் ஏற்படக்கூடிய அம்மை கொப்புளங்கள் அரிப்பு ஏற்படாமல் தடுக்க வேப்பிலையை அரைத்து பற்று போடுவதுண்டு இப்படி செய்வதன் மூலம் அவை விரைவாக மறைந்துவிடும். அதனால் வியர்க்குரு வரும் போதே இந்த வேப்பிலை வைத்தியம் தொடங்கிவிட்டால் போதுமானது.

சந்தனம்
சந்தனம் குளிர்ச்சி மிக்க பொருள். வியர்க்குரு வரும் இடத்தில் அரிப்பு மட்டுமல்லாமல் எரிச்சலும் உண்டாகும். அரிப்பு தாங்காமல் சொரியும் போது அதிகப்படியான எரிச்சலுக்கு உள்ளாவதுண்டு அதனால் ஓய்வு இருக்கும் போதெல்லாம் சந்தனத்தை உரைத்து வியர்க்குரு இருக்கும் பகுதியில் தேய்த்து வந்தாலே வியர்க்குரு வராமல் இருக்கும். சருமத்தில் எரிச்சலும் இருக்காது. எப்போதும் குளுகுளுவென இருக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் முகத்தில் சந்தனம் குழைத்து பூசிகொள்வது நல்லது. சந்தனத்தூள் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். அதனுடன் சிறிதளவு பன்னீர் கலந்து குழைத்து போடலாம்.

வெட்டிவேர்
வியர்க்குரு அதிகம் இருந்தால் வெட்டிவேரை சுத்தமான நீரில் ஊறவைத்து முகத்துக்கு க்ளென்சிங் செய்யலாம். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறும். இதே போன்று பன்னீரையும் பயன்படுத்தலாம். குளிக்கும் நீரில் வெட்டைவேரை சேர்த்து 3 மணி நேரம் ஊறவைத்து உடலை கழுவினால் வியர்க்குரு பிரச்சினை நீங்கும். வெட்டிவேர் பொடியுடன் பன்னீர் அல்லது கற்றாழை கலந்தும் உடலில் தேய்த்து குளிக்கலாம். இதை தடவி குளிக்கும் போது சோப்பு அவசியமில்லை. நாள் முழுவதும் உடல் முழுவதும் ஒருவித நறுமணத்தை உண்டாக்கும்.

நுங்கு
நுங்கு கோடைக்கேற்ற குளிர்ச்சி பொருள். நுங்கு அடிக்கடி உள்ளுக்குள் எடுக்கும் போது உடல் குளிர்ச்சிஅடையும். அதையே வியர்க்குரு இருக்கும் பகுதியில் பூசி குளித்தால் இரண்டே நாளில் வியர்க்குரு காணாமல் போகும்.
இதனோடு வெள்ளரிக்காய், இளநீர், பதநீர், தர்பூசணி போன்று தினம் ஒரு பழங்களை எடுத்துவந்தால் வியர்க்குரு பிரச்சினை தாக்காது. வியர்க்குரு வந்ததற்கு பிறகு மட்டுமல்ல வருவதற்கும் முன்பும் இந்த பராமரிப்பு செய்துவந்தால் நிச்சயம் வியர்க்குரு பிரச்சினை இல்லாமல் கோடையை கடக்கலாம்.

You must be logged in to post a comment Login