Astrology

வெற்றியை தீர்மானிக்கும் சூட்சும எண் 1, 5, 6

By  | 

“அதிர்ஷ்டம் என்பது எல்லோருக்கும், எப்போதும் அமையாது. உதவி என்பதும் எப்பொழுதும் அடுத்தவரிடம் இருந்து கிடைத்துக்கொண்டே இருக்காது. இறுதியாக உன்னிடம் மிஞ்சுவது உன் மேல் நீ கொண்ட தன்னம்பிக்கை மட்டுமே. உறவில் பிரிவு, நட்பில் விரிசல், பந்தத்தில் சந்தேகம், தோல்வி, விரக்தி என எதனை எதிர்கொண்டாலும் உன் மீதான நம்பிக்கையை மட்டும் இழந்து விடாதே” என்று சுய முன்னேற்ற பேச்சாளர்கள் பேசும் போது, அந்த பேச்சு கேட்பதற்கு மட்டும் இனிமையானவை அல்ல. அதனை கேட்டு உணரும் போது தான் அதன் உண்மை உரைக்கும்.

இன்றைய  திகதியில் எம்முடைய பெண்களில் பலரும், சிறிய தோல்வியை எதிர் கொண்டாலும் அதனை தாங்கிக் கொள்ள இயலாமல், கோபத்தின் உச்சிக்கே சென்று, திரும்ப பெற முடியாத வார்த்தைகளையும், செயல்பாடுகளிலும் ஈடுபடுகிறார்கள். இந்தத் தருணத்தில் அவர்களை மீட்பதில் எண் கணிதம் எண்ணற்ற வகையில், தன்னுடைய ஆதரவு கரங்களையும், ஆறுதலையும் நீட்டுகிறது.

இவர்கள் வெற்றியை நோக்கி பயணிக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு அதற்கான பாதையும், அதற்கான அடையாளமும் எதுவென்று தெரியாமல் ஒரே இடத்திலேயே தேக்கமடைந்து நிற்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் தம்மை சுற்றி இருக்கும் வெற்றி பெற்றவர்களை அவதானிக்கத் தொடங்குகிறார்கள். அவர்களின் வெற்றி ரகசியம் குறித்து ஆராய தொடங்குகிறார்கள். இது தொடர்பான அவர்களின் தேடலில் இறுதி வாய்ப்பாக அமைகிறது எண் கணிதம்.

என் கணிதம் பொதுவானது. ஆண்கள், பெண்கள் என்ற பேதம்  பார்க்காதது. பொதுவாக திருக்கணிதம், வாக்கியம், நாடி சோதிடம், கைரேகை என எந்த சோதிட ராசி பலன்களும் பெண்களுக்கென்று பிரத்யேகமான பலன்களை முன்னிறுத்துவதில்லை. அதேப் போல் பெண்களுக்கான பரிகாரம் மேற்கொள்ளும் போதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களைப் பொருத்தவரை திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு ஆகிய இந்த இரண்டு தருணங்களில் மட்டும்தான் பெண்கள் ஜாதகம் பார்க்கிறார்கள் அல்லது நல்லநேரம், நல்ல பெயர் வைப்பதற்காக பார்க்கிறார்கள்.ஏனையத்தருணங்களில் பெண்களில் பலர் சோதிடத்தை நம்புவதில்லை.ஏனெனில் அதுவும் ஒரு ஆணாதிக்கத்தின் அடையாளம் என்று எண்ணுகின்றார்கள்.

1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களுக்கும், 5, 14, 23 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களுக்கும், 6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களுக்கும் ஒரு தனிப்பட்ட திறன் இருக்கிறது என்பதை எண் கணிதம் உறுதிப்படுத்துகிறது. இவர்கள் எத்தகைய தருணத்திலும் உடனடியாக முடிவெடுக்கும் திறன் கைவரப் பெற்றவர்கள். இவர்களுக்கு வணிகம், வியாபாரம் தொடர்பான எண்ணங்கள் இருந்துகொண்டே இருக்கும். எந்த சூழலில் எந்த வியாபாரம் செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்பதில் இவர்களின் அவதானம் துல்லியமாக இருக்கும்.

அதே தருணத்தில் இவர்களின் பிறந்த திகதி, மாதம், ஆண்டு ஆகியவற்றின் கூட்டு எண் 1, 5, 6 ஆகியனவாகவும் இருந்துவிட்டால் இவர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதும், குடும்ப உறவு மேலாண்மையில் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதும் உறுதி. ,வர்கள் குடுமபத்தின் பணத்தேவையை தங்களுடைய துணைவரிடம் உணர்த்திக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் விரைவாகவும், விவேகமாகவும் செயல்படவில்லை என்றால், அதனை அவர்களிடமிருந்து சாதுரியமாக கைப்பற்றி, இவர்களின் உடனடி வணிக சிந்தனை மூலம், வியாபாரத்தில் ஈடுபட்டு, வருவாயை அதிகரிக்கவும் செய்வார்கள். ஆனால் இவர்களது கூட்டு எண் 1, 5, 6 என்று இல்லாமல் வேறு ஏதேனும்  இருந்தால், துணைவரின் உதவியை நாடுவார்கள்.

அதே தருணத்தில் 4, 13, 22 மற்றும் 9, 18, 27 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களுக்கும் வணிகத்திலும்,  வருவாய் ஈட்டுவதிலும் ஆர்வம் இருக்கும். ஆனால் ஆர்வம் மட்டுமே இருக்கும். அதனை சாத்தியப்படுத்துவதற்கான அறிகுறிகள் சற்று தாமதமாகத்தான் வரும் அல்லது சூழ்நிலைகளின் நெருக்கடியின் காரணமாக வரக்கூடும். ஆனால் இவர்களின் கூட்டு எண் 1, 5, 6ஆக இருந்தால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவாயை அதிகரித்துக் கொள்வார்கள்.

இத்தகைய திகதிகளில் பிறந்த சில பெண்களுக்கு 1, 5, 6 என்ற எண்ணுடன் தொடர்புடைய பெண்கள் அல்லது ஆண்கள் தூண்டுகோலாக திகழ்ந்தால், இவர்கள் வணிகத்திலும், வாழ்க்கையிலும் வெற்றி பெறுவார்கள்.

நீங்கள் தொடங்கும் வணிகம் அல்லது வியாபாரம், அது அழகு நிலையமாக இருந்தாலும் சரி அல்லது ஆடை, அணிகலன்கள், தையல்  உள்ளிட்ட சிறு, குறு தொழில்களாக இருந்தாலும் சரி உங்களுடைய வணிகத் தலங்களுக்கு அல்லது வணிக நிறுவனத்திற்கு வைக்கும் பெயர் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த பெயரில் தான் உங்களுக்கான வெற்றி அடங்கியிருக்கிறது.

நீங்கள் வைக்கும் பெயரின் கூட்டுத்தொகை 37, 33, 42, 15, 41, 50 ஆகிய எண்களாக இருந்தால்.. , நீங்கள் எதிர்பாராத அளவில் வெற்றி இருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

உங்களில் சிலர், இந்த எண்களில் பிறக்காத பெண்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவில்லையா? அவர்களின் வெற்றிபெற்ற ரகசியம் என்ன? என்ற எண்ணம் எழும். அவர்கள் ஏதேனும் ஒரு வகையில் இந்த 1, 5, 6 ஆகிய எண்ணுடன் தொடர்புடையவர்களாகவே இருப்பார்கள். அந்தத் தொடர்பு தற்காலிகமாக அல்லது வணிக ரீதியாகவும் இருக்கக்கூடும்.

எனவே பெண்களாகிய நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால்.. , அதற்கு பணம் தான் பிரதான வழி என்று நீங்கள் உறுதியாக கருதினால், நீங்கள் தொடங்கவிருக்கும் வெற்றிப்பாதையை எண் கணிதம் மூலம் தெரிந்து கொண்டு, அதில் பயணித்தால் வெற்றி பெறுவது உறுதி. ஏனெனில் எண் கணிதம் என்பது உங்களது வெற்றிக்கான, நீங்கள் வெற்றி பெறுவதற்கான ரகசிய சூத்திரத்தை மட்டுமே உங்களுக்கு உணர்த்தும். அதனை உள்வாங்கி கொண்டு, நீங்கள் தான் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் பயணிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியை, வெற்றியை மட்டுமே சாத்தியப்படுத்தலாம்.

தொகுப்பு: ராணி தாசன்.

 

You must be logged in to post a comment Login