Others Poetries

வேண்டுமோ ஓர் மகளிர் தினம்?

By  | 

வியர்வை சிந்தி உழைத்தும்
வியர்வைக்காய் லழங்க வேண்டிய
வேதனங்கள் வனிதையருக்கு
வழங்காத வரையில்!

கொழுந்து பறிக்கும் குடும்பப் பெண்ணுக்கும்
குடிசையில் வாழும் முமரிப் பெண்ணுக்கும்
வருடங்கள் கடந்தும் இன்னும்
விடிவே இன்றி வாழும்
வனிதையருக்கு வாழ்வில்
விடிவே ஏற்படாத வரையில்!

மாடாய் உழைக்கும்
ஓடாய் தேய்ந்தும்
மாது அவளின் மதிப்பும்
மரியாதையும் பறிக்கப்பட்டு
வாய் மூடி மௌனியாக்கப்பட்டு
மௌனப் பூட்டிட்டு
மூலைக்குள் இவள் இன்னும்
அடைக்கப்பட்டு இருக்கும் வரையில்!

அடுப்பங்கரையில் இடுப்பொடிய வேலை செய்து
அரைவயிற்றுக்கேனும் கஞ்சி காச்சி
அமைதியாய் குடிக்க வழியின்றி
அடாவடித் தனங்களால் அடிமையாக்கப்பட்டு
அடிப்பட்டு அல்லல்ப்பட்டு அடிமைகளாய்
இன்னும் வாழும் அரிவையரின்
அவல நிலை நீங்காத வரையில்!

காலா காலமும் குடிகார
கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு
கோபத்தால் தாக்கப்பட்டு
கண்ணீரும் கம்பலையுமாய்
காலத்தை கழிக்கும் காரிகையர் வாழ்வில்
நல்வாழ்வு கிடைக்காதவரையில்!

வயல்வளிதொட்டு
விண்வெளி வரையில்
வணிதையர் பெயர்
கொடிக்கட்டி பறந்தாலும்
விடிவுகள் ஏதும் இன்றி
வீட்டுக்குள் வாழும்
வனிதையர் இருக்கம் வரையில்!
வீட்டிலும் வெளியிலும்
வீதியிலும் பேருந்து சாலையிலும்
வஞ்சியரவர் அனுபவிக்கும்
சொல்லொண்ணா துயரங்கள்
தூர விலகாத வரையில்!

பச்சிளம் பாலகியும்
பருவம் வந்த பெண்ணும்
பாட்டி கிழவியும் பட்டபகலிலும்
இரவிலும் முழு சுதந்திரமாய்
தினமும் திரியும் காலம்
கிடைக்காத வரையில்!

கொடும் பாவிகளின்
கோரப் பார்வைகளால்
கொல்லப்பட்டும் அவர்கள்
கைக்குள் அகப்பட்டு
கைக்குழந்தையும்
கைம்பெண்ணும்
சின்னஞ்சிறு பாலகரும்
சின்னாப் பின்னப்படும்
பாடுகள் பாரினில்
நீங்காத வரையில்
பாவையருக்கு வேண்டுமோ
ஓர் மகளிர் தினம்…!

வி.ஏ.வசந்தராணி
காரைதீவு

You must be logged in to post a comment Login