Articles

வேஸ்‍டிங்கில் முன்னிற்கும் நாம்…

By  | 

போஷாக்கின்மையால் ஏற்பட்டுள்ள

வளர்ச்சிக் குறைபாடு – பகீர் அறிக்கை

கொரோனா வைரஸ் குறித்து நமது கவனம் திரும்பியுள்ள சூழலில்| இலங்கை பற்றிய முக்கிய புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையொன்று எமது பார்வையிலிருந்து பெரிதும் தப்பியுள்ளது.

கர்ப்பிணித்தாய், புதிதாகப் பிறந்த குழந்தை போசாக்கின்மை தொடர்பானதே இந்த அறிக்கை.

ஊட்டச்சத்து தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து ஆராய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடிப்பமையாகக் கொண்ட இந்த அறிக்கை இலங்கையில் போசாக்கின்மை இன்னமும் பாரிய பிரச்சினையாக காணப்படுவதை வெளிப்படுத்தியுள்ளது.

பல தசாப்த காலமாக உலகின் மிகச் சிறந்த சுகாதார முறையை இலங்கை கொண்டுள்ளது. குறைந்த செலவில் சிறந்த ஆரோக்கிய நிலையை இலங்கை ஏற்படுத்தியுள்ளது. சராசரி ஆயுட்காலம் 2016இல் 75ஆகக் காணப்பட்டது. இது தென்னாசியாவிலேயே முதன்மை நிலையாகும். கர்ப்பிணித்தாய், பிறந்த குழந்தைகள் போன்ற புள்ளிவிபரங்களிலும் இலங்கை சிறந்த நிலையில் காணப்படுகின்றது என தெரிவிக்கும் அந்த அறிக்கையை உலக வங்கி, யுனிசெப், ஐ.நா உட்பட பல சர்வதேச அமைப்புகள் இணைந்து தயாரித்துள்ளன.

எனினும், இந்தப் புள்ளிவிபரங்களை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியடையும் நிலையில் இலங்கை இல்லை. இன்னமும் பல பிரச்சினைகள் உள்ளன என்கின்றன, இந்த அறிக்கையைத் தயாரித்த சர்வதேச அமைப்புகள்.

போஷாக்கின்மை, ஊட்டச்சத்தின்மை இன்னமும் தீர்வு காணப்படாத விடயமாகவே உள்ளது. கடந்த ஒரு தசாப்த கால பகுதியில் இலங்கை இந்த விடயத்தில் முன்னேற்றத்தை நோக்கி நகரவில்லை.

சிறு வயதில் மோசமான ஊட்டச்சத்தின்மையால் ஏற்படும் வளர்ச்சிக் குறைவு என்பது 2006 முதல் 2016 வரையான காலப்பகுதிக்குள் தொடர்ந்தும் 17 வீதமாக காணப்படுகின்றது.

இலங்கையில் ஐந்து வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான பிரதான காரணியாகவும் போஷாக்கின்மை காணப்படுகின்றது.

சர்வதேச அமைப்புகள் இணைந்து தயாரித்துள்ள அறிக்கை ‘வேஸ்டிங்’ என அழைக்கப்படும் ‘உயரத்துக்கு ஏற்ற எடையின்மை’ குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளது.

உயரத்துக்கு ஏற்ற எடை என்ற விடயத்திலும் இலங்கை முன்னோக்கி நகரவில்லை. ஐந்து வய துக்கு உட்பட்ட குழந்தைகளில் இது 15.1 வீதமாகக் காணப்படுகின்றது.

சர்வதேச குறிகாட்டிகளைப் பொறுத்தவரை இது சிறப்பான நிலையில்லை என தெரிவித்துள்ளது, உலக சுகாதார ஸ்தாபனம். இலங்கையில் ஐந்து மாத குழந்தைகள் மத்தியில் உயரத்துக்கு ஏற்ற எடையின்மை அதிகமாக காணப்படுகின்றது. இதேபோன்று 18 முதல் 23 மாத குழந்தைகள் மத்தியிலும் இந்த நிலை காணப்படுகின்றது.

இலங்கையின் எந்த மாவட்டங்கள் இந்த பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன என்ற கேள்விக்கும் சர்வதேச அமைப்புகளின் அறிக்கை பதிலளித்துள்ளது.

மொனராகலயில் இந்தப் பாதிப்பு அதிகமாக காணப்படுகின்றது. அதேபோன்று முல்லைத்தீவு, அம்பாந்தோட்டையிலும் இந்த நிலை காணப்படுகின்றது.

இலங்கையில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நோய் அபாயத்தை எதிர்கொள்வதற்கான பிரதான காரணியாக ஊட்டச்சத்தின்மை காணப்படுகின்றது.

இது குழந்தை பருவத்திலும் இளமை பருவத்திலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாக காணப்படுகின்றது.

குழந்தைகள் மத்தியில் எடை அதிகரிப்பு என்பது புதிய பிரச்சினையாக உள்ளபோதிலும் கவலையளிக்கும் விதத்தில் அது காணப்படாததும் அறிக்கை மூலம் புலனாகியுள்ளது.

இலங்கையில் போஷாக்கின்மை, வளர்ச்சியின்மை என்பது குடும்பங்களின் வருமானத்தைப் பொறுத்த விடயமாக காணப்படுகின்றது.

புதிதாய் பிறக்கின்ற குழந்தையின் இறப்பைத் தடுப்பதில், தாய்ப்பால் ஊட்டுவது முக்கியமானது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். இலங்கையில் இந்த விடயத்தில் சாதகமான போக்குகள் காணப்படுகின்றன என தெரிவித்துள்ளது சர்வதேச அமைப்புகளின் அறிக்கை.

எனினும், முதல் 23 மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகளில் 38 வீதமான குழந்தைகளுக்கு பல்வகைத்தன்மையான உணவுகள் மற்றும் உணவுகள் கிடைக்கின்ற தொடர்ச்சி அடிப்படையில் பார்க்கும்போது போதிய உணவுகள் கிடைப்பதில்லை என்பதும் கவலையை அளிக்கின்ற இன்னொரு புள்ளிவிபரமாக காணப்படுகின்றது.

தொடர்ச்சியாக உணவுகள் கிடைப்பதை விட பல்வகைத்தன்மை கொண்ட உணவுகள் கிடைப்பது இலங்கையில் குறிப்பிட்ட வீதமான குழந்தைகளுக்கு முக்கிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

6 முதல் 23 மாத குழந்தைகளில் நாளில் ஒரு குழந்தைக்கு இவ்வாறான உணவுகள் கிடைப்பதில்லை.

தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்போது வேலை பார்க்கும் தாயின் குழந்தைக்கு மிகக் குறைந்தளவு பல்வகைத் தன்மை கொண்ட உணவே கிடைக்கின்றது என்பது தெரியவந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் கவனத்தில் எடுக்கப்படவேண்டிய விடயமாக உள்ளது.

போஷாக்கின்மை ஊட்டச்சத்தின்மை என்பது பெண்களை, கர்ப்பிணித்தாய்மார்களை எப்படிப் பாதிக்கின்றது?

2015இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்போது 31 வீதமான கர்ப்பிணித்தாய்மார்கள் இரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இரத்தினபுரியில் இது 60 வீதமாகக் காணப்படுகின்றது.

சர்வதேச அமைப்புகள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, நாங்கள் அதிகம் கவனம் செலுத்தாத மற்றுமொரு விடயம் குறித்தும் பேசியுள்ளது.

ஊட்டச்சத்து தொடர்பான நடவடிக்கைகளுக்காக போதியளவு நிதியை அரசாங்கம் ஒதுக்கிவருகின்றதா என்பதே இந்த விடயம்.

பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஊட்டச்சத்துக்காக இலங்கை குறைந்தளவு நிதியையே ஒதுக்குகின்றது என்ற விடயத்தையும் இந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளைவிட இலங்கை ஊட்டச்சத்து என்ற விடயத்துக்காக குறைந்தளவு நிதியையே ஒதுக்குகின்றது என்பது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயம்.

ஊட்டச்சத்து தொடர்பான விடயங்களில் முதலீடு செய்வது இலங்கையில் 2015க்கு பின்னர் குறைவடைந்து வந்துள்ளது என்ற உண்மையும் இந்த அறிக்கையின் மூலம் வெளியாகியுள்ளது.

இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களிடம் ஊட்டச்சத்து தொடர்பான நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி குறித்த போதிய தரவுகள் இல்லை என்ற உண்மையும் வெளியாகியுள்ளது.

– காஸ்ட்ரோ

You must be logged in to post a comment Login