Articles

ஸ்மார்ட்ஃபோன்களால் மரணிக்கும் பதின்ம வயதினர்

By  | 

சமூக ஊடகப்பாவனை மன அழுத்தங்களை உருவாக்குகின்றது என தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஆய் வொன்று ‘இந்தப் பிரச்சினை நாங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிகமானது’என தெரிவித்துள்ளது.

கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் ஸ்மார்ட் ஃபோன்கள் – சமூக ஊடகங்கள் பாவனைக்கும் பதின்ம வயதினரின் உளப்பாதிப்புகளுக்கும் அவர்கள் மத்தியில் தற்கொலை முயற்சிகள் அதிகரிப்பதற்கும் தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது.

கனடாவின் பல பகுதிகளில் பதின்ம வயதினரின் தற்கொலை முயற்சிகள் அதிகரித்துவந்த ஒரு சூழ்நிலையிலேயே இந்த தற்கொலைகளுக்கு என்ன காரணம் என்பதை கண்டறிவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட மருத்துவக் குழுவொன்று சமூக ஊடக- ஸ்மார்ட்ஃபோன் பாவனைப் பயன்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அவ்வேளையே சமூக ஊடக பாவனைக்கும் தற்கொலை முயற்சிகளுக்கும் மன அழுத்தங்களுக்கும்; இடையிலான தொடர்புகள் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்துள்ளன. கனடாவின் சில பகுதிகளில் பதின்ம வயதினர் மத்தியில் மிதமான மற்றும் மோசமான உளவியல் அழுத்தங்கள் அதிகரித்துள்ளமைக்கு சமூக ஊடக பாவனையும் ஸ்மார்ட்ஃபோன் பாவனையுமே காரணம் என இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

2017இல் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் சமூக ஊடகப்பாவனைக்குப் பின்னர் மன அழுத்தங்களை சந்தித்த பதின்ம வயதினரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது என இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்ஃபோன் மற்றும் சமூக ஊடகப்பாவனைகளே தற்கொலை மற்றும் தமக்குத்தாமே காயங்களை ஏற்படுத்திக்கொள்வதற்கும் காரணமாக அமைந்துள்ளது என இந்த ஆய்வினை முன்னெடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பாதிப்பு யுவதிகள் மத்தியிலேயே அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதும் மிக முக்கியமான விடயம்.

பதின்ம வயதினர் சமூக ஊடகங்களையும் ஸ்மார்ட்ஃபோன்களை யும் பயன்படுத்துவது அதிகமாகிக்கொண்டு வருகின்ற நிலையில் அவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளும் அதிகமாகின்றன என்கின்றனர், ஆய்வினை மேற்கொண்ட வர்கள். இதேவேளை சமூக ஊடக பாவனை பதின்ம வயது பெண்களின் உள ஆரோக்கியத்துக்கு கடும் பாதிப்பினை ஏற்படுத்தலாம் என்பது,லான்செட் குழந்தைப்பருவ மற்றும் இளம்பருவ ஆரோக்கியம் எனும் பிரபல சஞ்சிகை மேற்கொண்ட ஆய்வின் மூலம் புலனாகியுள்ளது.

இங்கிலாந்தின் 13 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 10 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவினை லான்செட் சஞ்சிகை வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் யுவதிகள் எதிர்கொள்ளும் விடயங்கள் அவர்களின் உறக்கத்தையும் உடற்பயிற்சியையும் குறைக்கின்றது என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.சமூக ஊடகங்களை அதிகளவுக்கு பயன்படுத்துவதால் இரு பாலாரும் கடும் உளவியல் அழுத்தங்களுக்கு உள்ளாவதை இவ்வாய்வு வெளிப்படுத்தி யுள்ளது.

எனினும், இளம் பெண்களின் மத்தியில் இந்தப் பாதிப்பு வெளிப்படையாக தென்படுகின்றது.அவர்கள் எவ்வளவுக்கு, எவ்வளவு தூரம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றார்களோ, அந்தளவுக்கு பாதிப்பும் காணப்படுகின்றது.

அதிகளவு சமூக ஊடகங்களை பயன்படுத்தும் யுவதிகள் அதிகளவுக்கு உறக்கத்தையும் உடற்பயிற்சியையும் இழந்தவர்களாக காணப்படுகின்றனர். இது இவர்களின் உளநிலையில் பாதி;ப்பை ஏற்படுத்துகின்றது.

சமூக ஊடகங்கள் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், தொடர்ச்சியாக அவற்றை பயன்படுத்துவது அவர்களின் உளநிலையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விடயங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளார், அந்த ஆய்வினை மேற்கொண்ட ரசெல் வைனர்.இதேவேளை தொடர்ச்சியான சமூக ஊடக பாவனை இளம்வயதினர் ஆபத்தான, தீமையான உள்ளடக்கங்களுக்கு அறிமுகமாகும் ஆபத்தை உருவாக்குகின்றது என தெரிவித்துள்ள அவர், ‘இணையத்தில் துன்புறுத்தல் என்ற விடயத்தையும், யுவதிகள் எதிர்கொள்ள நேரிடுகின்றது, இது அவர்களுக்கு எதிர்மறையான உணர்வுகளை ஏற்படுத்தலாம்’எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களை நேரடியாக குற்றம் சொல்ல முடியாது. நாங்கள் அவற்றை பயன்படுத்துகின்ற விதமே பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளது என்ற கருத்தும் வெளியாகியுள்ளது.

ஆரோக்கிய வாழ்க்கை முறைகளை உருவாக்கி, சமூக ஊடக வன்முறைகளை கட்டுப்படுத்த முடியுமென்றால், சமூக ஊடகங்களின் மூலம் கிடைக்கக்கூடிய சாதகமான பலாபலன்கள் அதிகளவில் கிடைக்கலாம் என தெரிவித்துள்ளார் பெல்ஜியம் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர்.

– காஸ்ட்ரோ

You must be logged in to post a comment Login