Stories

By  | 

 

மேக்னா ஷர்மா. தேவதை அவள். டேலியா, பனித்துளி, பூஸ்குட்டி, கிளிக்குஞ்சு, சிட்டுக்குருவி, துளசிச்செடி, போட்டோக்ரபி என்று ஒரு சொர்க்கத்துக்குள் வாழ்ந்துகொண்டிருந்தாள். அதிகாலை தியானம் அவளை மேலும் அழகாக்கி இருந்தது. அவளைப் பொறுத்தவரை தேநீரைத் தயாரிப்பதை விட அதைப் பருகுவது என்பது ஒரு அழகான கலை. வலப்பக்கமாக கைப்பிடியினை திருப்பி அதற்குள் இரு விரல்களைச் செலுத்தி, மெல்ல வாசனை முகர்ந்து, ஊதி ஊதி ஆவியினை விலத்தி, ஓரம் முழுவதும் பரவியிருக்கும் குமிழ்களை குலோசப்பில் ரசித்து ரசித்து அலையெழுப்பாமல், உறங்கும் குழந்தைக்கு உதட்டில் முத்தமிடுவதைப் போல தன் ரோஸ் உதடுகளால் உறிஞ்சும் அழகே ஒரு டீ விளம்பரப்படம் போல இருக்கும். அருண் மொழியின் புல்லாங்குழலிசை போல அத்தனை மெலிதாக பேசுபவளுக்கு, அக்நியை கண்டதுமே பொசு பொசுவென வந்தது.

“அடேய் கடங்கார நாயே உன்னாலதாண்டா எனக்கிந்த நிலைமை” என்று C செக்ஷன் அதிர கத்தினாள்.

“ஓ அப்போ மட்டும் நல்லா இருந்துச்சா?” என்ற நர்சின் உடனடி நக்கலுக்கு அழுகையினூடே குபுக்கென்று சிரித்துவிட்டு “கோபாலு, இங்க கொஞ்சம் வாயேன்” என்று மெலிதாகக் கூப்பிட்டாள். மேக்னா காதலில் அவனை அப்படித்தான் கூப்பிடுவாள். அக்நியின் நிஜப்பெயர்கூட கோபால்தான். கோபால் எழுதிய நாவல், கோபால் எழுதிய சிறுகதை என்றால் யாரும் வாசிப்பதில்லை என்பதினால் அக்நி என்ற பெயரில் எழுதிக்கொண்டிருக்கின்றான். கொஞ்சம் அவசரக்காரன். திருமணம் முடித்து ஆறே மாதத்தில் மேக்னாவை ஒன்பது மாதம் பன்னிரண்டு நாட்களாக்கியிருந்தான்.

“வலி தாங்காமல் திட்டிட்டேன், sorry baby. இன்னொரு கல்யாணம் செஞ்சிக்குவியாடா?” என்று கண்கலங்கினாள்.

“அடிப்பைத்தியக்காரி. நீ என் உசுருடி, நீ இல்லாம நான் மட்டும் இருப்பேன்னு நெனைச்சியாடி” என்று அவளை அணைத்துக்கொண்டான்.

அக்நியின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

போலிக் அசிட் கொண்ட அல்லது இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டிருந்தால் கூட சிசேரியனுக்கு வந்திருக்காது. ஆனால், மேக்னாவுக்கு CPD செப்பலோ பெல்விக் டிஸ்ப்ரபேஷன் இருந்தது. கர்ப்பப்பை எலும்பின் வாய்ப்பகுதி சிறியதாக இருந்தது. கண்டிப்பாக, சிசேரியன்தான் என்று டொக்டர் குணவர்தன் சொல்லியிருந்தார். கூடவே GDM என்கிற சர்க்கரை அளவில் கொஞ்சம் இருப்பதனால் நிச்சயம் குழந்தை கொஞ்சம் பெரிதாக இருக்கும். அத்தோடு பிளசண்டா ப்ரீவியா என்ற நச்சுக்கொடி பிரச்சினை வேறு இருப்பதனால் கண்டிப்பாக சிசேரியன்தான். “என்ன அக்நி பயப்படுறீங்களா” என்றார்.

“இல்ல டொக்டர், நாங்க வேற காஸ்ட், அவ வேற காஸ்ட். எனக்கு மேக்னா மட்டும்தான்…”

“கூல்… இது எனக்கு எண்பதாவது சிசேரியன். நான் உங்களை மாதிரி பயப்படுறனா பாருங்க” என்று டொக்டர் மட்டும் சிரித்தார்.

கர்ப்பகாலத்தில் பொண்டாட்டி வயிற்றை தொட்டுத் தொட்டு பார்க்கிறது சொர்க்கம் என்றால், அவளை பிரசவத்துக்கு ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துவிட்டு வார்டுக்கு வெளியே வலிக்க வலிக்க காத்திருக்கிறது நரகம் மாதிரி தோணுச்சு. வெள்ளையோ கருப்போ, ஆணோ பெண்ணோ ஆண்டவா, என் புள்ளையும் பொண்டாட்டியும் ஆரோக்கியமா இருந்தாலே போதும் என்று மாடனை கும்பிட்டுக்கொண்டான். இதோ இன்னும் அரை மணித்தியாலத்தில் நான் அப்பாவாகப் போகிறேன் என்ற நினைப்பு வந்து வந்து நெஞ்சைக் கிள்ளியது. ஒரு மாதிரி கூசுவது போல உணர்ந்தான்.

தன் அப்பாவை நினைத்துப் பார்த்தான். இப்போது வரை இருக்கிறாரா, இறந்துவிட்டாரா என்றுகூடத் தெரியவில்லை. எப்போதாவது “அரசே, காணாமல் போனவர்களை கண்டுபிடித்துக்கொடு” என்ற பதாதைகளை தூக்கிக்கொண்டு கிளிநொச்சியில் வருடம் மூன்று முறை நடக்கும் போராட்டத்தில் தவறாமல் பங்குகொள்வான். அங்கு யாராவது ஒரு தோழர் மைக்கை பிடித்துக் கொண்டு ‘மிஸ்டர் அக்நி, உங்களை டொக்டர் கூப்பிடுறார்’ என நர்ஸ் நின்றுகொண்டிருந்தாள்.

அரக்கப்பறக்க டொக்டர் அறைக்குள் நுழைந்தபோது, “கங்கிராஜுலேஷன்… உங்களுக்குப் பையன் பிறந்திருக்கான்” என்றார். “எங்கப்பா திரும்ப வருவாருன்னு எனக்குத் தெரியும் டொக்டர், என் வைஃப் எப்டிருக்காள்?”

“ஷீ இஸ் ஃபைன், பார்க்கலாம் உக்காருங்க, மிஸ்டர் அக்நி. பிரசவம்கிறது ஒரு பெண்ணுக்கு…”

“டொக்டர் அவளுக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சா? நான் பார்க்கலாமா?”

“ஸ்ஸூர்… அதுக்கு முதல்ல, வார்டுக்கு எப்ப டொக்டர் கொணர்வீங்க? அனீமியா ஏதும் வருமா?”

“கூல் மிஸ்டர் அக்நி, பத்துமாசம் பொறுத்துட்டிங்க,”

“டொக்டர் ஒன்பது மாதம் பன்னிரண்டு நாள் நாலு மணித்தியாலம் இருபத்தஞ்சு நிமிஷம் பன்னெண்டு செக்கன்” என்றான்.

சிரிப்பும் கோபமும் ஒருமிக்க வந்தது.

“சீ அக்நி, இந்த ஹொஸ்பிடல்கென்று சில ரூல்ஸ் இருக்கு. ஒவ்வொரு டெலிவரிக்குப் பின்னாலும் கணவன்மார்கள் இங்கு இருக்கிற மெஷின் ரூம்குள்ள டென் மினிட்ஸ் இருந்தாகணும்…”

“அதலாம் டென் டேய்ஸ்கூட இருந்துக்கலாம், மேக்னாவை ஒரு வாட்டி பார்த்துட்டு…”

“ப்ளீஸ் சிட்டவுன் அக்நி”

அக்நிக்கு இருப்புக்கொள்ளவில்லை, பூச்சி முண்டியது.

“நேர்வஸ் ஆகாதிங்க, ஒரு டெலிவரிக்குப் பிறகு ஒரு ஆண் தெரிஞ்சிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம் அந்த அறைக்குள்ளே இருக்கு. அதற்குள்ளே நீங்க போனீங்கன்னா நீங்க கற்பனையில் நினைச்சு பார்க்க முடியாத பல விஷயங்கள் உங்களுக்குப் புரியும்.”

அக்நிக்கு கிட்டத்தட்ட கிறுக்கே பிடித்துவிட்டது. “அப்படினா எங்க அப்பாவைப் பார்க்க முடியுமா டொக்டர்” என்றான். டொக்டருக்கும் பிடித்துவிடும் போல இருந்தது.

“இலங்கையில் மட்டும்தான் இந்த இயந்திர அறை இருக்கிறது. இதுல இருக்கிற இன்னொரு ஸ்பெஷல் என்னன்னா நீங்கதான் இந்த அறைக்­குள்ளே போகப்போகின்ற நூறாவது ஆள். ஒரு அசல் உலகத்துக்கான அஸ்திவாரம் தான் இந்த அறை. ஆனால், ட்ரெஸ்ஸ கழற்றணும்”

“ஐயயே என்னாதீது…”

“உங்க வைஃப்ப பார்க்கணுமா வேணாமா?” உடனடியாக அம்மணமாகினான். அறைக்குள் தள்ளி கதவடைத்தார்.

கும்மிருட்டாக இருந்தது. எத்தனை நீளம், அகலம், உயரம், ஆழம் எதுவுமே தெரியவில்லை. திக் திக்கென்று நெஞ்சடைத்து எச்சில் விழுங்கினான். பயம் உடலெங்கும் பரவி கூதலடித்தது. அடர்வனத்துக்குள் தனியே தொலைந்துபோனவன் போல பயந்து நடுங்கினான். வியர்த்து வழிந்தது. அவனின் பின்னால் ஏதோ ஒன்று நெருங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்து திரும்பிப்பார்க்கும் செக்கனில் ‘தடார்’ என்று மண்டையில் ஏதோ ஒன்று தாக்கி கண்ணில் மின்னல் மின்னி ஒரு புதைகுளிக்குள் தொப்பென்று மயங்கி விழுந்தான்.

நிமிடம்…

மணித்தியாலம்…

நாட்கள் சில நகர்ந்த பின்னர் மெலிதாகக் கண் திறந்தான். அவனின் பெயர்கூட மறந்து போய் இருந்தது. மெல்ல எழும்ப எத்தனித்து வலுவிழந்து வழுக்கி விழுந்தான். பசை போன்ற பிசுபிசுப்பான திரவத்தால் அந்த அறை நிரம்பியிருந்தது. தலை மூழ்கும் பசை நீரில்கூட அவனுக்கு மூச்சுவிட வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

‘யார் நான்?’ சுத்தமாக மறந்து போயிருந்தான். ‘யாரால் இங்கு வந்தேன்’ ஞாபகமில்லை. எழுபது கிலோவில் இருந்த அக்நி இரண்டு கிலோவாகியிருந்தான். இருநூற்றென்பது நாட்களில் இயந்திர அறை அவனை அப்படி மாற்றியிருந்தது.

தொட்டுப் பார்த்தான். அறையின் சுவர் அங்குமிங்கும் அசைந்தது. இடம் நெருக்கி தன் பலம் முழுவதையும் திரட்டி சுவரை எத்தியபோது அறையின் வெளியே யாரோ ஒருத்தி தொண்டை கிழிய அலறினாள். ஓர் உயிரின் அதிகபட்ச அழுகை அது. உருண்டு பிரண்டு அங்குமிங்கும் திரண்டபோது அங்கே தூரத்தில் ஒரு சின்னத் துவாரம் தெரிய, விருட்டென்று அதற்குள் தலைவிட்டு வெளியேற முயற்சித்தபோது, ஒரு கிழட்டுக் கை அவன் தலையை வெளியே இழுத்தெடுத்து தலைகீழாக தொங்க விட்டு முதுகில் தட்டி “ஏலே லிங்கம், உனக்குப் பையன் பிறந்திருக்கான்” என்று அந்தக் கிழவி சொன்னாள். கோபால் என்று கூப்பிட்டார் அக்நியின் தந்தை.

-லிங்க் சின்னா

You must be logged in to post a comment Login