Poetries

By  | 

சித்திரைப் பெண்ணே!

சித்திரைப் பெண்ணே
சீருடன் வரவேற்க இன்று
மனம் ஏற்கவில்லை.
ஏனிந்த நிலைதனை
மாந்தர்க்கு தந்தாயோ
நானறியேன்
கடந்த காலங்களில்
உன்னை
சீருடனும் சிறப்புடனும்
வரவேற்றோம்.
இந்த ஆண்டு சீர்குலைந்து
நிர்கதியாய் நிக்கும் எமை
நீ தான் காக்க வேண்டும்
சித்திரைப் பெண்ணே..

– விஜி, பிரான்ஸ்.

ΟΟΟ

சார்வரி புதுவருடம்

முழு உலகும்
இருளில் மூழ்கிப் போக
இராப் பொழுதில் மலர்ந்தது
சார்வரி புதுவருடம.

கொண்டாட்டங்கள் கூத்துகள்
விளையாட்டு என வருடா வருடம்
வான வேடிக்கையாய்
புதுவருடம் கலைகட்ட

இம்முறை…

முக கவசம் அணிந்து
வீட்டுக்குள்ளே
வினோதமாய் முடங்கிப் போக
கொரோனா எனும்
கொடியவனின்
கோரத்தாண்டவத்துடன்
பிறந்தது புது வருடம்

பல்லாயிரக்கணக்கான உயிர்கள்
பலியாகி போக
பசி, பட்டினி, பஞ்சம் என
பணக்காரன் முதல் பாமரன் வரை
பரிதவித்து நின்றவேளை..

நிலவின் ஒளியில்
சார்வரி என
பிறந்தது புது வருடம்

சமூக இடைவெளியுடன்
சார்வரி புதுவருடத்தை
சாந்தமாய் கொண்டாடுவோம்.

இனியேனும்
எம்மக்கள்
இந்தப் பிரபஞ்ச விதியை
புரிந்து கொள்வதற்கு
மயான அமைதியில்
பிறந்தது புது வருடம்.

குறுகிய கால அனுபவத்தில்
மக்கள் கற்றுக் கொண்ட
பாடங்கள் ஏராளம்…

கொரோனா எனும்
காலனை வதம் செய்து
தரணி வாழ் மக்களை
காக்கும் வருடமாய்
சார்வரி வருடம்
அமைய வேண்டும்..

அன்புடன் ,
M. விபூர்ஷனா – கொழும்பு.

ΟΟΟ

இனிய சார்வரி வருட வாழ்த்துக்கள்

அதிகாலை பூமியில் முதியோர் நடமாட்டம்
மைதானமெங்கும் இளைஞர்கள் கூட்டம்
சாலை ஓரத்தில் இளநீர் சந்தை
தேநீர் கடையில் தேய்ந்த வானொலி

பேரூந்தில் வழியும் அலுவலக  எரிச்சல்கள்
பிரச்சார வீதிகளில் மக்கள் வெள்ளம்
பூங்காவில் ஆங்காங்கே காதல் பூக்கள்
எந்தக் கல்லூரியில் யாரை தெரியும்
தலைச்சுற்றும் ஆராய்ச்சியில் பெற்றோர்கள்

ஆவிக்குள் தீப்பிடிக்கும் ஆதவனின் வெப்பம்
கல்யாண வீடுகளில் இன்பமாய் இரைச்சல்கள்
ஒவ்வொரு குடிமகனும்  ஒவ்வோர் உணர்ச்சியில்

ஓடிக்கொண்டிருக்கும் இத் தருணத்தில்
கொரோனா எனும் வைரஸ்
வைத்த முற்றுப்புள்ளியில்….
முடங்கி கிடக்கும் எம்மவருக்கு
இனிய சார்வரி வருட வாழ்த்துக்கள்

– பி.கீர்த்தனா,
தங்கலை, லிந்துலை.

ΟΟΟ

You must be logged in to post a comment Login