Antharangam

ஆபாச படங்களை எப்படி புரிந்துகொள்வது?

By  | 

உலகளவில் 70% பேரிடம் ஸ்மார்ட்ஃபோன்கள் இருக்கின்றன. நம் நாட்டிலும் இவற்றின் பயன்பாடுகள் அதிகம். இந்த ஸ்மார்ட்ஃபோன் பயனாளிகளில் பாதிக்கு மேற்பட்ட சதவீதத்தினர் ஆபாசப் படங்களின் ரசிகர்கள்.

ஆபாசப் படங்களில் பலவகை உண்டு. ஆனால், சினிமாவில் சுற்றுக்கு வருவது என்னவோ ஒரே மாதிரியான படங்கள்தான். அதிலும் இந்தப் படங்கள் பலவும் ஆண்களைக் குறியாக வைத்து எடுக்கப்படுபவை.

இதில் பெண்கள் வெறும் பொம்மைகள். உலகளவில் பெண்களுக்கு என்றும், இளைஞர்களுக்கு என்றும் இன்னும் பல வகை வகையாக ஆபாசப் படங்கள் வெளியாகின்றன. ஆனால், நாம் காணும் சினிமா படங்கள் ஆண்களை வக்கிரக்காரர்களாக மாற்றக்கூடியது.

அது அவர்களை பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களை செய்யத் தூண்டக்கூடியது என்று ஒரு தரப்பினர் சொல்ல, வன்முறையான திரைப்படங்கள் ஒருவரை வன்முறையாளராக மாற்றுவதற்கான ஆதாரம் எதுவுமில்லை என இன்னொரு தரப்பினர் சொல்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக உளவியல் ஆய்வாளரான சஃபி கூறுகையில்,

‘‘உலகளவில் பெரிய தொழிலாக மாறிவிட்டது ஆபாசப் படங்கள். அப்படியென்றால், உலகில் உள்ள எல்லோருமே மனப்பிறழ்வு அடைந்துவிட்டார்கள் என்று சொல்லமுடியுமா என உறுதியாக சொல்வதற்கில்லை. ஆபாசப் படங்கள் ஒரே மாதிரி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை ஒருவர் எத்தனை காலத்துக்குத்தான் பார்த்துக்கொண்டிருப்பார் என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.

குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இப்படங்களைத் தவிர்க்கும் மனப்பான்மையையே பலரும் கொண்டிருப்பார்கள்… என்றார். சஃபி.

அந்த காலத்தில் ஆங்கிலப் படங்களை பார்க்க பெண்களுக்கு அனுமதியில்லை. காரணம், அதில் ஆபாசம் இருக்கும் என்ற  நம்பிக்கை. அவ்வை சண்முகம் என்னும் தமிழ் நாடகத்தின் முன்னோடி ஒரு விடயத்தை தன் சுயவரலாற்று நூலில் பதிவு செய்திருப்பார். அதாவது ‘மேனகா’ என்னும் படத்தின் ஷூட்டிங்கின்போது நாயகியையும் நாயகனையும் நெருங்கி நிற்கும்படியான ஒரு காட்சிக்கே பல தடைகள் இருந்ததாக அந்தக் குறிப்பு இருக்கும்.

ஆகவே, பாலியலை உரக்கப் பேசுவதற்கான காலமாகவே இன்றைய ஆபாசப் பட இண்டஸ்ட்ரியை எடுத்துக்கொள்ளவேண்டும்….

தமிழ் சமூகம் சிற்பம், ஓவியம், நாவல், சிறுகதை என பாலியலை விரிந்த தளத்தில் பேசியுள்ளது.‘‘

வரலாற்றில் இடம்பிடித்த ஓவியங்கள், கோவில்களில் உள்ள சிற்பங்கள் பாலியல் காட்சிகளைக் கொண்டவை. அதேபோல ‘காமசூத்ரா’ என்ற ஒரு பழங்கால பாலியல் இலக்கியமும் நம்மிடையே உண்டு. இந்த சிற்பம், ஓவியங்களுக்கு மக்கள் மத்தியில் ஓர் ஒப்புதல் இருந்தது.

காலம் செல்லச் செல்ல பாலியல் ரீதியான எழுத்துகள், திரைப்படங்கள், வீடியோக்களுக்கு சில தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இது இன்றும் தொடர்கிறது. ஆனாலும் பாலியல் ரீதியான படைப்புகள் தொடர்ச்சியாக ஏதோ ஒருவிதத்தில் வந்துகொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக, OTTயில் சொஃப்ட் போர்ன் என்னும் மெல்லிய பாலியல் படங்கள் சக்கைபோடு போடுகின்றன.

‘‘லிண்டா வில்லியம்ஸ் என்னும் ஆபாசப் பட ஆய்வாளர், ஒருவர் பார்க்கும் போர்ன் படம் இன்னொருவருக்கு அழகியல் ரீதியான பாலியல் படமாக இருக்கும்…’ என்கிறார். அதாவது அது பார்ப்பவரின் கண்களைப் பொறுத்ததே என்று அவர் ஆணித்தரமாகச் சொல்கிறார்.

அதே வில்லியம்ஸ் மேற்குலகில் முழுநீள செக்ஸ் படங்கள் திரைவெளியை ஆக்கிரமித்த காலத்தையும் ஆய்வு செய்தார்.

ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் முழுநீள பாலியல் திரைப்படங்களுக்கு என்றுமே பெரிய வரவேற்பு இருந்ததில்லை. இலைமறை காயாக மட்டுமே தமிழ்த்திரை பாலியலை சொல்ல முடியும்.

உளவியலின் தந்தையான சிக்மண்ட் ஃப்ரொய்ட் ‘பாலியல் குறித்து 3 கட்டுரைகள்’ என்ற ஒரு புத்தகத்தை ஆரம்பத்தில் எழுதினார். குழந்தைகளை நாம் ஒரு தேவதை, தெய்வாம்சம் என்றுதானே கருதி வந்தோம். அதை எல்லாம் உடைத்து, குழந்தைகளுக்கு பாலியல் உந்துதல் இயற்கையாகவே உண்டு என்ற கருத்தை அந்தப் புத்தகத்தில் சொல்லியிருந்தார்.

இந்தப் புத்தகத்துக்கு பல தடைகள் வந்தது. ஆனாலும், அவர் பாலியலை சமயம், சமூகம் கடந்து ஒரு தனிமனித விடயமாக பார்த்ததால் அவர் சொன்ன பல கருத்துகளையும் மக்கள் ஆர்வத்துடன் பரிசீலிக்க ஆரம்பித்தார்கள். நம்மிடையே கூட பழங்காலத்தில் ‘ரதி மன்மதன், கூளப்ப நாயக்கன் கதை’ என்று பாலியல் இலக்கியப் பிரதிகள் உண்டு. பொதுமேடைகளில் கூத்தாக நடத்தப்பட்ட இலக்கியங்கள் இவை.

ஆகவே ஆபாசப் படங்கள் போன்ற பாலியல் சார்ந்த வெளிப்பாட்டை ஒரு சமூகம் எந்தளவுக்கு விவாதிக்கிறதோ அந்தளவுக்குத்தான் அது சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அடையும். அதை விட்டுவிட்டு வெப்சைட்டுகளுக்கு தடை, சைபர் க்ரைம் என்ற பெயரைச் சொல்லி சிலரை சிறைக்கு அனுப்புதல் எல்லாம் இந்த விடயத்தை மேலும் பேசவே தூண்டும்.

மிக்கேல் ஃபூக்கோ என்ற அறிஞர், ஒரு பாலியல் காட்சி அல்லது கதை என்பது பார்வையாளனுக்கு இன்பத்தைக் கொடுப்பதற்கும் மேலாக இன்பத்தைப் பற்றிய ஒரு அறிவுக்கும், அந்த அறிவைப் பெற்றதற்கான இன்பமாக மாறுவதுமான ரசவாதத்தையும் நிகழ்த்துகிறது…’ என்கிறார்.

ஆகவே, பாலியலை ஆபாசம், வக்கிரம், கலைநேர்த்தி என்று வேறுபடுத்திப் பார்க்கும் ஆய்வுகளை நாம் வரவேற்றாலும், பாலியல் ஒருவருக்கு என்ன மாதிரியான செய்தியைப் பரிமாற விரும்புகிறது என்பதை புரிந்துகொண்டால் அதற்கு அடிமையாவதும் விடுதலையாவதும் நம் கையில்தான் உள்ளது என்பதை உணர்வோம்…  என அழுத்தமாக சொல்கிறார் சஃபி.

You must be logged in to post a comment Login