Articles

பிடித்தவரும் பிடிக்காததும்!

By  | 

நமக்கு பிடிக்காத ஒரு விடயம் நமக்கு பிடிச்சவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்றால் நாம் என்ன செய்யணும்?

இந்த சிக்கலில் தான் பலர் சிக்கித் தவிக்கிறோம், இல்லையா? இந்த பிரச்சினையை எப்படி கையாள்வது?

1: நமக்கு பிடிக்காது என்பதற்காக நமக்கு பிடித்தவருக்கும் அது பிடிக்கக்கூடாதென நம் மனது நம்மை அறியாமலே நினைப்பதை நம்மால் தவிர்க்க இயலுவதில்லை. இப்படியான சூழலில் நமக்கு பிடித்தவர்களிடம் நமக்கு பிடிக்காத விடயத்தை சொல்லி ~அதை நீயும் விரும்பாதே| என சொல்வதா?

2: சரி, நமக்குத்தானே பிடிக்கவில்லை அவருக்கு பிடித்துள்ளதே… அவர் விருப்பத்தை நாம் ஏன் தடுப்பானேன்? நமக்கு பிடிக்கவில்லை. அவருக்கு பிடித்திருக்கிறது. அவருக்கு பிடித்ததை அவர் விரும்பட்டும்! நமக்கு ஏன் ஆட்சேபனை? நமக்கு பிடித்தவர் என்பதால் நமக்கு பிடிக்காத எல்லாம் அவருக்கும் பிடிக்கக்கூடாது என நினைப்பது சரியா? சரி, அவருக்கு பிடித்ததுடன் அவர் இருக்கட்டும்! நமக்கு பிடித்ததுடன் நாம் இருப்போம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனக்காக அவரோ அவருக்காக நானோ மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. அவரவர் பாதையில் அவரவர் நடப்போம்.

3: ‘சரி, நமக்கு பிடிக்காத ஒன்று, நமக்கு பிடித்தவருக்கு பிடித்திருக்கிறது. அப்படியென்றால், இனி அவரும் நமக்கு பிடிக்காதவரே. அவரை விட்டு விலகிவிடுவோம்…’ என மெல்ல மெல்ல நம்மை அறியாமலே நாம் நமக்குப் பிடித்தவரை வெறுக்க, விலக ஆரம்பித்துவிடுவோம். நம் மனம் அதற்கு நம்மை உந்தும். ஒரு கட்டத்தில் நமக்கு பிடித்தவரை நிரந்தரமாக பிரிந்திருக்க இதுவே பிரதான காரணமாகிவிடும்.

4: மெல்ல நமக்கு பிடிக்காத விடயத்தை நமக்கு பிடித்தவருக்கும் எடுத்துச் சொல்லி அவருக்கும் பிடிக்காமல் செய்யலாம் அல்லவா?

ஆனால், அதனால் ஒருவர் மீது இன்னொருவர் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகிவிடுமே. ஆரம்பத்தில், இப்படியான விடயங்களுக்கு விட்டுக்கொடுக்க ஆரம்பித்தால் எதிர்காலத்தில் போகப் போக பல விடயங்களை விட்டுக் கொடுத்து, இறுதியில் தன் தனித்தன்மையை, தன் சுதந்திரத்தை மெல்ல இழக்க நேரிடும்.

உண்மையில் இதுபோன்ற முரண்பாடுகளுக்கு மத்தியில் சாதுர்யமாக பயணிக்க தெரிந்தவர்களே, வாழ்க்கையை சுவாரஸ்யமாக வாழ்கிறார்கள். நம் வாழ்க்கையின் சாராம்சமும் அதுதானே!

என்ன யோசிக்கிறீர்கள்?

நம் வாழ்வில் பிறந்தது முதல் நம்மை சுற்றி நடைபெறும் பெரும்பாலான விடயங்கள் நமக்கு முரணானவையே. ஆனால், அவற்றை கடந்து, அவற்றை வெற்றி கொண்டு சில நேரம் அவற்றோடே வாழ நம்மை பழக்கிக் கொள்வதில்லையா? அப்படித்தான் இந்த விடயத்தையும் எடுத்துக்கொண்டு வாழலாம்.

ஆனால், தன் துணைக்கு பிடிக்காத ஒன்று தனக்கும் பிடிக்காது என மாற்றிக்கொள்வதும் சிலரது புத்திசாலித்தனம். அதை சரியாக புரிந்துகொள்ளாவிட்டால், அந்த செயலை நாம் கோழைத்தனத்துடனே ஒப்பிட நேரிடும்.

சிலர் தனக்கு பிடிக்காத ஒன்று, தன் துணைக்கு  பிடித்திருந்தால், தானும் அதனை மெல்ல மெல்ல விரும்ப, அதன் நியாயங்களை புரிந்துகொள்ள ஆரம்பிப்பதற்கு முயற்சித்து, இறுதியில் தனக்கு பிடித்தவரின் ரசனையோடு ஒன்றி, இருவருக்குமே பிடித்த ஒன்றாக மாற்றி வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கிறார்கள்.

மேற்படி தீர்மானங்கள் எல்லாம் ஆள் ஆளுக்கு வித்தியாசப்படும். ஆனால், எது ஒன்றும் அவரவர் பக்கம் நியாயமாகவே இருக்கும்.

அன்பின் பெயரிலான சமரசங்கள், விட்டுக் கொடுப்புகள் ஒரு காலத்தில் வெறுப்பில் கொண்டுபோய் விடக்கூடிய வாய்ப்பும் உள்ளது. எனினும், அன்பை புதுப்பித்து, அன்பு சலித்துப் போகாமல் மேலும் மேலும் அன்பு செலுத்தும்போதே வெறுப்பு வராமல் பார்த்துக் கொள்ளும்.

எல்லாமே அன்புதானே.

கடவுளின் மீதான அன்பால் பூவை செடியிலிருந்து காம்போடு கிள்ளி எடுப்பது தவிர்க்க இயலாமல் போய்விடுகிறது.

ஆனால், பூவுக்கும் வலிக்காமல் கடவுளின் மீதான அன்பிலும் மாசு ஏற்படுத்தாமல் அன்பை கையாளத் தெரிந்தவர்கள்… ஒன்று, அன்பை வெறுக்கிறார்கள்! இல்லை, ஆழ நேசிக்கிறார்கள்!

-ப.கனகேஸ்வரன் கேஜி

You must be logged in to post a comment Login