Cookery

வெண் பொங்கல்!

By  | 

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கப்

பாசிப்பருப்பு – 1/2 கப்

பால் – 1/4 கப்

நெய் – 1/4 கப்

பச்சை மிளகாய் – 2

இஞ்சித் துண்டு – 1

மிளகு – 1 மேசைக்கரண்டி

சீரகம் – 1 மேசைக்கரண்டி

முந்திரி – 10

பெருங்காயத் தூள் – 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பச்சரிசியை நன்கு கழுவி சுமார் அரை மணிநேரம் வரை ஊற வைக்கவும். இஞ்சியை தட்டி பச்சை மிளகாய் மற்றும் முந்திரியை சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசிப்பருப்பைப் போட்டு அதனின் பச்சை வாசனை போய் நன்கு வாசம் வரும்வரை வறுக்கவும்.

  • பின்பு அதை நன்கு கழுவி தண்ணீரில் சுமார் கால் மணிநேரம் வரை ஊற வைக்கவும்.

கால் மணிநேரத்திற்குப் பின் ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 6 கப் அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஊற வைத்திருக்கும் பச்சரிசி, மற்றும் பாசிபருப்பை மீண்டும் ஒருமுறை நன்கு கழுவி சேர்த்துக் கொள்ளவும்.

  • அடுத்து அதில் கால் கப் அளவு பால் சேர்த்து மூடி போட்டு 3 விசில் வரும் வரை வேகவிடவும். அப்போதுதான் பொங்கல் நன்கு குழைந்து வரும்.

விசில் வந்ததும் குக்கரைத் திறந்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  • பின்னர் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேசைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சுட வைக்கவும்.

எண்ணெய் சுட்டதும் அதில் ஒரு மேசைக்கரண்டி மிளகு, ஒரு மேசைக்கரண்டி சீரகம், பச்சை மிளகாய், தட்டி வைத்திருக்கும் இஞ்சி, முந்திரி மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கவும்.

  • சிறிது நேரம் வதக்கியதும் அதை இறக்கும் முன்பு சிறிதளவு கறிவேப்பிலையை அதில் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

இப்பொழுது இதை குக்கரில் இருக்கும் பொங்கலில் ஊற்றி நன்கு கலந்து விடவும்.

  • பின்னர் மீதமுள்ள நெய்யை ஊற்றி மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து விட்டு, அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுடச்சுட பரிமாறவும்.

You must be logged in to post a comment Login