Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 19: காவிரி தந்த கலைச்செல்வி

By  | 

சினிமாவில் அறிமுகமான ஓரிரு ஆண்டுகளிலேயே நடிப்பில் உச்சம் கண்ட ஜெயா அவ்வப்போது நாடகங்களிலும் நடித்து வந்தார்.திரைக்கு வருவதற்கு முன்பிருந்தே மேடை நாடகங்களில் நடித்து வந்ததால் பெற்ற அனுபவங்கள் ஏராளம்.

அப்போதெல்லாம் இவர்களுக்கென தனி நாடகக்குழுக்களே இயங்கி வந்தன. அதிலும் வை. ஜி. பார்த்தசாரதியின் நாடகக் குழுவில் இணைந்து இவர் நடித்த நாடகங்கள் பல.
ஆரம்ப காலங்களில் நாடக நடிகர்களாக இருந்து பின்னர் வெள்ளித்திரையில் ஜொலித்த சோ, ஏ.ஆர்.எஸ். போன்ற பல கலைஞர்களுடனும் நடித்திருக்கிறார்.

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே மேடைகளில் நாடகம் போடும் சந்தர்ப்பமும் வாய்த்தது. 1966ஆம் ஆண்டிலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும் மக்களின் ஆதரவைப் பெற்ற மேடை நாடகம் ‘காவிரி தந்த கலைச்செல்வி’.
பல நடன நுட்பங்களை கையாண்டு கதை சொல்வதைப் போல் அமையப் பெற்ற அந்த நாடகத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்திருந்தார் ஜெயா.

திரைப்பட நடன இயக்குநரும் நடிகருமான திரு. ரகுராமும் இந்த நாடகத்தில் ஜெயாவுடன் இணைந்து நடித்திருந்தார்.ஆரம்ப காலங்களில் ஜெயாவுக்கு நடனப் பயிற்சியளித்த திருமதி. கே.ஜே. சரசா என்பவரே ரகுராமுக்கும் முறையாக நடனம் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்பது சுவாரஸ்யமான உண்மை.

இந்த நாடகத்தைப் பற்றி பகிரும் போது பின்னணி இசையை வழங்கியவர் யார் என்று பலரும் கேள்வி எழுப்பக்கூடும். தமிழ் சினிமா வரலாற்றில் 50, 60களில் இசை என்றாலே விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இரட்டையரே பிரபலமடைந்த காலமது. இவர்களது இசையில் உருவான பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஆக்கிரமித்திருந்தது.
திடீரென இவர்களுக்கு மத்தியில் புதிதாக இருவர் திரையிசைக்கு அறிமுகமாயினர். அவர்கள் தான் சங்கர் கணேஷ் இணை.

ஆரம்பத்தில் மெல்லிசை மன்னர்களின் இசைக்குழுவில் அடங்கிய கலைஞர்களில் இருவர் இவர்கள்.இசைக்குழுவில் பத்தோடு பதினொன்றாக இருந்து இசைத்து வந்த சங்கர் கணேஷ் ஆகிய இரட்டையருக்கு காவிரி தந்த கலைச்செல்வி நாடகத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை ஜெயா ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் மூலமே சங்கர் கணேஷ் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பையும் பெற்றனர்.

நாடகம் மேடையேற்றப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே பயிற்சிகள் இடம்பெற்று வந்தன.நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் அடங்கிய குழு அதற்கான பயிற்சிகளையும் ஆயத்தங்களையும் மேற்கொள்ள ஜெயாவின் வீட்டில் ஒன்று கூடுவர். காலை எட்டு, ஒன்பது மணிக்கெல்லாம் நடனம் மற்றும் இசைப் பயிற்சிகளில் ஈடுபடும் கலைஞர்களுக்கு காலை, பகல் உணவுகளை தயாரித்து வழங்குபவர் ஜெயாவின் தாய்தான். இப்படி சுமார் 28 நாட்களாக பெற்ற பயிற்சியின் பின் நாடகம் மேடையேற்றப்பட்டது.

அப்போதெல்லாம் சென்னையில் பல நாடக சபாக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் மணி திருமலாச்சாரியார் என்ற கலை ஆர்வலர் 1896இல் உருவாக்கிய சங்கீத வித்வத் சபையும் ஒன்று.

‘காவிரி தந்த கலைச்செல்வி’ 1000 முறைக்கு மேல் பல சபாக்களிலும் அரங்கங்களிலும் பல நாடுகளிலும் மேடையேற்றப்பட்டாலும் முதல் முறையாக நிகழ்த்தப்பட்டது சங்கீத வித்வத் சபையில் தான்.

கலையும் அரசியலும் ஜெயாவின் வாழ்க்கையில் முறுக்கிக் கட்டிய சங்கிலியாகவே ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. காவிரி நாடகத்தில் நடித்து மக்களின் ரசனையை வென்ற ஜெயா அரசியல் வாதியான காலத்திலிருந்து இன்று வரை தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே காலம் காலமாக ஊற்றெடுத்து வரும் பிரச்சினையை கையாளும் விதம் இன்றும் நம்மால் காண முடிகின்றது.

சினிமாவிலிருந்து வௌியேறி பின் சிறிய இடைவேளைக்குப் பின்னர் அரசியலில் நுழைவதற்கு முக்கிய காரணமாக அமைந்ததும் இந்த நாடகம் தான். அதைப் பற்றிய விபரங்களை இனி வரும் தொடர்களில் காண்போம்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *