Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 20: கிராமத்துப் பள்ளிக்கூடத்துக்கு நிதி திரட்டிய நட்சத்திரம்

By  | 

சினிமாவையும் தான் கற்ற கலையையும் வியாபார நோக்கில் பார்க்கும் நடிகர்கள் பலர் உள்ளனர். ஆனால் அதற்குள்ளும் சற்று பொதுநலம் கருதி வாழ்ந்து காட்டியவர்கள் சிலரே.

சமுதாய நோக்குடைய பழம்பெரும் நடிகர்கள் சிலர் தனக்கென ஒரு கொள்கையை நிலை நாட்ட சினிமாவை பயன்படுத்திக் கொண்டனர். இதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த எம்.ஜி.ஆர் சினிமாவினூடாக சமுதாய அக்கறையை வெளிக்காட்டியிருந்தார்.
அதே சமயம் எம்.ஜி.ஆரை பின்பற்றி வந்த ஜெயலலிதா நடித்த பல திரைப்படங்களில் எளிமை, ஏழ்மை, வறுமை, பொதுவுடைமை போன்றன உணர்த்தப்பட்டிருக்கும்.

கலைஞர்களையும் கலா ரசிகர்களையும் திருப்திப்படுத்துவற்காகவே சினிமாவை ஒரு பொழுதுபோக்காக கையாளாமல் பொது மக்களின் நலன் கருதி திரைக்கு வந்த சொற்ப காலத்திலேயே செயற்பட ஆரம்பித்துவிட்டார் ஜெயா.

அன்றைய மைசூரின் (தற்போதைய கர்நாடகா) மாந்தியா மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்ந்து வந்த நாகுவினஹல்லி என்ற கிராமத்தில் இன்று பாடசாலை வசதி உண்டென்றால் அதற்கு காரணம் ஜெயா தான் என்று இன்றும் அங்குள்ள கிராமவாசிகள் பெருமிதம் கொள்கிறார்கள்.

1967 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி மைசூரில் அறப்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பால் நிகழ்த்தப்பட்ட நடன நிகழ்ச்சியொன்றுக்கு கூட்டம் அலை மோதியது.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் மைசூர் பல்கலைக்கழகத்தில் உள்ள க்ரோபோர்ட் மண்டபத்தில் அப்போது பிரபல இளம் சினிமா நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருந்த ஜெயாவின் நடன நிகழ்ச்சியே அது.

நிகழ்வுக்கான அனுமதிச் சீட்டுக்கள் பத்து ரூபாய், இருபத்தைந்து ரூபாய் மற்றும் ஐம்பது ரூபாய்களுக்கு அறவிடப்பட்டது. அப்போதைய பொருளாதார சூழலில் அந்த பணத்தொகைகளின் பெறுமதி சற்று அதிகமாக இருப்பினும் ஜெயாவின் நிகழ்ச்சியை பார்க்கும் ஆவலில் சனம் கட்டுக்கடங்காமல் சேர்ந்தது.

இப்படியொரு பிரம்மாண்ட நடன நிகழ்வை தமிழ்நாட்டிலிருந்து மைசூருக்கு சென்று நடாத்திக் கொடுப்பதாக ஜெயா ஒப்புக் கொண்டதற்கு ஒரே ஒரு காரணம் பள்ளிக்கூடமில்லாத அந்தக் கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்டி அங்குள்ள பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

அது தவிர தான் பிறந்த மைசூரில் கிராமத்து மக்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலையில் இருப்பதை கேள்விப்பட்டு கிராமத்து சிறுவர்களின் கல்விக்கு தன்னாலான உதவியை செய்வதற்காக பாடசாலையொன்றை கட்டுவதற்கான நிதியை வசூலித்துக் கொடுக்கும் பொது நல நோக்கமும் ஜெயாவிடம் இருந்தது.
இவ்வறப்பணி நிகழ்ச்சியின் ஒழுங்கமைப்பாளரான ராமச்சந்திரய்யா அன்றைய ஜெயாவின் வசீகரமான கம்பீரமான நடன நிகழ்ச்சியை காலங்கள் கடந்த பின்னரும் நினைவுபடுத்தி மகிழ்ந்துள்ளார் இவ்வாறு…

“என்ன எப்படி அந்த தருணத்தை மறக்க முடியும்! அவருடைய நடன நிகழ்ச்சி இன்றும் தௌிவான நினைவாகவே உள்ளது. எங்கள் கிராமத்தில் எங்களுக்கென ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறதென்றால் அது ஜெயலலிதாவால் மட்டுமே. அந்தப் பாடசாலையை நான் பார்க்கும் போதெல்லாம் நான் ஜெயலலிதாவை நன்றியுணர்வுடன் நினைவுபடுத்திக் கொள்வேன். நாங்கள் அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம்…”.

அதற்கு முன்னும் பின்னும் கர்நாடக மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே காவிரி பிரச்சினை காரணமாக பல முறுகல்கள் இடம்பெற்றாலும் தமிழ்நாட்டு அரசியல்வாதியான ஜெயாவின் மீது மட்டும் அந்தக் கிராமவாசிகள் தீராப்பாசம் கொண்டுள்ளனர் என்பது உண்மையான விடயம்.

கர்நாடகாவில் பிறந்து தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்து சினிமாவில் பிரபலமாகி அரசியல்வாதியாய் வலம் வந்த பெண்மணி பிற்காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சரான போது பதவியேற்பு நிகழ்வை நாகுவினஹல்லி கிராம மக்கள் தொலைக்காட்சியில் கண்டு இன்புற்று அவரது தேர்தல் வெற்றியை தம் வெற்றியாய் எண்ணி கொண்டாடியது என நியூஸ் 18 என்ற ஊடகம் செய்திகளை வௌியிட்டிருந்தது.

நாகுவினஹல்லியைச் சேர்ந்தவரும் கர்நாடக தகவல் திணைக்களத்தின் இயக்குநருமான என்.ஆர். விஷுகுமார் “அந்த நடனம் நிகழ்த்தப்பட்ட போது நான் மிகவும் சிறியவன். எனக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லை. ஆனால் என் தந்தை ராமகிருஷ்ணய்யா உட்பட எமது கிராம மக்கள் அனைவரும் கிராமத்துப் பாடசாலைக்காக நிகழ்த்தப்பட்ட ஜெயாவின் அறக்கட்டளை நடன நிகழ்வை இன்றும் நினைத்துப் பார்ப்பதுண்டு…” என்று ஒரு தருணம் கூறியிருந்தார்.

ஜெயாவின் முயற்சியிலும் ஒத்துழைப்பாலும் உருவான அந்தக் கிராம பள்ளி மாணவர்களும் மக்களும் இன்றும் அவரது பெயரை உச்சரித்த வண்ணமுள்ளனர் என்பதை பலரும் அறிவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *