Health

குழந்தை பிறந்த பின் பெண்களுக்கு ஏற்படும் மனநோய்

By  | 

குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குள் நடைபெறும் பெரும்பாலான சிசு கொலைகளுக்கும், திருமணமாகி குழந்தையைப் பெற்றெடுத்த பெண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கும் மனநோய்களும் ஒரு காரணம் என்றும், அதிலும் பேபி புளூ போன்ற மனபாதிப்புகளின் அதீத தன்மையும் ஒரு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது

பொதுவாக பெண்களுக்கு கருத்தரிப்பு நிகழ்ந்து பிரசவத்திற்கு முந்தைய மூன்று மாத காலமும், பிரசவத்திற்கு பிந்தய ஆறு மாத காலமும் அவர்களுக்கு முக்கியமான காலகட்டங்களாகும். இந்த காலக்கட்டத்தில் அவர்களுடைய உடலில் ஏற்படும் ஹோர்மோன் சுரப்பிகளில் மாற்றங்களால் அவர்களின் மனநிலையும், உடல் நிலையும் பாதிப்படையும்.

கிராமப்புறமாக இருந்தாலும், நகர்ப்புறமாக இருந்தாலும் குழந்தைப் பெற்ற பெண்களில் 70 சதவீதற்குட்பட்டவர்கள் இத்தகைய பேபி புளூ என்ற மனநோய் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு, அரவணைப்பு, வழிகாட்டல், நம்பிக்கையூட்டல், ஆரோக்கியம், நல்ல உறக்கம் ஆகியவை இருந்தால் இத்தகைய மனநோய் பாதிப்பிலிருந்து விரைவில் விடுபடலாம்.

தூக்கமின்மை, அதிகமாக உணர்ச்சி வசப்படுதல், மற்றவர்கள் குரல் உயர்த்தி பேசுவது போன்ற சிறிய விடயங்களுக்குக் கூட கண்களில் கண்ணீர் வருதல், இன்னும் சிலர் குழந்தை அழும் போது அந்த குழந்தை எதற்காக அழுகிறது என்று அவதானிக்க இயலாமல், அந்த குழந்தையுடன் சேர்ந்து இவர்களும் கண் கலங்குதல் போன்றவையே இத்தகைய பாதிப்பின் அறிகுறி. இவை பெரும்பாலும் பதினைந்து நாட்கள் வரை நீடிக்கும். பிறகு இயல்பாகவே மறைந்துவிடும். அதிலும் நம்பிக்கையானவர்களின் ஆதரவான பேச்சு கேட்டால் இவை விரைவில் குணமாகிவிடும்.

ஆனால் சிலர் இத்தகைய தருணங்களில் தனியாக இருந்து, அவர்களுக்கு சரியான வழிகாட்டல் கிடைக்காமல் இருந்து, குழந்தை அழும் போது அந்த குழந்தை எதற்காக அழுகிறது என்று தெரியாமல் தவிக்கும் போது, அதன் அழுகையைக் கட்டுப்படுத்த தெரியாமல் அந்த குழந்தையை குரல் உயர்த்தி அதட்டுவது அல்லது லேசாக அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மன பாதிப்பு இயல்பெல்லையைக் கடந்துவிட்டதன் அறிகுறியாக எடுத்துக் கொண்டு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும். அதனை அலட்சியப்படுத்தினால் சுயகழிவிரக்கம் அல்லது அதீதமான மனநிலையில் அந்த குழந்தையை தூக்கி வீசிவிடவோ அல்லது இவர்கள் தற்கொலைக்கு முயலவோக்கூடும். பல தருணங்களில் தற்கொலை எண்ணங்களும் மேலோங்கும்.

இதைத் தவிர்க்கவேண்டும் என்றால் குழந்தை பிறந்து ஆற மாத கால அவகாசம் வரை மனதை இயல்பாக வைத்துக் கொள்ளவேண்டும். தங்களை நம்பி ஒரு ஜீவன் இந்த பூமியில் பிறந்திருக்கிறது என்ற உணர்வு மேலோங்கியிருக்க வேண்டும். அந்த குழந்தை அழுதால் பசியால் அழுகிறதா? தாகத்திற்காக அழுகிறதா? அல்லது டயாபர் அசௌகரியத்தால் அழுகிறதா? என்பதை அதன் அழும் குரலில் இருந்து நுட்பமாக உணர்ந்து கொள்ளவேண்டும். அத்துடன் தங்களுடைய உடலில் ஹோர்மோன் சுரப்பியில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை உணரவேண்டும். இதில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் உடனடியாக உளவியல் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *