Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 20: துப்பாக்கிச் சூட்டால் பாதியில் நின்ற படப்பிடிப்பு

By  | 

அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமா பல நட்சத்திரங்களை கடந்து வந்துள்ளது. ஆனால், எந்த சினிமா நட்சத்திரமும் இவரது சாதனையை கடந்து சென்றுவிடவில்லை என்று ஜெயாவின் வளர்ச்சியை கண்டு பிரமிக்காதவர் எவரும் இல்லை.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பும் சரி பின்னரும் சரி தனக்கென ஒரு வாழ்க்கைத் திட்டத்தை அவர் வகுத்துக்கொண்டதேயில்லை. தன் தேவைகள் அனைத்தையும் கவனித்துக்கொள்வதற்கு தாயார் இருக்கிறார் என்று இருந்துவிட்டார் ஜெயா.
தாய் கூறிய அறிவுரையை கேட்டு சினிமாவில் நடிக்கச் சென்ற தருணம் தான் தன் குடும்ப நிலைமையை பற்றி சிந்தித்தார். இருந்தும் நடிப்புத் தொழிலில் தன்னை முழுதாய் ஈடுபடுத்திக்கொண்டவர் அதன் பின்னும் தன் உழைப்பின் மூலம் வரும் வரவு செலவு, கொடுக்கல் வாங்கல்களை பற்றி என்றுமே சிந்தித்ததேயில்லை. அனைத்துக்கும் பொறுப்பானவர் அவரது தாய் சந்தியா மட்டுமே.

தனக்கென விதம் விதமான உடைகளையோ ஒப்பனைப் பொருட்களையோ நகைகளையோ வாங்கி அணிந்து ஆடம்பரத்தை வெளிக்காட்டாது மிகவும் எளிமையான பெண்ணாகவே வாழ்ந்தவர் தான் ஜெயா.
ஆனால், சில பல திரைப்படங்களில் நடித்து பிரபலங்களின் அறிமுகங்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் தன் நிலைமையை உயர்த்திக்கொள்வதில் இலேசாக அக்கறை காட்ட ஆரம்பித்தார். தன் தாய் மட்டுமே நடிக்கும்போது அவர்களிடம் ஒரு அம்பாசிடர் கார் இருந்தது. அதன் பின்னர் ஜெயா நடித்து வருமானத்தையும் அந்தஸ்தையும் பெருக்கிக்கொண்டதன் பின் தனக்கென ஒரு காரை வாங்கினார். வேறொருவர் வாங்கி சிறிது நாட்கள் ஓட்டிய MSX 3333 என்ற இலக்கத்தைக் கொண்ட ப்ளைமெளத் காரை தானே வாங்கி ஓட்டக் கற்றுக்கொண்டார்.

அதன் பின் தன் ரசனைக்குத் தகுந்தபடி நகைகள், சேலைகளை வாங்கி அணிய பழகிக்கொண்டார். அவருக்கு முன்பிருந்தே சினிமாவில் நடித்து வந்த நடிகைகளை ஓவர்டேக் செய்து தன்னை ஒரு முன்னணி நடிகையாக நிலைநிறுத்த ஜெயா அவ்வளவாக சிரமப்படவில்லை. அவரின் முன்னேற்றத்துக்கான பாதையை சந்தர்ப்ப சூழ்நிலைகளே ஏற்படுத்திக்கொடுத்தன என்று சொல்வதே பொருத்தமானது.
நடிகை தேவிகா, சாவித்திரி, சரோஜாதேவி, பானுமதி, பத்மினி, கே. ஆர். விஜயா என பெயர் குறிப்பிட்டு கூறுமளவு பிரபலமடைந்த நடிகைகள் ஒரு காலகட்டத்தில் தனக்கென ஒரு வரையறைக்குள் நடிக்க ஆரம்பித்தர். பத்மினி, தேவிகா போன்றோர் சிவாஜி கணேசனுடனும் சாவித்திரி ஜெமினி கணேசனுடனும் அதிகமான படங்களில் ஜோடி சேர்ந்து நடித்து வந்தனர்.

சரோஜா தேவி எம்.ஜி.ஆருடன் இணைந்து அடுத்தடுத்து நடித்தாலும் ஏனைய மொழிகளில் வாய்ப்பு பெற்று ஓரிடத்தில் அவரை காண முடியாதிருந்தது. இப்படி நிலையின்றி வெவ்வேறு படப்பிடிப்புக்களில் செல்லும் நடிகைகளுக்கு மத்தியில் ஜெயா எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான கதாநாயகியாக மக்கள் ஏற்றுக்கொள்ளுமளவு அதிர்ஷ்டக் காற்று வீசியது.

எம்.ஜி.ஆரின் சிபைடங்களில் சரோஜாதேவி ஒப்பந்தமாகி பின்னர் சில காரணங்களால் அப்படங்களுக்கு ஜெயலலிதாவே கதாநாயகியாக்கப்பட்டார்.
1967களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து இவர் நடித்த தாய்க்கு தலைமகன், அரச கட்டளை, காவல்காரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இந்த 3 படங்களும் உருவாக்கப்பட்டதன் பின்னணியில் நிகழ்ந்த பல சம்பவங்கள் முக்கிய பதிவுகளாயின.

****
1966ஆம் ஆண்டின் இறுதியில் எம்.ஜி.ஆர் சரோஜாதேவி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘பெற்றால் தான் பிள்ளையா’. எம்.ஜி.ஆரின் வாழ்க்கையிலேயே ஒரு முக்கிய சம்பவத்தை நினைவுபடுத்தும் திரைப்படம் இது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வாசு என்பவர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நண்பராவார். அவர் எம்.ஆர்.ராதாவிடம் கடனாக பணத்தை பெற்று இப்படத்துக்கான தயாரிப்பு வேலைகளில் இறங்கினார். படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பின் போது இன்னும் சில காட்சிகளை மேலதிகமாக இணைக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் வாசுவிடம் கூற, கையில் இருந்த பணம் முழுவதையும் கொட்டி செலவழித்து வேலை செய்த வாசுவுக்கு அடுத்து என்ன செய்வதென்றே புரியவில்லை. பணப் பற்றாக்குறை…

தன் இக்கட்டான சூழ்நிலையை ராதாவிடம் கூறிப் புலம்பினார். அதேவேளை கொடுத்த கடனை திருப்பிக் கேட்டார் ராதா. வாசு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தான் கொடுத்த பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்வதிலேயே ராதா குறியாக இருந்தார். படத்தில் மேலதிக காட்சிகளை எம்.ஜி.ஆர் இணைக்கச் சொன்னதால் வந்த பிரச்சினைதானே இது என்பதால் எம்.ஜி.ஆருடன் பேசி முடிவெடுப்பதற்காக ராதாவும் வாசுவும் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு சென்றனர். அங்கு மூவரும் கொடுக்கல் வாங்கலை பற்றி பேசிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வாய்த்தர்க்கம் முற்றியது. ராதா தான் மடியில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டு தானும் சுட்டுக்கொண்டார். இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

****

1966இல் எம்.ஜி.ஆர் சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டிருந்தபோது எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுவிட்டன.

அப்படி நிறுத்தப்பட்ட படங்களுள் ஒன்று தான் ‘காவல்காரன்’. இந்தப் படத்துக்கு ஜெயலலிதா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு சில காட்சிகளில் நடித்து பதிவாகியும் விட்டது. எனினும் படப்பிடிப்பு முற்றுப்பெற்றிருக்கவில்லை.
அப்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த எம்.ஜி.ஆரை பார்க்கச் சென்றிருந்த சின்னப்ப தேவர் எம்.ஜி.ஆரின் தோற்றத்துக்கு இணையான மற்றுமொர சின்ன வாத்தியார் என்று பேசப்பட்டு வந்த நடிகர் ரவிச்சந்திரனை வைத்து படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டார்.

ரவிக்கு ஜெயாவை நாயகியாக்கினால் படம் நிச்சயமாக ஹிட்டாகிவிடும் என்பதே தேவரின் கணிப்பு. எம்.ஜி.ஆருடன் நடிக்க ஆரம்பித்து படப்பிடிப்பு முடிவடைவதற்குள் வேறொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஜெயா.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *