Antharangam

உங்கள் துணையுடன் சண்டையா? அப்போ இப்படி மன்னிப்பு கேளுங்கள்

By  | 

இதயத்தை வெற்றி கொள்ள ‘ஐ லவ் யூ’ என்கிற மூன்று வார்த்தைகள் போதும். அதுவே காயப்பட்ட அல்லது உங்களுக்குள்ளான சண்டைகளால் புண்பட்ட இதயமானால் இந்த மூன்று வார்த்தைகளையும் தாண்டிய உறுதியான வார்த்தை தேவை. அதுதான் ‘மன்னிப்பு’. மன்னிப்பு கேட்கும் விஷயத்தில் சிலர் எப்போதுமே கோட்டை விட்டு விடுவார்கள். இது அந்த சண்டையை மேலும் வலுக்கச் செய்யும். ஆதலால் மன்னிப்பு கேட்கும் முறைகளை பட்டியலிடுகிறது இந்தக் கட்டுரை.

மன்னிப்பை வெறும் வார்த்தைகளால் பகிராமல் உணர்ந்து வெளிப்படுத்துங்கள். மன்னிப்பு கேட்கும் முன் அந்த தவறை நீங்கள் உணர வேண்டும். அதனால் நீங்கள் எந்த அளவிற்கு மன வருத்தம் அடைந்தீர்கள் என்பதை உங்கள் துணைக்கு புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் அந்த மன்னிப்பு உண்மையானதாக இருக்கும். உணராமல் மன்னிப்பு கேட்பதால் அது வெறும் வார்த்தையாக மட்டுமே இருக்கும். பின் மீண்டும் மீண்டும் அந்த தவறை செய்வீர்கள். அதேபோல் தொடர்ந்து செய்வதால் உங்கள் துணைக்கு உங்கள் மேல் வெறுப்பு ஏற்பட்டுவிடும்.

காதலில் ஈகோ பெரும் தொல்லை. அதுதான் பல சண்டைகளுக்குக் காரணமாக இருக்கும்; பிரிவுகளுக்கும் காரணமாக இருக்கும். நான் ஏன் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்? யார் முதலில் சண்டையை ஆரம்பித்தார்கள் ? என்ற வீண் கேள்விகளையெல்லாம் மூட்டை கட்டிவிட்டு, முதல் வேலையாக துணையிடம் மன்னிப்பு கேளுங்கள். சண்டையில் இருவரும்தான் மாறி மாறி வாக்குவாதம் செய்தீர்கள். மன்னிப்பு கேட்பதால் நீங்கள் குறைந்தவர்கள் இல்லை. மற்றவர் வெற்றி பெற்றவரும் இல்லை. இருவருக்குமான உறவை தக்க வைப்பதற்காக நீங்கள் மன்னிக்கவும், மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறீர்கள் என்பதையே உணர்த்தும்.

மன்னிப்பு கேட்கும்போது பலரும் செய்யும் தவறு இதுதான். அதாவது மன்னிப்பு கேட்பது என்றாகிவிட்டது. அப்படியிருக்கும்பட்சத்தில் மீண்டும் அந்த சண்டையை நினைவுபடுத்தும் விதமாக ‘இருந்தாலும் நீ அப்படி சொல்லியிருக்க கூடாது’, ‘ஆனாலும் நீ செய்தது தவறு’என்பன போன்ற வார்த்தைகளை கூடவே இணைத்துக் கொள்வதால் நீங்கள் மன்னிப்பு கேட்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே உங்கள் தவறை உணர்ந்து மனதார மன்னிப்பு கேளுங்கள். அதோடு பிரச்னையை முடித்துக் கொள்ளுங்கள்.

இரவோ அல்லது காலையிலோ உங்கள் துணையுடன் சண்டை போட்டிருந்தால் அச்சம்பவம் நடக்காததைப் போன்றே நடந்துகொள்ளுங்கள். வழக்கத்தைக் காட்டிலும் சற்றுக் கூடுதலாகவே அக்கறையுடன் பேசுங்கள். இரவு சண்டை என்றால் காலை துணை எழுவதற்கு முன்னரே எழுந்து சுவையான காஃபி போட்டுக் கொடுங்கள். அவர் பல நாட்களாக சொல்லிக் கொண்டிருந்த செயலை அன்று செய்துவிடுங்கள். அவர் கேட்காமலேயே வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் கட்டாயம் மனம் உறுகி பேசிவிடுவார்கள்.

மன்னிப்பு என்பது உணர்வுபூர்வமான விஷயம். அது இருவருக்கும் உண்டான நெருக்கத்தை அதிகரிக்கச் செய்வது. அப்படியிருக்கும்பட்சத்தில் பெரிய சண்டைகளை நேரில் சென்று தீர்த்து வைப்பதுதான் சரியான செயல். எனவே நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்து விட்டால் மின்னஞ்சல் , குறுஞ்செய்தி வாயிலாக மன்னிப்பு கேட்காமல், உடனடியாக நேரில் சென்று மன்னிப்பு கேளுங்கள்.

சில நேரங்களில் பேச்சுகளைக் காட்டிலும் உங்கள் உடல் வெளிபடுத்தும் மொழி ஆயிரம் விஷயங்களை பேசும். நீங்கள் பேச்சில் அத்தனை வல்லவர் இல்லை என்றாலும், பேச்சில் தயக்கம் இருந்தாலும் நீங்கள் உடல் மொழியிலும் மன்னிப்பை வெளிபடுத்த முடியும். உண்மையாகவே நீங்கள் மன்னிப்பு கேட்கத் தகுதியானவர் என்பதை உணர்ந்து மன்னிப்புக் கேட்டால் மட்டுமே அது சாத்தியம்.

காதலில் மன்னிப்பை வெளிபடுத்த முத்தத்திற்கு இருக்கும் வலிமை அதிகம். அது நீங்கள் அவர்கள் மேல் வைத்திருக்கும் தூய அன்பை வெளிப்படுத்தும். நேர்மையை வெளிப்படுத்தும், அக்கறையை காட்டும். எனவே உணர்வுபூர்வமான மன்னிப்பில் முத்தம் அத்தனையையும் செய்யும். உங்கள் துணை மனம் உறுகி எத்தனை கோபங்கள் இருந்தாலும் கட்டி அணைத்துவிடுவார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *