Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 25: சிகிச்சைக்குப் பின் மீண்டும் எம்.ஜி.ஆருடன் ஜெயா!

By  | 

பல முகங்கள் திரையில் காண்பிக்கப்பட்டாலும் கறுப்பு வௌ்ளை திரைப்படங்களிலும் கலர்புல்லான முகத் தோற்றத்தில் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் ஜெயா.

எந்தப் படத்துக்கும் ஆரம்ப நாள் பூஜை நிகழ்த்தப்படும் போது மாம்பலம் அகஸ்தியர் கோயில் பிள்ளையாருக்கு விசேடமான முறையில் அர்ச்சனை வழிபாடு நிகழ்த்துவது ஜெயாவின் வழக்கமாகியது.

எப்போதும் போல காவல்காரன் படத்திலும் நடிக்க ஆரம்பத்தில் சரோஜா தேவி ஒப்பந்தமாகி பின்னர் ஜெயா நடித்தார்.

குண்டடிபட்ட நிலையில் எம்.ஜி. ஆர் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு சிகிச்சை பெற்று வந்த போது இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் பெரும் மனச் சஞ்சலத்துக்கு ஆளாகினர்.

கழுத்தில் பாய்ந்த குண்டு முக்கியமான மூன்று நரம்புகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டது. அவற்றை அகற்றினால் நரம்புகள் சேதப்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும் என கருதிய மருத்துவர்கள் குண்டை அப்படியே வைத்து அவ்விடத்தில் தையல் போட்டனர். குண்டு கழுத்திலேயே தங்கியதால் எம்.ஜி.ஆரின் குரல் வளமும் பாதிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் பேசும் வசனங்கள் மட்டும் கனீரென ஒலிக்குமளவு வளப்பட்டிருந்த குரல் சிகிச்சைக்குப் பின்னர் முற்றாக மாறிவிட்டது. இனி இவரால் எப்படி ஏற்ற, இறக்கமாக ஒலியெழுப்பி வசனம் பேச முடியும். அப்படியே பேசினாலும் அதில் ஜீவன் இருக்குமா என்றெல்லாம் சினிமா வட்டாரங்கள் வாய் பிதற்றின.

அப்போதிருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் படங்களே அதிகமான வசூலை பெற்றுத் தருபவையாக இருந்தது. அதனால் எம்.ஜி.ஆரின் நடிப்பும் வேண்டும்… அதே சமயம் அவரது குரலிலும் தௌிவு வேண்டும்… என்று தயாரிப்பாளர்கள் கருதினர்.

“குரல் தானே பாதிக்கப்பட்டுள்ளது… அதை வேறு யாரையேனும் கொண்டு டப்பிங் செய்து சமாளித்துவிடுவோம்” என்ற திட்டத்துக்கும் எம்.ஜி.ஆர் ஒப்புக் கொள்ளவில்லை.

“நான் நானாகவே நடிப்பேன்… நானாகவே பேசுவேன்… யாரும் இதில் இடைச்செறுகலும் இருக்கக்கூடாது. எப்படியிருந்தாலும் என் நடிப்பை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என எம்.ஜி.ஆர் கூறிவிட்டதால் அவர் பேச்சை மீறி யாரும் வாய் திறக்கவில்லை.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு முன்பே காவல்காரன் படப்படிப்பு வேலைகள் ஆரம்பமாகி சில காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டன. அந்தக் காட்சிகளில் எம்.ஜி.ஆரின் பழைய கனீர் குரலே ஒலித்திருந்தது.

படம் பாதியிலேயே நின்றுவிட்டதால் மீண்டும் படப்பிடிப்பு பணிகள் தொடர ஆரம்பித்தது. எம்.ஜி.ஆரும் குணமடைந்து சூட்டிங் ஸ்பொட்டுக்கு சென்றார். படத்தின் இயக்குநர் பா. நீலகண்டன் மறுபிறவி எடுத்து வந்த எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இன்முகத்துடன் அவரை வரவேற்றார். வந்தவுடன் ஒரு காதல் பாடல் காட்சி.
எகிப்திய நாகரிக காலத்தை எடுத்துக்காட்டும் விதமாக படப்பிடிப்புத் தளம் அமைக்கப்பட்டிருந்தது. உலகப் புகழ் பிரமிட் கட்டுமானமும் அதற்கு பாதுகாவலாக கட்டப்பட்டதாக நம்பப்படும் ஸ்ஃபிங்ஸ் சிற்பமும் (Sphinx) மண்டபம் மற்றும் தூண் அமைப்புகளும் படக்காட்சிக்கு மேலும் அழகு சேர்த்தன.

எம்.ஜி.ஆரின் உடல் நிலை குறித்து பிறரை போல் ஜெயா உதாசீனப்படுத்தி பேசவில்லை. படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் மும்முரமாக நடிப்பில் கவனம் செலுத்தினார்.

எகிப்திய காலத்து மக்களின் ஆடை அலங்காரத்துடன் ஜெயா காத்திருந்தார். அதற்குத் தகுந்தாற் போல் எம்.ஜி.ஆரும் உடை மாற்றி செட்டுக்குள் நுழைந்தார். பாடல் ஆரம்பமானது…

“நினைத்தேன் வந்தாய் நூறு வயது…” என்ற பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர் ஜெயா தோன்றிய விதம் வியப்பானது.
உடல் நலத்தை பற்றி சிறிதும் சிந்திக்காமல் உற்சாகமாக ஜெயாவின் நடனத்துக்கு ஏற்றாற் போல் எம்.ஜி.ஆரும் அவருக்கு தகுந்தாற் போல் பதமாக ஜெயாவும் நடனமாடியிருந்தார்கள்.

பெர்சிய இசையை தழுவிய மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் அமைந்த இந்தப் பாடலுக்கு வாலி வரியமைத்துக் கொடுக்க டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசிலா ஆகியோர் குரலெழுப்பினர்.

பாடலின் இறுதியில் ஜெயாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் கெமராவை மாற்றி மாற்றி திருப்பி ஜெயாவின் நடனத்தை பின்தொடர்ந்து எம்.ஜி.ஆர் ஆடுவதை மிக அழகாக காட்டியிருப்பார்கள்.

“கட்டழகு தங்கமகள் திருநாளோ என்ற பாடலில் ஜெயா சின்னஞ்சிறு சிறுமியரோடு தத்தித்தாவி ஆடி குதூகலமாக நடித்திருப்பார். படத்தில் எம்.என். நம்பியார், எஸ்.ஏ. அசோகன், வி.கே.ராமசாமி, பண்டரிபாய், சிவகுமார், நாகேஷ் போன்றோரும் நடித்துள்ளனர்.

சிவகுமார் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த முதல் படம் இதுவே. இதில் எம்.ஜி.ஆரின் பாசமிகு தம்பி இவர். ஜெயாவை ‘அண்ணி’ என்றே அழைப்பார்.

படத்தில் எம்.ஜி.ஆருக்கும் ஜெயாவுக்கும் காதல் திருமணம் நிகழ்ந்து பின் ஜெயா கருவுற்றிருக்கும் தருணம் குதூகலமாய் எம்.ஜி.ஆர் பாடுவதைப் போல் அமைந்த “காது கொடுத்துக் கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்…” என்ற பாடல் மிகப் பிரபலம்.

சத்யா மூவிஸ் வழங்கும் காவல்காரன் திரைப்படம் 07.09.1967 அன்று வௌியானது. படம் வௌியாகி 100ஆவது நாள் விழா சேலத்தில் கொண்டாடப்பட்டது. அதில் ஜெயாவையும் பேசச் சொன்னார்கள். பேச்சில் என்னவொரு துடிப்பு… உற்சாகம்… அதுவே அவருடைய முதல் மேடைப் பேச்சாக அமைந்தது. அத்துடன் எம்.ஜி.ஆரின் அதிர்ஷ்டமான ஜோடியாகவும் ஆனார் ஜெயா.

இலங்கையிலும் இந்தப் படம் 164 நாட்களுக்கும் மேலாக பல திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டதுடன் தமிழக அரசின் திரைப்பட விருதையும் வென்றது.

தொடரும் …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *