Antharangam

பெண்களின் இளகிய மனமே அனைத்து தவறுகளுக்கும் காரணம்

By  | 

கேள்வி :
நான் ஓர் ஆசிரியை. என் கணவரும் ஆசிரியர் தான். எனக்கு ஓர் ஆண் குழந்தை இரண்டரை வயதில் உள்ளது. மணமாகி மூன்றரை ஆண்டுகள் கூட ஆகவில்லை. இருவருக்கும் சமமான படிப்பு, பதவி இருந்தும் ஒரு பாவையின் சூதினால் நான் பாதி வழியில் பரிதவித்து நிற்கிறேன்.

என் கணவரும் அவரது குடும்பத்தினரும் என்னை பெண் பார்த்து ‘பூ’ வைத்த பின், ஆறு மாதங்­களுக்கு பிறகு தான் என் திருமணம் நடந்தது. திருமணத்­திற்கு முன் என் பணி மாறுதலுக்காக அவர் அதிக முயற்சி செய்தார். அதன் பலனாக திருமணத்­துக்கு ஒரு மாதம் இருக்கையில் அவர் பணி­புரியும் இடத்திற்கு அருகிலேயே எனக்கு பணி மாறு­தல் கிடைத்தது.

‘பூ’ வைத்த பின் அவர் எனக்கு கடிதம் எழுதி­னார். வீட்டிற்கும் வருவார். கடிதத்திலும் நேரில் பேசும் பொழுதும் மாறுதல் சம்பந்தமாகத் தான் விஷயம் இருக்கும். எல்லை மீறி ஒரு தவறான வார்த்தை கூட பேசியதில்லை.

இந்நிலையில் என் திருமணம் நடந்தது. முறைப்­படி மாமியார் வீடு வந்தடைந்தேன். திருமண­மான மூன்றாவது நாள் ஒரு பெண் தனியாக எங்­கள் வீட்டிற்கு வந்தாள். அவளை அறிமுகப்­படுத்துகை­யில், ‘இந்தப் பெண் என்னுடன் பணி­புரிந்தவர்’ என அவர் கூறினார். கோப்பி கொடுத்­தேன். சிறிது­நேரம் அவருடன் பேசிவிட்டு சென்றுவிட்டாள். அப்போது அவள் கழுத்தில் தாலி இல்லை.

என் மணவாழ்க்கை மகிழ்வாய் தொடர்ந்தது. ஒரே ஊரிலேயே நாங்கள் தனிக்குடித்தனம் உள்ளோம். என் மாமனார் சமீபத்தில் இறந்தார். அவருக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் எல்­லாம் முடிந்த பின் மாமியார் வீட்டிலிருந்து என் வீட்டிற்கு வந்துவிட்டேன்.

அதற்கு அடுத்த நாள் என் கையில் கோப்பி வாங்கி குடித்த அந்தப் பெண் ஒரு பெண் குழந்தை­யோடு வந்திருந்தாள் என்றும், அவளை என் கணவர்தான் மணமுடித்து (என் திருமணத்திற்கு பிறகு) உள்ளார் என்றும் அறிந்தேன். என் கணவரி­டம் கேட்டதற்கு ஒத்துக்கொண்டார். நான் அழு­தேன். அரசாங்க வேலை கிடைப்பதற்கு முன் என் கணவரும் அவளும் ஒரு தனியார் கல்வி நிறு­வனத்தில் பணியாற்றுகையில் காதல் ஏற்பட்ட­தாம்.

ஒரே நேரத்தில் இருவருக்கும் அரசாங்க வேலை கிடைத்த உடன் இருவரும் வெவ்வேறு திசையில் பிரிந்தாலும் காதல் மட்டும் தொடர்ந்துள்ளது.
எனக்கு, ‘பூ’ வைத்த அன்றே அந்த பெண்ணுக்கு விஷயம் தெரியுமாம். அதன் பின்பும் இவருடன் அவள் உறவு வைத்தது ஏன் என்று தெரியவில்லை? அவள் வேறு இனத்தைச் சேர்ந்தவள்.

காதலிக்கும்போது தடையாக இல்லாத சாதி, கல்யாணம் என்றபோது தடையாக உள்ளது என இவர் கூறியிருந்தால் கூட அவள் ஏன் அன்றே பொலிஸ்வரை செல்லவில்லை? ஓர் ஆடவனுடன் காதல் என்ற பெயரில் சுற்றியவள் கரம் பிடிக்க போலிஸ் வரை செல்லாதது ஏன்?

என் கழுத்தில் தாலி ஏறும் முன் அவள் வந்து தடுத்தி­ருந்தால் இன்று என் வாழ்வு சந்தோஷமாகி­யிருக்கும். அந்தப் பெண் நான் வேலை பார்த்த பள்ளிக்கு அருகில்தான் வேலை பார்த்துள்ளாள்.எனக்கு மணமான பின் என் வாழ்வில் குறுக்­கிடாமல் சென்றிருக்கலாம்.

என் கழுத்தில் தாலி ஏறும் வரைதான் அவளுக்கு தடுக்க உரிமை உண்டு. அதன் பின் குறுக்கிட உரிமை இல்லை. திருமணத்திற்கு முன்பே படுக்­கையை பகிர்ந்திருந்தால் கூட அவளுக்கு என் வாழ்­வில் நுழைய இடம் இல்லை. என் கணவர் அவளையே திருமணம் செய்திருக்க வேண்டும்; இல்லையெனில், திருமணத்திற்கு பின் அவளுட­னான தொடர்பை விட்டிருக்க வேண்டும்.

அவருடன் மேற்படி விஷயத்தைக் கூறி சண்டை­­யிட்டதில், ‘நீ வளைகாப்­புக்கு சென்றி­ருந்தபோது அவளுடைய சகோதரர்கள் என்னை அடித்து அந்த கல்யாணத்தை யாருக்கும் தெரியாமல் செய்து வைத்துவிட்டனர். உன்னி­டம் இதைச் சொன்னால் ஏற்க மாட்டாய் என்று எண்ணி உன்னிடம் மூன்று ஆண்டு­களாக மறைத்தேன்…’ என்றார்.
அவர் கூறும் சமா­தா­னத்தை நான் ஏற்றுக்­கொள்ள­வில்லை. இந்­நிலையில் விஷயம் தெரிந்து நான் அழுகையில் அவரும் என்­னு­­டன் அழுதார். நான் அவரோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் என் பெற்றோரிடம் கூட விஷயத்தைச் சொல்ல­வில்லை…

என் கணவரும் ‘இவ்விஷயத்தை உன் வீட்டில் சொல்ல வேண்­டாம்’ என்றார். 20 நாட்கள்தான் என்­னால் மறைக்க முடிந்தது.என் அழுகையைக் கண்டு என் பெற்­றோர் விஷயத்தைக் கறந்துவிட்டனர்.

என் வாழ்வுக்காக அவர்கள் இவருடன் பேசிய­தில் ஒரு மாதம் தவணை கொடுத்­தனர். அந்த ஒரு மாதத்­தில் வழக்கறி­ஞரை அவர் சந்தித்து பேசி நிமிர்ந்துகொண்டார்.

நாங்கள் கேஸ் போட்டால் அவள் இவரைப் பார்த்து ‘இவர் யாரென்று எனக்குத் தெரி­யாது’ என்று கூறிவிடு­வாளாம். அவ­ரும் (என்னைக் காட்டி) இவள் தான் என் மனைவி, அவள் யாரென்று எனக்கு தெரி­யாது…’ என்று கூறிவிடு­வாராம்.
எங்களிடம் வேறு ஆதா­ரங்­கள் இல்லை. இப்­பொழுது ஆறு மாதமாக நான் என் பைய­னுடன் தனியாக வாழ்கிறேன். அவர், அவளோடு வாழ்கிறார்.

என் வாழ்வை இழந்து, நான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழந்து பரிதவிக்கி­றேன். விதியை எண்ணி கண்ணீ­­ரின் துணையோடு ஒரு மழலையோடு மயங்குகிறேன். இதற்கு மேல் நான் எடுக்க வேண்­டிய முடிவுகளை தயை கூர்ந்து தங்கள் பதிலில் எதிர்­பார்க்கிறேன்.

பதில் :
உன் கடிதம் கண்டேன். வரப்­­போகும் மரு­மகனைப் பற்றி உன் பெற்றோர் தீர விசா­ரிக்­காமல் உன்னை மணம் செய்து கொடுத்தது பெரிய தவறு. நிறைய பெற்றோர் அரசு உத்யோகத்துடன் கூடிய மாப்­பிள்ளை என்றால் எப்படி­யாவது தம் பெண்ணை கட்டிக்கொடுத்து அனுப்பி விட வேண்­டும் என்றுதான் நினைக்­கின்றனரே தவிர மாப்பிள்ளையின் பின்னணி பற்றி யோசிப்பதே இல்லை.
நீயே, உன் கடிதத்தில் மிகத் துணிச்சலாக ஒரு வார்த்தை எழுதியிருக்கிறாய்…

‘என் கழுத்தில் தாலி ஏறும்வரைதான் அவளுக்கு தடுக்க உரிமை உண்டு. அதன்பின் குறுக்கிட உரிமை இல்லை. திருமணத்திற்கு முன்பே படுக்­கையை பகிர்ந்தி­ருந்தால் கூட அவளுக்கு என் வாழ்வில் நுழைய இடம் இல்லை. என் கணவர் அவ­ளையே திருமணம் செய்திருக்க வேண்டும். இல்லை­யெ­னில், திருமணத்திற்குப்பின் அவளுட­னான தொடர்பை விட்டிருக்க வேண்டும்…’

இவ்வளவு தீர்மானமாக பேசும் நீ, அவருடன் சண்டையும் போட்டு எதற்காக உன் கணவரை அவள் வீட்டுக்கே அனுப்பிவைத்தாய்? உனக்கு உரிமையான பொருளை அழுது ஆர்ப்பாட்டம் செய்தா­வது, உன் வசம் வைத்திருக்க வேண்­டாமோ?

உன்னுடைய திருமணம் சட்டப்படி பத்தி­ரிகை அடித்து, உறவினர் முன்னிலையில் நடந்திருந்தால் இரண்டாமவள் உன் கணவரின் முதல் காதலியாக இருந்தாலும்கூட செல்லாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *