Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 30: பரிசாக பெற்ற கடிதத்தாள்!

By  | 

நட்சத்திரங்கள் என்றாலே பிரபலங்கள்… பிரபலங்கள் என்றாலே நட்சத்திரங்கள். எந்தப் பத்திரிகையை வாங்கி புரட்டிப் பார்த்தாலும் பக்கத்துக்குப் பக்கம் மின்னுபவர்கள் சினிமா நட்சத்திரங்களாகத் தான் இருப்பார்கள்.

60களில் தமிழ்நாடெங்கும் பரவலாக வாசிக்கப்பட்டு வந்த பத்திரிகைகளுள் மிக முக்கியமானது ‘பொம்மை’ என்ற சினிமா பத்திரிகை.

சினிமா செய்திகள், கிசுகிசு, நடிகர்களின் பேட்டிகள், பிரபலங்கள் பற்றிய சுவாரஸ்யங்கள், கட்டுரைகள், தொடர்கள் என பல அம்சங்களை பிரசுரித்து வந்தமையால் அன்றைய காலத்தில் மக்களின் விருப்பத்துக்குரிய பத்திரிகையாக மிளிர்ந்தது.

பொம்மையில் இடம்பெறாத அக்காலத்துப் பிரபலங்களே இல்லை என்று சொன்னாலும் தவறில்லை.

வெறும் நூல்களோடு நிறுத்திக் கொள்ளாமல், நாள் தோறும் வெளியாகும் பத்திரிகைகளையும் தவறாமல் வாசிக்கும் பழக்கம் கொண்டவர் ஜெயா. அவரை பேட்டி காண்பதற்காகவும் கருத்துக்கள் கேட்பதற்காகவுமே பத்திரிகையாளர்கள் முண்டியடித்த ஆண்டுகள் அவை.

மேடைப் பேச்சு என்றால் குட்டிக் கதை கூறி பேச்சை ஆரம்பிப்பதும் விருவிருப்பான எழுத்து நடைப் பாணியும் இவரின் புலமையை அம்பலப்படுத்தின.

அதற்கு ஒரு சிறு உதாரணமாக 1966ஆம் ஆண்டு பொம்மை இதழில் ஜெயலலிதா எழுதிய சுயசரிதையை எடுத்துக் காட்டலாம்.

தனக்கு விபரம் தெரிந்த காலம் முதல் சுயசரிதை எழுத ஆரம்பித்த தருணம் வரை, தன் வாழ்க்கையில் நிகழ்ந்த மிக முக்கியமான சம்பவங்கள் ஒவ்வொன்றையும்  உணர்ச்சிபூர்வமாக அவர் அந்த ஆக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தீபாவளி பண்டிகை முடிந்து சரியாக இருபது நாட்கள் கழித்தே சுயசரிதை பிரசுரமாகியிருந்தது.

வணக்கம். இது சாதாரண வணக்கமல்ல. தீபாவளி வாழ்த்துடன் கூடிய வணக்கம்! கல்யாணம் கழிந்த பின் மேளம் எதற்கு? தீபாவளி கழிந்து இருபது நாட்களுக்குப் பின் ஏன் இந்த வாழ்த்து? என்று உங்களில் சிலராவது நிச்சயம் கேட்பீர்கள்……

இப்படியாக சுயசரிதையை ஆரம்பித்தவர், தாமதமான தீபாவளி வாழ்த்து எதற்காக என கடைசி வரை குறிப்பிடவே இல்லை.

வாசகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தால் தான் வாசிப்பில் விருவிருப்பு ஏற்படும் என்பதை அவர் மிகச் சரியாக புரிந்து கொண்டார்.

தமிழ் நாடகத்துறையாக இருக்கட்டும் அல்லது வௌ்ளித்திரை, சின்னத்திரையாகக்கூட இருக்கட்டும்… ஏ.ஆர்.எஸ்.ஐ தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

ஆலங்காடு ராமமூர்த்தி ஸ்ரீனிவாசனை சுருக்கமாக ஏ.ஆர்.எஸ் என்று சொன்னால்தான் அனைவருக்கும் தெரியும்.

1964ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘Under Secretary’’ என்ற நாடகம் மேடையேற்றப்பட்ட போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட நற்பழக்கம் இறுதி வரை (ஜெயாவின் இறுதி வரை) தொடர்ந்தது.

அந்த நாடகத்தில் சோவின் பங்கும் இருந்ததால் அவருடனான நட்புறவும் ஏ.ஆர்.எஸ்.க்கு கிடைத்தது. 

ஜெயாவின் ஆரம்ப கால கலைப்பயணத்தைப் பற்றி நன்கு அறிந்தவர் திரு. ஏ.ஆர்.எஸ்.

நடிக்கும் நேரங்கள் தவிர ஓய்வு நேரங்களில் கார்ட்டூன், கிறுக்கல் சித்திரங்கள் வரையும் பழக்கம் இவருக்கு உண்டு.

1967.02.24 அன்று ஜெயா தனது பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.

அன்றைய தினம் ஜெயாவை வாழ்த்த வந்தவர்கள் அனைவரும் பல்வேறு பரிசுகளை ஜெயாவிடம் கொடுத்தார்கள். ஆனால் திரு. ஏ.ஆர்.எஸ். வித்தியாசமான முறையில் தானே கைப்பட வரைந்த ஒரு லெட்டர் ஹெட்டை பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தார்.

அடிப்படையில் ஜெயா ஒரு நடனக் கலைஞர். கலைகளை நேசிப்பவர்; பூஜிப்பவர். அதை எடுத்துக் காட்டும் விதமாக அந்த லெட்டர் ஹெட் தாளின் இடது பக்கக் கரையில் மேலிருந்து கீழ் வரை ஒரு கோயில் மண்டபத் தூண் நிற்க, அந்தத் தூணின் நடுப்பகுதியில் ஒரு நடராஜர் உருவத்தையும் பரத நாட்டியம் ஆடும் ஒரு பெண்ணின் உருவத்தையும் ஓவியமாக தீட்டியிருந்தார்.

ஏ.ஆர்.எஸ்.இன் கற்பனைக்கு மதிப்பளித்து ஜெயா அந்தப் பரிசை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

அதற்கு பின்னர் கடிதங்கள், பத்திரிகைகளுக்கான ஆக்கங்கள், பதில்கள் எழுத என அனைத்துக்கும் இந்த லெட்டர் ஹெட்டையே ஜெயா பயன்படுத்தி வந்தார்.

அந்த லெட்டர் ஹெட்டில் தான் 1980ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையாளருக்கு ஜெயா ஆங்கிலத்தில் கடிதம் ஒன்றை எழுதினார்.

இந்த ஒரு பெருமையே தன் வாழ்நாள் முழுதும் போதும் என ஏ.ஆர்.எஸ் இன்றும் கூறி ஆனந்தப்பட்டுக் கொள்கிறார்.

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *