Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 33: ஜெயாவிடம் காட்டிய அக்கறை!

By  | 

** ஒரு அங்குலம்

முன்னே நகர்ந்தாலும்

கீழே விழக்கூடிய

ஆபத்து உள்ளதென

எம்.ஜி.ஆர் அறிந்தார்…

பாடலுக்கு ஆடல் என்ற கொன்செப்டை வைத்து எத்தனையோ படங்கள் அந்தக் காலம் தொட்டு உருவாக்கப்பட்டு வருகின்றன.

கதாநாயகன் ஒன்றில் பாடுவார் அல்லது ஏதாவது ஒரு வாத்தியத்தை வாசிப்பார். கதாநாயகி அதற்கு தகுந்தாற் போல் ஆடி சபையை கவர்வார்.

1968இல் வௌியான பா. நீலகண்டன் இயக்கிய ‘கண்ணன் என் காதலன்’ திரைப்படம் இந்த முறையைக் கொண்டே உருவாக்கப்பட்டது.

எம்.ஜி.ஆரை ஒருதலை பட்சமாக காதல் கொள்ளும் ஜெயா, ஜெயாவுடன் தாய்மையுணர்வுடன் மட்டுமே பழகும் எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர் வாணிஸ்ரீ இடையே தோன்றும் காதல், விபத்தொன்றின் மூலம் கால்கள் ஊணமுற்றுப் போன (ஊணமுற்றதைப் போல் நடித்து எம்.ஜி.ஆரின் அனுதாபக் காதலை பெற முயற்சிக்கும் கதாபாத்திரம்) ஜெயாவுடன் எம்.ஜி.ஆருக்கு நிகழும் திடீர் திருமணம், இல்லற வாழ்க்கையின் இன்பத்தை கனவில் மட்டுமே அனுபவிக்கும் ஜெயாவின் சோகம்… இவை யாவும் கலந்து சித்திரிக்கப்பட்டது தான் இந்தப் படம்.

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

பாலுடன் தேன் கனி சேர வேண்டும்

கலைகளை தெய்வமாய் காண வேண்டும்

கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்…

இந்தப் பாடல் படத்தின் மூன்று சந்தர்ப்பங்களில் இசைக்கப்படும்.

ஒன்று, (ஊனமாவதற்கு முன்…) ஆடத் தெரிந்தும் வேண்டுமென்றே ஆடாமல் அமைதியாக உட்கார்ந்திருக்கும் ஜெயாவை ஆட வைப்பதற்காகவே எம்.ஜி.ஆர், பியானோ வாசித்துக் கொண்டு சந்தோஷமாய் பாடுவார்.

இரண்டாவது, நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருக்கும் ஜெயாவை எழுந்து ஆட வைக்க முயற்சித்து எம்.ஜி.ஆர் பாடுவார்.

மூன்றாவது, படத்தின் இறுதிக் கட்டத்தில் ஜெயா இறந்த பின் ஆன்மாவாக வௌ்ளை சேலை அணிந்து வந்து சிறு காட்சியில் பாடி ஆடுவார். (அந்தக் காட்சியுடன் படமே முடிந்துவிடும்)

பாடலுக்கு ஜெயா பொருத்தமாக ஆடவில்லை என்றால் தான் ஆச்சரியம்.

ஜெயாவின் நடன அசைவு, முக பாவம்… ‘ம்’ என்று சொல்லி சுடக்கு போடும் எம்.ஜி.ஆரின் ஸ்டைல் என எல்லாமே எல்லோராலும் முணுமுணுக்கப்பட்டன.

பொதுவாக தனது திரைப்படங்களில் நடிக்கும் பிற நடிகர்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.

ஒரு நாள்… காலை…

‘கண்ணன் என் காதலன்’ படப்பிடிப்பில் நடித்து முடித்த பின், வீட்டுக்கு திரும்புவதற்காக காரில் ஏறினார் எம்.ஜி.ஆர்.

அன்றைய தினம் பகலில் அவருக்கான காட்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால் இயக்குநரை அழைத்து ‘‘மதியம் என்ன காட்சி எடுக்கப் போகிறீர்கள்?’’ என கேட்டார்.

‘‘சக்கர நாற்காலியில் இருந்து மாடிப் படியில் ஜெயலலிதா உருண்டு விழும் காட்சி…” என்று இயக்குநர் கூற காரில் இருந்து மீண்டும் கீழே இறங்கினார் எம்.ஜி.ஆர்.

‘‘அது ரொம்ப ரிஸ்க்கான காட்சியாச்சே. நானும் உடன் இருக்கிறேன். அந்தப் பெண் (ஜெயலலிதா) விழுந்துவிட்டால் என்ன ஆவது?’’ என பதற்றமடைந்து செட்டுக்குள் நுழைந்தார்.

இப்படியான ரிஸ்க்கான காட்சிகளில் டூப் போட்டு ஔிப்பதிவு செய்வது வழக்கம் என்றாலும் படியின் விளிம்பு வரை ஜெயா தடுமாறி வருவதைப் போல் தௌிவாக கெமராவில் பதிக்க வேண்டிய கட்டாயம்.

அப்படி அவர் வரும்போது ஒரு அங்குலம் முன்னே நகர்ந்தாலும் கீழே விழக்கூடிய ஆபத்து உள்ளதென எம்.ஜி.ஆர் அறிந்தார்.

படியின் ஒரத்தை சரியாக அளந்து நாற்காலி முன்னோக்கி கொஞ்சமும் நகராதபடி நாற்காலியின் சக்கரத்தில் கயிற்றை இழுத்துக் கட்டச் சொன்னார்.

கயிறு வலுவாக உள்ளதா, அறுந்து விழக்கூடியபடி தளர்வாக உள்ளதா என பல முறை இழுத்துப் பார்த்தார். அதன் பின் தானே அந்த நாற்காலியில் அமர்ந்து, படி வரை நகர்ந்து சென்று பரிசோதித்தார்.

இப்படி ஒன்றுக்கு பத்து முறை ஒத்திகை பார்த்த பின்னரே ஜெயாவை நடிக்க வைத்தார். அதன் பிறகே காட்சி படமாக்கப்பட்டது. 

‘மின்மினியை கண்மணியாய்…’, ‘சிரித்தால் தங்கப் பதுமை…’ போன்ற பாடல்களில் ஜெயாவை நாயகியாக காட்ட ‘கண்கள் இரண்டும் விழி விளக்காக…’ என்ற வாணிஸ்ரீயுடனான டூயட் பாடலும் உள்ளது.

வாணிஸ்ரீ, ஜெயா இருவரும் நாயகிகளாக சம பங்கை வகித்திருந்தாலும் இவர் இல்லாவிட்டால் கதையே இல்லை என்ற அளவுக்கு ஜெயாவின் கேரக்டர் அமைந்திருந்தது.

படத்தின் முடிவில் ஜெயா இறந்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்காத தருணத்தில் எஸ்.ஏ. அசோகனால் சுடப்பட்டு இறந்துவிடுவதைப் போல் காட்டப்பட்டது.

‘கண்ணன் என் காதலன்’ வெளிவந்த அதே ஆண்டு சிறந்த நடிகையாக தெரிவு செய்யப்பட்டு சென்னை திரைப்பட ரசிகர் மன்றத்தால் ஜெயலலிதாவுக்கு விருது வழங்கப்பட்டதாக ஒரு தகவல்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *