
Cinema
காதல் திருமணம் பற்றி மனம் திறந்த அங்கீதா
ஐம்பத்து மூன்று வயதுடைய நடிகர் மிலிந்த்தை, இருபத்து ஏழு வயதுடைய அங்கீதா எப்படி திருமணம் செய்து கொண்டார் என்பது குறித்து, அங்கீதாவே மனம் திறந்திருக்கிறார். மாடலாக இருந்தவர் சோமன் மிலிந்த். பின், நடிகராக மாறினார். இதுவரை ஐம்பது படங்கள் வரை நடித்திருக்கிறார்.
தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். அவர், கடந்த சில வருடங்களுக்கு முன், மிலன் என்ற பிரெஞ்சு நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட, கடந்த 2009ல் இருவரும் பிரிந்தனர். விவகாரத்தும் பெற்றனர்.
அதையடுத்து, சோமன் மிலிந்த், சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். சினிமாவில் நடிப்பதை மட்டுமே கவனமாக இருந்து செயல்பட்ட மிலிந்த், விமானப் பணிப்பெண் அங்கீதாவின் காதல் வலையில் வீழ்ந்தார். கடந்த ஆண்டு, இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். இந்தத் திருமணம் முரண்பட்ட திருமணம் என எல்லோரும் விமர்சித்தனர். காரணம், இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் 26 ஆண்டுகள். இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் இருவரும் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், தன்னுடைய இந்த காதல் திருமணம் எப்படி அமைந்தது என்பது குறித்து விமானப் பணிப்பெண் அங்கீதா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனம் திறந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
என்னுடைய கணவரை ஆறு ஆண்டுகளுக்கு முன் சந்தித்தேன். ஆனால், இன்றுதான் அவரை சந்தித்து போன்ற உணர்வுதான் என்னிடம் உள்ளது. அவரை முதன் முதலில் நான் சந்தித்த போது, எனக்கு இருபது வயது மட்டுமே. அப்போது, நான் ஏர் ஏசியா நிறுவனத்தில் பணிப் பெண்ணாக பணியில் இருந்தேன்.
அந்த சமயத்தில் நான் உருகி உருகி காதலித்த என்னுடைய முன்னாள் காதலர் ஒரு விபத்தில் இறந்து விட்டார். அந்த இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. தாள முடியாத வலியால் தவித்தேன்; துடித்தேன். அது எனக்கு பேரிழப்பாக இருந்தது. அதன் பின், இரு மாதங்கள் கழித்து சென்னையில் எனக்கு வேலை கிடைத்தது. என்னுடைய சக ஊழியர்களுடன் சேர்ந்து ஒரு ஓட்டலில் நான் தங்கியிருந்தேன்.
அப்போது, சோமன் மிலிந்தும் அந்த ஓட்டலில் தங்கி இருந்தார். அதிர்ஷ்டவசமாக அமைந்த அந்த நிகழ்வைத் தொடர்ந்து, அவரது தீவிர ரசிகையான எனக்கு, அவரை சந்திக்க வேண்டும் போல் இருந்தது. அவரை சந்தித்தேன். இருவரும் சேர்ந்து நடனமாட எனக்கு ஆவலாக இருக்கிறது என மிலிந்திடம் தெரிவித்தேன். அதற்கு அவர் இசைவு தெரிவித்து, என்னுடன் சேர்ந்து நடனமாடினார். அந்த ஆச்சரியத்தில், அவர் மீது நான் காதல் கொண்டேன்.
அதன் பின் இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். அவரிம் இருந்த அன்பு காதலாக மாறியதை அவரிடம் தெரிவித்தேன். அந்தக் காதலை அவரும் ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல; அவருடைய காதலையும் என்னிடம் தெரிவித்தார். அப்போது, என்னுடைய முன்னாள் காதலர் பற்றியும், அவருக்கு ஏற்பட்ட விபத்து குறித்தும் கூறி அழுதேன். அவர் என்னை தேற்றியதோடு, நான் உன்னை ஏற்றுக் கொண்டு விட்டேன். அதனால், உன் முன்னாள் காதலையும் நான் ஏற்றுக் கொண்டு விட்டேன். அந்த விஷயத்தில் எப்போதும் உனக்கு நான் ஆறுதலாக, அரவணைப்பாக இருப்பேன் எனக் கூறினார்.
அதன் பின் தான், அவர் ஒரு தரமான மனிதர் என்பதை உணர்ந்து கொண்டேன். அவர் மீது எனக்கு காதல் அதிகமானது. என்னுடைய கணவராக முழுமையாக உணர்ந்தேன். அது போலவே, அவர் இன்றும் எனக்கு எல்லாவிதங்களிலும் பாதுகாப்பாக இருக்கிறார். அதனால், காதலுக்கு; கணவன் – மனைவி வாழ்க்கைக்கு வயதெல்லாம் ஒரு தடையே கிடையாது. இதில் விமர்சனங்கள் பற்றியெல்லாம் ஒருபோதும் எங்களுக்கு கவலை கிடையாது.
இவ்வாறு அங்கீதா கூறியுள்ளார்.
0 comments