Cinema

கிரேசி மோகன் மறைவு குறித்து பிரபலங்களின் இரங்கல்கள்

By  | 

நடிகர், காமெடியன், எழுத்தாளர், நாடக ஆசிரியர், ஓவியர், வசன கர்த்தா என பன்முக திறமை கொண்டவர் கிரேஸி மோகன் நேற்று உயிரிழந்தார்.

அவரைப்பற்றிய நினைவுகளை பகிர்ந்த பிரபலங்கள்…

முகம் சுளிக்காத வசனம்
மக்கள் முகம் சுளிக்காத வகையில் வசனங்கள் எழுதியவர். இவரது நாடகங்கள், குழந்தைகளுடன் பார்க்கும் வகையில் இருக்கும். கடவுள் படங்களை தத்ரூபமாக வரையக்கூடியவர். கூட்டுக்குடும்பத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அவருக்கு எதிரிகளே கிடையாது என்கிறார் எஸ்.வி.சேகர், நடிகர்

பேரிழப்பு
மாபெரும் கலைஞன் கிரேஸி மோகன். இவரது இழப்பு நகைச்சுவை உலகிற்கு பேரிழப்பு என்கிறார் நடிகை கோவை சரளா.

கோபம் வந்தால்…
கோபம் வரும்போது அதிகமாக நகைச்சுவைகளை கூறி சிரிக்க வைப்பவர் கிரேஸி மோகன். இவரது மறைவு நாடக உலகிற்கும் திரைத்துறைக்கும் பேரிழப்பு என்கிறார் நடிகர் சார்லி.

சிரிப்பு மருந்து
இதயத்திற்கு சிரிப்பு மருந்து கொடுத்தவரின் இதயம் இன்று நின்று போய்விட்டது என இயக்குநர் சரண் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு கொடுத்தவர்
நாங்கள் எல்லாம் சமகாலத்தில் நாடக மேடைக்கு வந்தவர்கள். கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற பெயரில் அவர் தனக்கென்று ஒரு நாடக குழுவை ஆரம்பித்தபோது, அதில் முதல் கதாநாயகனாக நடித்தவன் நான். அவரிடம் ஒரு நாடகத்திற்காக வசனம் எழுதி தருமாறு கேட்க சென்றபோது. வரது… எனக்கு ட்ரூப் கிடையாது. நீ ஹீரோவாக நடி என நகைச்சுவை நாடகங்களில் நடிப்பதற்கு பெரிய வாய்ப்பை கொடுத்தார். நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என டிவி மற்றும் நாடகர் நடிகர் வரதராஜன் தெரிவித்திருக்கிறார்.

கிரேஸி ஒரு கவிஞானி
தமிழ் சினிமாவை நகைச்சுவை உலகமாக மாற்றியவர். என் நெருங்கிய நண்பர். நான், கமல், எழுத்தாளர் சுஜாதா, கிரேஸிமோகன் ஆகியோர் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. ஒருநாள் முழுதும்கூட பேசியிருக்கிறோம். அவரை முழுநேர சினிமா கலைஞனாக மாற்றியது கமல்தான். மீனாட்சி அம்மன் குறித்து நுாற்றுக்கணக்கான வெண்பாக்களை பாடியுள்ளார். அவர் ஒரு கவிஞானி. அவரது இன்னொரு முகம் கவிதைதான். கலைவாணி எல்லா திறமையையும் கொடுத்துவிட்டு வா… என அவரை அழைத்துக்கொண்டாள் என பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் கூறியிருக்கிறார்.

நல்ல மனிதர், எழுத்தாளர்
என்னை சினிமாவில் மறைந்த இயக்குனர் பாலசந்தர் அறிமுகப்படுத்தினார். ஆனால் சினிமாவில் நகைச்சுவை காட்சிகளில் நான் பரிணமிக்க காரணமாக திகழ்ந்தவர் கிரேஸி மோகன். அவர் இயக்கிய ஐயா அம்மா அம்மம்மா நாடகத்தில் நான் நடித்தேன். அந்த நாடகம் நல்ல வரவேற்பை பெற்றது. பிறகு நான் சினிமாவிற்கு சென்ற பிறகு அவரும் சினிமாவிற்கு வந்தார். எந்த அகம்பாவமும் அவரிடம் இருக்காது. பாசுரங்களையும் எழுதத் துவங்கினார். எளிதில் அவரை மறக்க இயலாது என நடிகர் டில்லி கணேஷ் கூறியிருக்கிறார்.

அவர் ஒரு மருத்துவர்

இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அவர் ஒரு மருத்துவர் மாதிரி. சினிமாவில் எங்களது கஷ்டங்களை எல்லாம் நகைச்சுவையால் மாற்றியவர். அவரது இழப்பு எனக்கு மட்டுமல்ல. தமிழ் சினிமா உலகிற்கே பெரிய இழப்பு. இனி இப்படி ஒரு மனிதரை பார்க்க முடியாது என நடிகர் தாமு தெரிவித்திருக்கிறார்.

யாராலும் நிரப்ப முடியாது
கிரேஸியின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. குடும்பத்தை விட நண்பர்கள் வட்டாரம் பெரிது, அவருடைய படத்தில் நானும் நான்கைந்து படங்களில் பணியாற்றி இருக்கிறேன். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என நாசர் தெரிவித்தார்.

அவரிம் இடம் வெற்றிடமே
நல்ல நகைச்சுவையாளர், எல்லோருக்கும் நண்பர், எழுத்தாலும், வசனங்களாலும் அனைவரையும் கவர்ந்தவர். தமிழை ரசிப்பவர். அவரின் மறைவு எல்லோரையும் துயத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவருக்கான இடம் வெற்றிடம் தான் என விவேக் தெரிவித்தார்.

நகைச்சுவையில் ஜாம்பவான்
நகைச்சுவையில் பெரிய ஜாம்பவான். அவரின் காமெடி இடைவெளியே இருக்காது என நடிகை கோவை சரளா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *