Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 37: செருப்பு அணிய தடை!

By  | 

எம்.ஜி.ஆருடன் எத்தனையோ படங்களில் ஜோடியாக நடித்திருந்தாலும் ஜெயாவுக்கு தனித்துவமான ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் ‘அடிமைப் பெண்’.

நளினமான தோற்றத்திலும் வில்லத்தனமான குணத்தை  காட்டிய ஜெயாவின் ஸ்டைல் தான் பெரிதும் பேச வைக்கிறது.

புருவத்தை விரித்து பார்வையை கூர்மையாக்கி பார்ப்பது, கீழ் உதட்டை விரல்களால் கோணலாக்கி ஒரு இழுப்பு இழுப்பது என சுயமாக ஒரு பாணியை உருவாக்கி இயக்குநர் படைத்த பவளவள்ளி ராணிக்கு மேலும் கம்பீரத்தைக் கொடுத்திருப்பார்.

‘வேட்டையன்’ எம்.ஜி.ஆரை சிறையிலிருந்து தப்பிக்க வைத்து ‘ஜீவா’ என்ற ஜெயாவின் கையில் ஒப்படைத்த ஜீவாவின் தாத்தா,

“இவர் நம் தலைவர். இவர் ஒரு குழந்தை. இவரை ஆளாக்கி அறிவூட்டி இவங்க அம்மாகிட்ட ஒப்படைச்சிடும்மா” என்று கூற,

“இவருக்காக எதையும் தியாகம் செய்வேன். ஆனா எதுக்காகவும் இவர தியாகம் செய்ய மாட்டேன் தாத்தா” என்பார் ஜெயா.

“என் தாய்நாட்டின் எதிர்காலத்தையே உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன்” என்றவாறு தாத்தா இறந்துவிடுவார்.

‘அடிமைப் பெண்’இல் ஜெயா பேசிய இது போன்ற வசனங்களுக்கும் பிற்காலத்தில் தோன்றிய அரசியல் சூழ்நிலைக்கும் தொடர்பு இருப்பதாகவே பலரும் சித்திரித்தனர்.

கூன் விழுந்த எம்.ஜி.ஆருக்கு பேச்சுப் பயிற்சி, சண்டைப் பயிற்சி, வாள் பயிற்சி, நீச்சல் பயிற்சி என அனைத்து வித்தைகளையும் சொல்லிக் கொடுக்கும் ‘ஜீவா’ என்ற ஜெயாவின் முகத்தில் எப்போதும் சாந்தத்தை தான் பார்க்க முடியும்.

எம்.ஜி.ஆருக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, தலை சீவிவிடுவது, சாப்பாடு ஊட்டுவது, உறங்க வைப்பது என அனைத்து காட்சிகளும் மக்களின் இதயத்தை கொள்ளை கொண்டவை.

அடிமைப்பெண் படத்தில் உள்ள ஏராளமான காட்சிகளை பாலைவனத்திலேயே படப்பிடிப்பு செய்தார்கள்.

அதற்காக ஜெய்ப்பூர் மற்றும் இந்தியா பாகிஸ்தான் எல்லையிலுள்ள பாலைவனப் பரப்பையே பயன்படுத்திக் கொள்ள எம்.ஜி.ஆர். வழங்கினார்.

அதன்படி பாலைவனத்தை நோக்கி ஜெயலலிதா உட்பட தமது குழுவுடன் சென்றார் எம்.ஜி.ஆர்.

படத்துக்கு தேவையான காட்சிகளை எடுத்து முடிக்கும் வரை அங்கேயே தங்குவது என்றும் தீர்மானித்தார்.

பாலைவனம் என்றாலே சுட்டெரிக்கும் அனல் காற்று, வெயில், சூடு, வறட்சி, அதிக தாகம், தண்ணீர் பஞ்சம் இவற்றைப் பற்றித் தான் நாம் யோசிப்போம். இதைப் பற்றித் தான் அப்போது எம்.ஜி.ஆரும் சிந்தித்தார்.

படப்பிடிப்புக்கு செல்பவர்கள் சிரமங்களை எதிர்கொள்வர் என்பதை கருத்தில் கொண்டு உடனே வண்டி வண்டியாக குளிர்பானங்களையும் இளநீர்களையும் பாலைவனத்துக்கு கொண்டு சென்று குவித்துவிட்டார்.

படக்காட்சிகளுக்கு தேவையான 500க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் பாலைவனத்தைச் சேர்ந்த உள்ளூர்க்காரர்களிடமிருந்தே கொண்டுவரப்பட்டன. அவர்களுக்கும் நடிப்பு சொல்லிக் கொடுக்கப்பட்டது.

ஒட்டகங்களை பராமரிப்பவர்களுக்கும் அதன் மீது சவாரி செய்பவர்களுக்கும்கூட எம்.ஜி.ஆர் வழங்கிய நீர் தாகத்தை தீர்த்தது.

அத்தருணத்தில் தான் பாலைவன மணலில் ‘ஏமாறாதே ஏமாறாதே…’ என்றொரு பாடலும் படப்பிடிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

எப்போதும் போல அப்போதும் நடனத்துக்கு ஜெயா தான் என தீர்மானித்தனர். அந்தப் பாடலுக்கு ரோமானிய நடனத்தை விதம் விதமான ஆடைகளில் வித்தியாசமான முறையில் கையாண்டிருப்பார் ஜெயா.

வெப்பத்துக்கு நிகரான அதிகமான மைனஸ் டிகிரி குளிரும் கொடுமைப்படுத்தத் தொடங்கியது. நடிகர்கள் குளிரை எதிர்கொள்ளும் அளவுக்கு ஆடைக்கு மேல் ஆடைகள் அணிந்து நடித்துக் கொண்டிருந்தனர்.

ஜெயா உட்பட சில நடிகைகள் மட்டுமே மெல்லிய ஆடை அணிந்து குளிருடன் போராடி நடித்துக் கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் மணலின் சூடு தாங்க முடியாமல் எம்.ஜி.ஆர் உட்பட எல்லோரும் காலில் செருப்பு அணிந்து கொண்டார்கள்.

ஆனால் படக்காட்சியின் அவசியம் கருதி ஜெயாவுக்கு மட்டும் செருப்பு அணிய அனுமதிக்கவில்லை.

எப்படியிருக்கும் ஜெயாவுக்கு…? மென்மையான பாதம் வேறு. எவ்வளவோ சமாளித்துப் பார்த்தார். ஆனாலும் அவரால் வெப்பத்தை தாங்க முடியவில்லை.

ஜெயாவின் அசௌகரியத்தை கவனித்த எம்.ஜி.ஆர் ஜெயாவை செருப்பு அணிந்துகொள்ளுமாறு கூறினார். ஆனால் அங்குள்ளவர்கள் ‘வேண்டாம்… செருப்பு அணிந்தால் காட்சிக்கு பொருத்தமாக இருக்காதே” என்றார்கள்.

அவர்களின் பேச்சை எம்.ஜி.ஆர் கேட்பதாக இல்லை. தொலைவில் உள்ள வாகனத்தில் கிடந்த ஜெயாவின் செருப்புகளை எடுத்துவருமாறு பணியாள் ஒருவரை பணித்தார். உடனே அவரும் செருப்பை எடுத்து வர ஓடினார்.

சென்றவரோ திரும்பி வர தாமதமாகிவிட்டது. சூடு தாங்காமல் துடித்தார் ஜெயா. அதைக் கண்டு தாங்க முடியாமல் எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?

படப்பிடிப்பை உடனே ரத்து செய்துவிட்டு ஜெயாவை அப்படியே குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு வாகனத்தை நோக்கி சென்றாராம்.

இந்தக் காட்சியை அங்கிருந்த அனைவரும் உறைந்து  நின்று பார்த்துள்ளனர்.

இந்த நிகழ்வை பின்னர் ஒரு பேட்டியில் நினைவுபடுத்திக் கூறிய ஜெயா, ‘எம்.ஜி.ஆர் திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் நாயகன் தான்” என்றும் சொல்லி சிரித்தார்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *