Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 41: நிதிக்காக கொடுத்த நகைகள்!

By  | 

நடிப்பு தான் இவரின் முழு நேர உத்தியோகம். நடித்து முடிக்கும் நாட்களில் சம்பளம் கைக்கு வந்துவிடும்.

ஆடிப் பாடி நடித்து பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதும், பொது நலம் பற்றி சிந்திப்பவராகவும் ஜெயா இருந்திருக்கிறார்.

60களில் ஜெயாவின் நடனம் பல மேடைகளை அலங்கரித்தன. 1965இல் இந்தியா பாகிஸ்தானுக்கிடையே போர் நிகழ்ந்தது. அத்தருணம் எல்லையில் போராடிக் கொண்டிருந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு நிதியுதவி செய்வதற்காக திரையுலக நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து ‘நட்சத்திர இரவு’ என்ற நிகழ்ச்சியை நகரங்களின் பல பகுதிகளிலும் நடத்தி வந்தனர். விழாவை ஒழுங்கமைத்தவர் சிவாஜி கணேசன்.

அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நிதியை அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் கொடுப்பதாக விழாவில் பங்கேற்ற நடிகர்கள் தீர்மானித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெயாவும், தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி பிரதமரிடம் கொடுத்திருக்கிறார். அந்த செய்தியும் பத்திரிகைகளில் வந்திருந்தது.

சில நாட்களில் மீண்டும்,

இந்திய எல்லையில் போராடிக் கொண்டிருந்த இராணுவ வீரர்களை மகிழ்விக்கும் பொருட்டு, அவர்களின் முன்பாக நிகழ்ச்சியை நடத்தலாம் என திரை நட்சத்திரங்கள் நினைத்தார்கள். அதற்கான ஏற்பாடுகளை கண்ணதாசனின் சகோதரரான ஏ.எல்.சீனிவாசன் செய்தார்.

இதன்படி நிகழ்ச்சியை நடத்துவதற்காக 25.09.1965 அன்று, நட்சத்திரக் குழுவினர் டெல்லி விமான நிலையத்துக்கு சென்றனர். பின் அங்கிருந்து பாகிஸ்தானின் எல்லையோரப் பகுதியாக விளங்கும் பஞ்சாபில் உள்ள அலவாராவில் நிகழ்ச்சி செய்தனர்.

ஏராளமான நடிகர்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள, அதில் ஓர் அங்கமாக சிவாஜி கணேசனும் நடிகர் கோபால கிருஷ்ணனும் சேர்ந்து வீரபாண்டிய கட்டப்பொம்மன் ஜாக்சன் துரை சம்பாஷணையை நடித்துக் காட்டினர். நாட்டியப் பேரொளி பத்மினி மீரா பஜனுக்கு நடனமாடினார்.

அந்த வரிசையில் ஜெயாவும் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் இடம்பெற்ற ‘என்ன என்ன வார்த்தைகளோ…’ பாடலுக்கு ஆடினார். 

நிகழ்ச்சியை சிறப்பாக நடாத்தி முடித்த நட்சத்திரக் குழுவினர், அங்கிருந்து டெல்லிக்கு சென்று அன்றைய ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அங்கும் ஜனாதிபதி முன்னிலையில் ஒரு நிகழ்ச்சி. 

பி.சுசீலா ‘கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல…’ பாடலை எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாட, அங்கும் ஜெயா சிறப்பு நடனத்தை வழங்கினார். இதனால் அவருக்கு ஜனாதிபதியிடம் மிகச் சிறந்த பாராட்டு கிடைத்தது.

***

1966.02.06 அன்று மாலை 6.30 மணிக்கு திருச்சி தேவர் மன்றத்தில் நடன நிகழ்ச்சியொன்று எஸ்.வி. ஜனார்த்தனம் என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கான விளம்பரப் போஸ்டரையும் அவர் அச்சடித்தார். அதில் ‘தங்கச்சிலை பெற்றெடுத்த தந்தச்சிலை, ஸ்ரீதர் கண்டெடுத்த புதுப் பாவை, திரையுலக தாரகை, குமாரி ஜெயலலிதா’ என பல அடைமொழிப் பட்டங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியை பார்ப்பதற்கான அனுமதி டிக்கெட்டின் விலை வெறும் 2 ரூபாய் தான். அந்தக் காலத்தில் அதுவே அதிகம் தானே. அப்படியிருந்தும் ஜெயாவை நேரில் பார்ப்பதற்கு லட்சம் பேர்  திரண்டு வந்தனர்.

***

ஒரு சமயம்…

திரைப்பட இசைக் கலைஞர்கள் தங்களுக்கென சொந்தக் கட்டடம் ஒன்றைக் கட்ட தீர்மானித்தனர்.

கட்டடம் கட்டுவதற்கு போதுமான பொருளாதார வசதி இல்லாததால் திரை நட்சத்திரங்களை இணைத்து ‘கலை விழா’ ஒன்றை நிகழ்த்தி, அதன் மூலம் பணத்தை திரட்டி, கட்டடம் கட்டுவதாகவும் ஓய்வு பெற்ற இசைக் கலைஞர்களுக்கு உதவி செய்வதாகவும் முடிவெடுத்தனர்.

இக்கலைவிழா மூன்று நாட்கள் நிகழ்ந்தது.

முதலாம் நாள் விழாவை ஆரம்பிக்கும் முகமாக எம்.ஜி.ஆர். ஆரம்ப உரையை வழங்கினார்.

‘இவரைக் காண்பதே அபூர்வம்’ என்று நாம் நினைக்கக்கூடிய பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் அப்போது பார்வையாளர்களுக்கு டிக்கெட் விற்கும் எளிய பொறுப்பை ஏற்றார்.

அந்த நிகழ்வில் ஜெயலலிதாவின் நடனமும் நன்றியுரையும் இடம்பெற்றிருந்தது. அவரின் நடனத்தை காண ஜெயாவின் மேலை நாட்டு ரசிகர்களும் வருகை தந்திருந்தனர்.

இரண்டாம் நாள் திரு. என்.டி. ராமராவ் தலைமை வகித்தார். மூன்றாம் நாள் சிவாஜி கணேசன் தலைமையேற்றார்.

பிற்காலத்தில் ஜெயலலிதா போன்ற பழம்பெரும் பிரபலங்களை காண்பதற்கே அரிது என கண்டு வியக்கிறோம்… ஆனால் அவர்கள் பணியாற்றிய ஆரம்ப காலங்களில் காட்சிக்கு எளிமையானவர்களாகவே வாழ்ந்துள்ளனர்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *