Articles

நான் பஞ்சர் போட்டால் டயர் சீக்கிரத்தில் கழறாது- பார்வதியம்மா!

By  | 

ஆண்களே செய்ய சிரமப்படும் தொழிலை ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, அதுவும் வயதான காலத்தில் விருப்பப்பட்டு, எந்தவித மன வருத்தமுமின்றி செய்துவருகிறார் பார்வதி அம்மா. டயர் கடையொன்றில் டயர்களுக்கு ‘பஞ்சர்’ போடும் வேலையை செய்யும் இவரைப் பற்றி கேள்விப்பட்டேன்.

71 வயதான இவர், லிந்துலை தலவாக்கலை பகுதியை சேர்ந்தவர் என்பதை அறிந்து அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தேடிச் சென்றேன். அப்போது அவர் என்னுடன் உரையாடுகையில், தனது தொழில் அனுபவங்களையும் பெண்களுக்கு சில கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார்.

“நான் டயர் கடையில் கடந்த 19 வருடங்களாக வேலை செய்து வருகின்றேன். எனது சொந்த இடம் பண்டாரவளை. எனக்கு நான்கு பிள்ளைகள். நால்வருக்கும் திருமணம் முடித்து வைத்துவிட்டேன். இதுவரை காலமும் இந்த மலையகமே எங்களை வாழ வைக்கிறது.

எனது கணவர் இறந்து 19 வருடங்கள் ஆகின்றன. கணவர் என்னை விட்டுப் போனதற்கு பிறகு பண்டாரவளையில் பிள்ளைகளையும் வீட்டையும் விட்டுவிட்டு வந்து, லிந்துலையில் உள்ள எனது அக்காவின் மகளோடு தங்கிவிட்டேன். இந்த டயர் கடையும்கூட அவர்களுடையதுதான்.

இதில் நான் வேலை செய்வேன் என்று நினைக்கவேயில்லை. ஆனால், ஆர்வம் இருந்தது. நான் கடைக்கு வந்த ஆரம்பத்தில், கடையில் வேலை செய்தவர்கள் என்னை பார்த்து, “நாங்க வேல செய்யுறப்ப கொஞ்சோ பாத்துக்கிட்டா நாங்க இல்லாத நேரத்துல நீங்க இந்த வேலய செய்யலாந்தானே.. முடியாதுன்னு எதுவுமே இல்லயே… கொஞ்சோ பழகித்தா பாருங்களே அம்மா” என்று நக்கலாக கூறினார்கள்.

அப்படியே ஒவ்வொரு நாளும் அவர்கள் செய்வதை ஓர் ஓரமாக நின்று மிகவும் நுணுக்கமாக பார்த்துக்கொள்வேன். அப்போது ‘நானும் இதை செய்து பார்க்க வேண்டும்’ என்ற எண்ணம் எனக்குள் வந்தது.

மெதுவாக டயர்களை தூக்கிப் பார்த்தேன்…. அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை பயன்படுத்தி பார்த்தேன், அவர்கள் ஓய்வாக அமரும் நேரங்களில் வேலைகளை நானே செய்ய ஆரம்பித்தேன். இப்படியாக அன்று தொடங்கிய பஞ்சர் வேலை இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது…” என்றவரிடம் பஞ்சர் போடும் முறை பற்றி கேட்டேன்.

“முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், பேருந்து இப்படியாக எல்லா வாகனங்களுக்கும் பஞ்சர் போட்டுவிடுவேன். முதலில் வாகனங்களில் உள்ள நட்டுகளை ‘சாவி’ கொண்டு திருக (ப்ரூள்) வேண்டும்.

பின்னர், ஜெக் அடித்தல்… வாகனத்தை உயர்த்தி வைக்கும் கருவி கொண்டு வாகனத்தை உயர்த்தி வைத்துவிட்டு, அதன் பின்னரே டயரை வாகனத்தில் இருந்து கழற்றி எடுக்க வேண்டும். அவ்வாறு கழற்றி எடுத்து, அதில் உள்ள ‘ரிம்’களை வேறு பிரித்து, காற்றை உட்செலுத்திப் பார்க்கும் போது உள்ளே துவாரங்கள் இருந்தால் நன்றாக தெரியும். அவற்றுக்கே பஞ்சர் போடுவோம். டயர்களின் உள்ளே ஆணி, போத்தல் ஓடுகள், தகரத்துண்டுகள் எல்லாம் கிடக்கும். அவற்றை அகற்றிவிடுவோம்.

அதன் பின்னர் மறுபடியும் ‘டியூப்’ போட்டு காற்றை உட்செலுத்தி பஞ்சர் போட்டு கொடுப்போம். எத்தனையோ பேர் கூறியிருக்கிறார்கள், நான் பஞ்சர் போடும் டயர்கள் சீக்கிரத்தில் கழன்று போகாது என்று.

ஆரம்பத்தில் பயமாகத்தான் இருந்தது. இயந்திரங்கள், மின்சாரம் இவற்றில் அல்லவா வேலை செய்ய வேண்டும்! ஆனால், நாளாக ஆக பழகிவிட்டது.

தற்காலத்தில்தான் இந்த மாதிரியான இயந்திரங்கள் எல்லாம். ஆரம்ப காலங்களில் எல்லாம் கைகளையே பயன்படுத்தி இதுபோன்ற ‍வேலைகளை செய்தார்கள்.

சில நேரங்களில் கடையில் ‘காசாளராகவும்’ இருப்பேன். முச்சக்கர வண்டிகளுக்கு ’80ரூபாய்’, பெரிய டயர் வாகனங்களுக்கு ‘120 ரூபாய்’… இப்படியாக அந்த வாகன டயர்களின் அளவை பொறுத்து பணத்தை பறிமுதல் செய்வோம். ஒரு நாளைக்கு எப்படியும் 3000, 4000 என்றவாறு வருமானம் கிடைக்கும்.

‘முடியாது’ என்று நினைக்காமல் எல்லா வாகனங்களுக்கும் பஞ்சர் போட்டுக் கொடுப்பேன். அனைவரும் ஆச்சரியமாக என்னை பார்ப்பார்கள். டயர் எவ்வளவு கனமாக இருந்தாலும் சாதாரணமாக தூக்கிவிடுவேன்.

உண்மை சொல்லப்போனால், எனக்கு ஒவ்வொரு நாளும் நிறையவே கண்திருஷ்டி பட்டுவிடும். பார்ப்பவர்கள் எல்லாம் என்னை படம் பிடித்துக் கொண்டும், கையில் எவ்வளவேனும் பணம் கொடுத்துவிட்டும் செல்வார்கள்.

இல்லையென்றால், என்னையும் அவர்களுடனே கூட்டிச் செல்வதாக கூறி நிற்பார்கள்.

வேலை சற்று குறைவாக உள்ள நேரங்களில் வீட்டுத் தோட்டமும் செய்கிறேன். சிறிய தோட்டம் என்றாலும் அதன் மூலமும் நிறைய நன்மைகளை பெற்றுக்கொள்கிறேன்.

நான் இருக்கும் இடம் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதே போலதான் இந்த கடையையும் தெய்வமாக மதிக்கின்றேன். காலையில் 7.30 மணியளவில் கடையை திறந்து கூட்டி, கழுவி துப்பரவு செய்து, இறைவனுக்கு தீபம் ஏற்றி வணங்கிவிட்டு வேலையை ஆரம்பிப்பேன். மீண்டும் இரவு 7.30 மணியளவில் வேலைகளை முடித்துவிட்டு கடையை பூட்டிவிடுவேன்.

நான் சம்பளம் வாங்குவதுமில்லை, எதிர்பார்ப்பதுமில்லை.  காரணம், இங்கு என்னை நன்றாகவே பார்த்துக் கொள்கிறார்கள். நேரத்துக்கு உணவு, மருந்து, ஊட்டச்சத்துள்ள பால் மா, நிம்மதியான தூக்கம் இப்படியாக எல்லாமே கிடைக்கிறது. ஆக, இவர்களிடம் நான் வேறு எதையுமே எதிர்பார்ப்பதில்லை. வீட்டுக்கு செல்வதென்றால்கூட கையில் ஒரு தொகை பணம் கொடுத்தனுப்பி வைப்பார்கள். மேலும், ஒவ்வொரு நாளும்  எனது வங்கிக் கணக்கில் ‘200 ரூபாய்’ வீதம் சேமித்து வைக்கிறார்கள். 

71 வயதாகிவிட்டது… இருப்பினும் என் கை, கால் இயங்கும் வரைக்கும் நான் இதே ஊக்கத்துடன் வேலைகளை செய்துகொண்டிருப்பேன். அதுமட்டுமல்லாது, என்னால் முடிந்தவரை இல்லாதவர்களுக்கும் கொடுப்பேன். எதையும் பூட்டி வைத்து, எந்த பிரயோசனமும் இல்லை. இல்லாதவர்களுக்கு கொடுப்பதிலேயே எனக்கு மனதிருப்தி… 

இந்தக் காலத்தில்  எத்தனையோ பெண்கள் வேலை தேடி எப்படியெல்லாமோ அலைகிறார்கள். அவ்வாறானவர்கள் ‘என்னால் முடியாது’ என்று நினைக்காமல் அனைத்து தொழில்களையும் முடிந்தவரை தெரிந்து வைத்திருக்க பழகிக்கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு நேரத்தில் அவை நமக்கு உதவியாக இருக்கும்….” என்று கூறிய பார்வதி அம்மாவின் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பார்த்து நான் மெய்சிலிர்த்துப் போனேன்.

சி.துஷியந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *