Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 43: தவறவிட்ட தேசிய விருது!

By  | 

‘ஹிந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பாக இல்லாமல் இருந்திருந்தால், அப்போதே அவருக்குத் தேசிய விருது கிடைத்திருக்கும்’


1970ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு திருச்சி ராஜா கலையரங்கில் ஒரு விழா நடந்தேறியது.
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. T.D. சுந்தர்ராஜின் தலைமையேற்றார்.
அவ்விழாவை ஒழுங்குபடுத்திய சுராதி கலைமன்றம், அதுவரை அறிவு சார் மேதைகளுக்கும் கலைஞர்களுக்கும் பல பட்டங்களை வழங்கி கௌரவித்திருந்தது.
அன்றைய தினம் வழங்கப்பட்ட பட்டத்துக்கு சொந்தக்காரரானார் கலைச்செல்வி ஜெயலலிதா. மன்றத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தியும் கிரீடம் அணிவிக்கப்பட்டும் ‘நவரசத்தாரகை’ என்ற பட்டத்துக்கான சான்றிதழ் ஜெயாவிடம் கையளிக்கப்பட்டது.


தொடர்ந்து அவர் நடித்த என் அண்ணன், தேடி வந்த மாப்பிள்ளை, அனாதை ஆனந்தன், எங்கிருந்தோ வந்தாள், எங்கள் தங்கம், பாதுகாப்பு போன்ற படங்கள் வௌியாகின.
என் அண்ணன், தேடி வந்த மாப்பிள்ளை, எங்கள் தங்கம் ஆகிய படங்களை எம்.ஜி.ஆருடன் நடித்தார்.
எங்கிருந்தோ வந்தாள், பாதுகாப்பு ஆகியவற்றில் சிவாஜியுடனும் அனாதை ஆனந்தன் ஏ.வி.எம். ராஜனுடனும் இணைந்து நடித்திருந்தார்.
மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கிய ‘எங்கள் தங்கம்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் சம்பளமில்லாமல் நடிக்க ஜெயா ஒப்புக் கொண்டார்.
படத்தில் பல சுவாரஸ்யங்கள் புகுத்தப்பட்டிருக்கும்.
அப்போது சிறுசேமிப்புத் துறை தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். படத்தின் தொடக்கத்தில் எம்.ஜி.ஆராகவே வந்து நிதி சேர்ப்பதைப் போன்ற ஒரு காட்சி உண்டு.
தொப்பி, கண்ணாடியுடன் தோன்றும் நிஜ எம்.ஜி.ஆரிடம், படத்தில் தங்கம் கதாபாத்திரத்தில் வரும் கதாநாயகன் எம்.ஜி.ஆர் நிதி அளிப்பது போல் காட்டப்பட்டிருக்கும்.
அதைப் போல் மற்றுமொரு காட்சி…
‘தங்கம்’ எம்.ஜி.ஆருக்கு தமிழக அரசின் லொட்டரி சீட்டில் பரிசு கிடைத்துவிடும். பேரறிஞர் அண்ணாவே நேரடியாக வந்து அவருக்கு அந்தப் பரிசை வழங்கும் காட்சியும் காணப்படும். (கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரும் மேடையில் அமர்ந்திருப்பார்கள்.)
படத்தில் எம்.ஜி.ஆர் ஜெயா தோன்றும் “நான் அளவோடு ரசிப்பவன்…” என்றொரு டூயட் பாடலுண்டு.
அந்தப் பாடலுக்கு கவிஞர் வாலி வரிகளமைத்த விதமே வினோதம்தான்.
இடம் : மேகலா பிக்சர்ஸ் நிறுவன அலுவலகம்…
“நான் அளவோடு ரசிப்பவன்…” என்று வாலி முதல் வரியை எழுதிவிட்டார். அடுத்த வரியை யோசித்தார்… யோசித்தார்…. வரவே இல்லை.
அப்போது அங்கு வந்த கருணாநிதி,
“என்ன… பல்லவி எழுதிவிட்டீர்களா?” என்றார்.
எழுதியதை சொன்னார் வாலி,
“நான் அளவோடு ரசிப்பவன்…” என்று.
“எதையும் அளவின்றி கொடுப்பவன்…” என்று அடுத்த வரியை எடுத்துக் கொடுத்தார் கருணாநிதி.
அதன் பிறகு அடுத்தடுத்த வரிகளை அள்ளித் தௌித்தார்.
அந்தப் பாடலே இசை வடிவம் பெற்று படமாக்கப்பட்டது.
ஜெயா, எம்.ஜி.ஆர் பாடலுக்கு நடிக்க, கவிஞர் வாலி வரிகளை எழுதியதாக வரலாற்றில் பதியப்பட்டது. ஆனால் அந்த ஒரு வரிக்கு உரிமையாளர் கலைஞர் தான்.
காலத்தால் பிளவுபட்டவர்களை சேர்ந்தே பயணிக்க வைத்தது அந்தக் காலம்…


கிலோனா என்ற ஹிந்திப் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் எங்கிருந்தோ வந்தாள்.
அதுவரை சிவாஜியின் நடிப்பை ஆராதித்தவர்கள் அந்தப் படத்தைப் பார்த்து சிவாஜியிடம் வீரியம் குறைந்ததைப் போல் உணர்ந்தார்கள்.
அதற்கு சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை உதாரணம் காட்ட விரும்புகிறேன்.
சம்பவம் இடம்பெற்ற காலத்தில் கலைஞர் முதலமைச்சராக இருந்தார். ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவர்.
குங்குமம் பத்திரிகையில் கேள்வி பதில் பகுதியொன்றை எழுதி வந்தார் கவிப்பேரரசு வைரமுத்து.
அப்பகுதிக்கு வாசகர்கள் எழுதியனுப்பும் கேள்விகளுக்கு வைரமுத்து பதிலளிப்பார்.
அப்படி ஒரு சமயம், வாசகர் ஒருவர்,
‘ஜெயலலிதா நடித்ததில் உங்களுக்குப் பிடித்த படம் என்ன?’ என கேள்வி அனுப்பியிருந்தார்.
“எங்கிருந்தோ வந்தாள்” என்று பதிலெழுதிய கவிப்பேரரசு, அதை விரும்புவதற்கான காரணத்தையும் தெரிவித்தார்.
“அந்தப் படம் மட்டும் ‘கிலோனா’ என்ற ஹிந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பாக இல்லாமல் இருந்தால், அப்போதே அவருக்குத் தேசிய விருது கிடைத்திருக்கும்’ என்றார்.
இந்தப் பதிலை பிரசுரிக்கலாமா, வேண்டாமா என ஆசிரியர் குழம்பியிருந்தார்.
தீர்வு காண்பதற்காக இந்தப் பதிலை அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் காண்பித்தார்கள். அவர் அதை வாசித்துப் புன்னகைத்துவிட்டு “பிழையொன்றுமில்லையே… பிரசுரிக்கலாமே…” என்றாராம்.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஒருவரை பாராட்டி எழுதப்பட்ட வரிகளுக்கு கலைஞர் அளித்த வரவேற்பு அனைவரையும் பூரிப்படையச் செய்தது.
எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவையும் கலைச்செல்வி ஜெயலலிதாவையும் இரு வேறுபட்டவர்களாக பார்க்கும் பெரிய மனதும் கலைஞருக்கு இருந்திருக்கிறது!

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *