Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 44: விடிந்தது தெரியாமல் நடித்த காட்சி!

By  | 

கதாநாயகி என்றாலே காதலிக்க மட்டும் தான்; அவர்களது நடிப்பில் அழுகை, வெட்கம் மட்டுமே கலந்திருக்கும்… என்ற பார்வையை மாற்றியது ‘எங்கிருந்தோ வந்தாள்’ திரைக்கதை.

புகழ்பெற்ற கவிஞரான சிவாஜி (கதாநாயகன் சேகர்), தான் காதலித்த பெண் வேறொரு திருமணம் செய்துகொண்டு தன் கண் முன்பாகவே இறந்துவிடுவதால் அந்தக் காட்சியை பார்த்ததும் மன நோயாளியாகிவிடுவார்.

பல ஆண்களுக்கு முன் மாளிகையில் நடனமாடி, அவர்கள் தூக்கியெறியும் பணத்தில் பிழைப்பு நடத்தும் கலையரசி ராதாவாக முதல் காட்சியில் தோன்றுவார் ஜெயா.

ஒரு தேவதாசிக்கு மகளாக வளர்ந்தாலும் சேற்றில் மலர்ந்த செந்தாமரையாக களங்கமின்றி காணப்படும் ஜெயாவுக்கு சேகர் என்ற கவிஞரின் கவிதைகள் மீது அலாதி பிரியம்.

மன நோயாளியான சிவாஜியை காப்பாற்ற அவரது வீட்டுக்கு ஜெயா அழைத்துச் செல்லப்படுவார். புத்தி பேதலித்ததற்கான காரணத்தை அறிந்து கொண்டு அவரை குணப்படுத்த பல விதத்தில் முயற்சி செய்வார்.

அந்த முயற்சிகளுக்கிடையே அவரால் பலாத்காரப்படுத்தப்பட்டு வயிற்றில் கருவை சுமக்கும் தருணத்தில் எத்தனையோ அவப்பெயர்களை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை. அனைத்தையும் சிவாஜிக்காகவும் தன் வயிற்றில் வளரும் குழந்தையின் எதிர்காலத்துக்காகவும் ஜெயா தாங்கிக் ;கொள்வார்.

படத்தின் இறுதிக் காட்சியில் சிவாஜிக்கு பைத்தியம் தெளிந்து பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார். வீட்டில் உள்ள அனைவரையும் நினைவில் வைத்திருக்கும் சிவாஜி ஜெயாவை பார்த்து “யார் இந்தப் பொண்ணு?” என்று கேட்டவுடன் சோகமும் அதிர்ச்சியும் கலந்த ஜெயாவின் முகபாவத்துக்கே ஏகப்பட்ட விருதுகள் கொடுக்கலாம். அதன் பிறகுதான் அதுவரை பார்த்திராத ஜெயலலிதாவின் திறமையான நடிப்பு வெளிப்படும்.

காட்சிகளுக்கிடையே அருமையாக எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் உருவான பாடல்களும் படத்துக்கு அழகை சேர்த்திருக்கும்.

அதில் சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே… என்ற பாடல் மிக அருமை.

பாடலின் தொடக்கத்தில் நாயகி சிரிக்கும் சிரிப்புக்கு நாயகன் ஸ்வரங்கள் சேர்த்துப் பாடுவது போன்ற கற்பனைக்கு குரல் கொடுத்திருப்பார்கள் டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும்.

அது கேட்பதற்கு மட்டுமல்ல, பார்ப்பதற்கும் புதுமையாகவே இருக்கும். அந்தச் சிரிப்புக்கு ஜெயா காட்டும் பாவமும் பைத்தியக்காரத்தனத்தில் ஓடிக் குதித்து பாடி நடிக்கும் முயற்சியும் அருமை தான்.

இந்தப் பாடல் மைசூர் பிருந்தாவனத்தில் படமாக்கப்பட்டது.

‘இரண்டு நாட்கள் மட்டுமே சூட்டிங்கில் இருப்பேன். அதற்கு மேல் ஒரு நாள் கூட தங்கியிருந்து என்னால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது.” என்றாராம் ஜெயா.

ஜப்பானில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதாக ஒப்புக்கொண்ட ஜெயா, வேறு சில படக்காட்சிகளையும் அவசரமாக முடித்துக் கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டதே அந்த இரண்டு கெடுவுக்கு காரணம்.

ஆனால் சென்ற முதல் நாளே கடுமையாக மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து அடைமழை பெய்ததால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போய்விட்டது.

கொஞ்ச நேரம் மழை நின்றுவிட்டாலும் படப்பிடிப்பு வேலைகளில் இறங்கிவிடலாம் என சிவாஜியும் ஜெயாவும் மேக்கப் போட்டுக் கொண்டும் டச்சப் செய்து கொண்டும் இருந்தார்கள்.

படப்பிடிப்புத் தளத்திலேயே ஒதுக்கப்பட்ட இடத்தில் பகலுணவையும் உண்டார்கள். ஆனாலும் மழை விடவில்லை. முதல் நாள் முழுவதும் பாடல் காட்சியை பதிக்க முடியாமல் போய்விட்டது.

இன்னும் ஒரு நாள் தான் உண்டு. அன்று எப்படியாவது வேலையை முடித்துவிட வேண்டும் என இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தரும் பாலாஜியும் முடிவெடுத்தனர்.

மழை நிற்க வேண்டி மைசூர், சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு பாலாஜி அர்ச்சனை செய்ததாகவும் அதனால் தானோ என்னவோ மழை நின்றுவிட்டதாகவும் ஒரு தகவல்.

சிவாஜியும் ஜெயாவும் மேக்கப்புடனேயே முழு நேரமும் இருந்ததால் மழை விட்டு வெயில் வந்தவுடன் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பகல் பொழுதில் ஆரம்பித்த படப்பிடிப்பு வேலைகள் இரவு முழுவதும் தொடர்ந்தது.

ஓய்வின்றி நடிகர்கள் கடுமையாக நடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இயக்குநர் தனது கைக்கடிகாரத்தை பார்த்தார். விடியற்காலை மணி 4 ஆகியிருந்தது. உடனே ஜெயா உட்பட அனைவருக்கும் குட் மோர்னிங் சொன்னார். அப்போது தான் அங்குள்ளவர்களுக்கு பொழுது விடிந்ததே தெரிந்;தது,

ஜெயா சொன்னபடி, சரியாக இரண்டு நாட்களில் படப்பிடிப்பு வேலைகள் முடியவே சிறிது நேரம் கூட ஓய்வெடுக்காமல் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்கள்.

காளிதாசனின் வரலாற்றுக் காவியமான சாகுந்தலத்தின் முக்கிய கதாபாத்திரங்களான துஷ்யந்தன் சகுந்தலையின் கதையின் முன் பகுதியை பதித்த “காளிதாச மகாகவி காவியம் கன்னி சகுந்தலை என்னும் ஓவியம்….” என்ற மற்றுமொரு பாடலில் சகுந்தலையாக ஜெயாவும் துஷ்யந்தனாக சிவாஜியும் தோன்றி நடித்திருப்பார்கள்.

 படத்தில் முடிவில் ஒரு காட்சி.  

சிவாஜி, முழுவதுமாக குணமடைந்து பழைய நிலைக்கு திரும்பிவிடுவார். ஆனால் பைத்தியமாக இருக்கும் போது அறிமுகமானதால் ஜெயாவையும் அவர் செய்த பணிவிடைகளையும் தன்னால் பலாத்காரம் செய்யப்பட்டதையும் மறந்துவிடுவார்.

எப்படியாவது சிவாஜிக்கு பழைய சம்பவங்களை நினைவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என ஜெயா எடுக்கும் முயற்சிகள் தான் படத்தின் ஹைலைட்.

பைத்தியமாக இருக்கும் போது நிகழ்ந்த ஒவ்வொரு விடயத்தையும் செய்து காட்டி, “இப்போ ஞாபகம் வருதா… இப்படியெல்லாம் பேசுவீங்களே… கொஞ்சம் நெனச்சுப் பாருங்களேன்” என்று அழுதுகொண்டு கேட்க, சிவாஜி எதுவுமே நினைவில்லை என்பதைப் போல்  சிரித்துக் கொண்டு தலையை மட்டுமே ஆட்டுவார்.

சிவாஜி அடிக்கடி பாடும் “ஏற்றி வைத்த தீபமொன்று என்னிடத்தில் வந்து நின்று…” என்ற பாடல் வரியை ஜெயா ஆரம்பிக்க,

தொடர்ந்து அடுத்தடுத்த வரிகளை சிவாஜி கூறுகையில், ஆஹா எல்லாம் ஞாபகம் வந்துவிட்டதே…  என்ற பூரிப்பில் சிறுபிள்ளையை போல  “ஞாபகம் வந்திருச்சா… ஞாபகம் வந்திருச்சில்ல…” என்று கலகலவென சிரிப்பார் ஜெயா. 

“இந்தப் பாட்டு நான் கல்லூரியில் படிக்கும் எழுதியது. அதனால் எப்போதும் நினைவிலிருக்கும் என்று கூறிவிட “எதுவுமே ஞாபகம் வரவில்லையா என்று கூறி கதறி அழுவார்…” அந்தக் காட்சியில் யாரும் கண்கலங்காமல் இருக்க மாட்டார்கள்.

 கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்கருவைக் கொண்டே படங்களுள் தீபாவளியன்று வௌியான ‘எங்கிருந்தோ வந்தாள்’ ஜெயாவுக்கு சிகரமாய் அமைந்தது.

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *