Cinema

நடிகையர் திலகம்- சாவித்திரியாக மாறிய கீர்த்தி சுரேஷ்

By  | 

வாழ்க்கையில் அடிமட்டத்தில் இருந்து உயரத்தை எட்டியவர் நடிகை சாவித்திரி. அவர் திரைப்பட நடிகையாக, திரைப்பட இயக்குனராக, தயாரிப்பாளராக பல பரிணாமங்களில் வாழ்ந்து காட்டியவர். அவரின் வாழ்க்கையின் முழுதுமாக இல்லாவிட்டாலும் முக்கியமான பகுதிகளை வைத்து பிரகாசமும் துயரமும் நிரம்பிய வாழ்க்கைக் கதையாக தந்துள்ளார். இயக்குனர் நாக் அஸ்வின்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்ட, ராஜந்திர பிரசாத், பிரகாஷ் ராஜ், நாகசைதன்யா, பானுப்ரியா ஆகியடியோர் நடித்துள்ளனர்.

பெண் எழுத்தாளராக வளம் வரும் மதுரவாணி தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற நடிகையான சாவித்ரியின் வாழ்க்கை கதையை எழுதுகிறார். மதுரவாணியின் தேடலின் ஊடாக , சாவித்ரியின் வாழ்க்கை கதை சொல்லப்படுகின்றது.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த சாவித்ரி, தன் உறவினர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். குழந்தையாக இருக்கும்போதே நடனம் கற்க ஆரம்பித்து நாடகங்களில் நடிக்கும் சாவித்ரி, பிறகு சென்னைக்கு வந்து வாய்ப்புகளைத் தேடுகிறார். மெல்ல மெல்ல வாய்ப்புகள் வர ஆரம்பிக்கின்றன. அதே நேரத்தில் ஜெமினி கணேசனின் பழக்கமும் ஏற்படுகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தும் ரகசியமாக திருமணம் செய்துகொள்கிறார்கள். அதற்குப் பிறகும் தொடர்ந்து புகழேணியில் ஏறிக்கொண்டேயிருக்கிறார் சாவித்ரி.

இந்தக் கதையை கொஞ்சம் கொஞ்சமாகக் கோர்க்கும் மதுரவாணி, சாவித்ரியின் துணிச்சலால் தூண்டப்பட்டு தன் தந்தை பார்த்துவைத்திருக்கும் மணமகனை மறுத்துவிட்டு, காதலனைத் தேடிச் செல்கிறாள்.

சென்னைக்கு துள்ளலோடு வந்து இறங்கும் இளம் பெண்ணாக, மிகப் பெரிய நடிகையாக, ஜெமினி கணேசனின் இரண்டாவது மனைவியாக, குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி வீழும் நட்சத்திரமாக என பிரமிக்கவைத்திருக்கும் கீர்த்தி சுரேஷின் திரைவாழ்வின் மிக முக்கியமான படமாக நடிகையர் திலகம் இருக்கும். சாவித்ரி அவ்வப்போது தனது கீழ்த் தாடையை இடமிருந்து வலமாக அசைப்பார். அதை நுணுக்கமாகக் கவனித்து அவரது பாணியிலேயே செய்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சாவித்ரி பாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாரையும் இனி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சிறப்பாக தனது நடிப்பை வெளிகாட்டியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

ஜெமினி கணேசனாக வரும் துல்கர் சல்மானின் முரட்டுத்தனமான தோற்றம் ஜெமினி கணேசன், நளினத்தை வெளிபடுத்த தவரியுள்ளது என்றுதான் கூற வேண்டும்.

ஒரு நல்ல பத்திரிகையாளராகவும் தன்னம்பிக்கை கொண்ட பெண்ணாகவும் உருவெடுக்கும் மதுரவாணியின் பாத்திரத்தில் சமந்தா தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்.

50களின் வசன நடையயை புகுத்தி பார்வையாளரை 50 களுக்கு அழைத்துச்சென்றுள்ளார் மதன் கார்க்கி. மற்றும் மிக்கி ஜே மெயர் இருவேறு காலகட்டங்களுக்கேற்றபடி வெவ்வேறுவிதமான இசை பாணிகளை பின்பற்றி பின்னணி இசையை சிறப்பித்துள்ளதுடன் பாடல்களிலும் அசத்தியுள்ளார்.

இத்திரைப்படம் சாவித்திரி காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு அவர்களை மீண்டும் சாவித்திரியை சந்திக்கச்செய்யும் எனலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *