Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 47: வீட்டுக்கு தேவை நீரூற்றல்ல… நூலகம்!

By  | 

அலங்கரித்துக் கொள்வதே ஒரு தனிக்கலைதான் என்பது ஜெயாவின் அபிப்ராயம். அதனால் எப்போதும் நகைகளாலும் பட்டு முதலிய புடவைகளாலும் தன்னை அழகுபடுத்திக் கொள்வார்.

நவரத்தினங்கள் என்றால் அவ்வளவு விருப்பம். அப்படி ஒன்பது கற்களால் செய்யப்பட்ட நெக்ளஸ், தோடு, வளையல், கொலுசு, மோதிரம் போன்ற நகைகளை செட்டாக வாங்கி வைத்துக் கொள்வார்.

வெளியிடங்களுக்கு செல்லும் போது கூட ஏதாவது நகைக்கடைக்குச் சென்று ஒரு நகையையாவது வாங்கிவிடுவார். அவ்வப்போது அறிமுகமாகும் மொடல்களில் ஏதாவது நகை டிசைனைப் பார்த்தால் வாங்கி அணிந்து பார்த்துவிட்டு பீரோவில் வைத்துவிடுவார்.

அப்படி வாங்கி அலுமாரியில் சேர்த்து வைத்த நகைகளை வைத்து ஒரு ஜூவலரிக் கடையையே திறக்கலாம் என்றால் யோசித்துப் பாருங்கள் அவரின் நகையாசையை…

திரைப்பட விழாக்களுக்கோ அல்லது இரவு நேர பார்ட்டிகளுக்கோ செல்ல நேர்கையில்,

ஒன்றில், ஆடம்பரமான பட்டுப் புடவை அணிந்தால் எளிமையான ஒரே ஒரு நெக்ளஸ் மட்டும் அணிவார்.

அல்லது சாதாரணமான புடவை அணிந்தால் வைரத்தாலோ முத்தாலோ ஆன கனமான நகையை அணிந்து கொள்வார்.

அப்படி அலங்கரித்துச் சென்ற தினத்தில் ஜெயாவிடம், ‘இப்படிக் கர்நாடகம் போல வர வேண்டுமா?” என்று யாராவது கிண்டலாக கேட்டால், ‘இது தான் இப்போ பெஷன்…” என்று பதிலுக்கு நக்கலாக சொல்லிவிட்டுச் செல்வார்.

விதம்விதமாக தன்னை அலங்கரிக்கத் தெரிந்து கொண்டவர், அதையும் தாண்டி தனக்கு உள்ள பொறுப்புகள் என்னென்ன என்பதை ஒரு பொழுது கூட நினைத்துப் பார்த்ததில்லை.

போயஸ் தோட்டத்தில் ஏற்கெனவே அம்மா சந்தியாவுடன் சேர்ந்து வாங்கிய வீட்டை, புதுப்பித்துக் கட்டும் கட்டுமான வேலைகள் 1971இன் ஆரம்பத்திலேயே நடைபெற்று வந்தன.

‘வீட்டைக் கட்டிப் பாரு… கல்யாணத்த பண்ணிப் பாரு” என்று அந்தக் காலத்தில் பெரியவர்கள் சொல்லி வைத்தது பொய்யில்லை.

சொந்தமாக ஒரு வீட்டை வாங்கினாலோ அல்லது புதிதாக நமக்கென ஒரு வீடு கட்டினாலோ… வாஸ்து சரியாக இருக்கிறதா, அறைகள் கச்சிதமாக அமைகிறதா, அலங்காரப் பொருட்களை எங்கு வைப்பது, தோட்டத்தை எந்த வடிவத்தில் கட்டமைப்பது…. என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து தீர்மானிப்பதில் ஆயிரம் எதிர்பார்ப்புகள் பெண்களிடம் இருக்கும்.

ஆனால் ஜெயா இதற்கு எதிர்மறையானவர் என்று தான் சொல்ல வேண்டும்.

வீட்டை வாங்கினால் மட்டும் போதுமா…?

இனி, காலா காலத்துக்கும் தான் வாழப் போகும் வீடு எப்படி கட்டப்பட்டு வருகிறது, எப்படிப்பட்ட கட்டமைப்புகளை கொண்டிருக்க வேண்டும் என்று எதைப் பற்றியும் ஜெயா சிந்திக்கவில்லை.

வீடு வாங்குவது மட்டும் தான் என் வேலை… மற்றைய எல்லாவற்றையும் என் அம்மா பொறுப்பாக இருந்து பார்த்துக் கொள்வார்… என்று சினிமாவையே தழுவிப் பிடித்துக் கொண்டு இருந்துவிட்டார்.

வீட்டைப் பற்றி சிந்திக்காமல் அடுத்தடுத்து கிடைத்த படங்களில் ஓய்வின்றி நடித்துக் கொண்டிருந்தார்.

அப்படியிருந்தும் ஒரே ஒரு விடயத்தில் மட்டும் உறுதியாக இருந்தார்.

நடிகை ஷீலாவும் ஜெயாவும் ஒரே சந்தர்ப்பத்தில் வீடு கட்ட ஆரம்பித்த சந்தர்ப்பத்தில், ஒரு நாள் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது,

‘வீட்டுக்கு நடுவே ஒரு பெரிய நீரூற்று அமைக்க வேண்டும். உங்கள் வீட்டிலும் அதே போன்ற நீரூற்றை அமைத்துக் கொள்ளுங்களேன்…” என்ற தன் ஆசையை ஷீலா கூறினார்.

‘எனக்கு நீரூற்றெல்லாம் வேண்டாம். எனக்குத் தேவை பெரிய லைப்ரரி…” என்று அப்போதே தன் விருப்பத்தை ஜெயா தெரிவித்திருந்தார்.

கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதெல்லாம் அம்மா சந்தியா தான் அருகில் இருந்து கவனித்துக் கொள்வார்.

சந்தியாவும் மிடுக்கானவர் தான். ஆனாலும் வயதாக ஆக அவரிடமும் முதுமை எட்டிப் பார்த்தது.

சில நேரங்களில் வீட்டு விடயமாக அங்குமிங்கும் திரிந்து களைத்துப் போய் உட்கார்ந்துவிடுவார்.

பொலிவான அவரது முகத்தில் கருமையும் சோர்வும் தென்பட ஆரம்பித்தது. வயதான காலத்திலும் ஓய்வாக ஓரிடத்தில் உட்காராமல் குடும்ப நிர்வாகத்தை கவனித்து வந்தார்.

எல்லா வரவு செலவு கணக்குகளும் சந்தியாவுக்கு மட்டுமே தெரியும். வீட்டுக்கு தேவையான தளபாடங்கள், உபகரணங்களை கடைகளில் தேடித் தேடி வாங்கி வந்தார். மற்ற விடயங்களில் ஈடுபட்ட சந்தியா தன் உடல்நிலையை கருத்தில் கொள்ளவில்லை.

இதற்கிடையில் ‘திக்கு தெரியாத காட்டில்’ படப்பிடிப்புக்காக மாசினகுடி காட்டுப் பகுதிக்கு சந்தியாவையும் அழைத்துக் கொண்டு சென்றார் ஜெயா.

அங்கு ஜெயாவின் அத்தைமார் சந்தியாவை பார்க்க வந்திருந்தார்கள். அவர்களுடன் சந்தியாவும் ஜெயாவும் காரில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நடிக்க அழைத்தவுடன் அவ்விடத்திலிருந்து சூட்டிங் ஸ்பொட்டுக்கு ஜெயா சென்றுவிட்டார். அவர் இல்லாத நேரம் பார்த்து, தனிமையில் இருந்த சந்தியாவிடம் மெல்ல பேச்சை ஆரம்பித்தார்கள், வந்தவர்கள்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *