Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 48: அம்மா பார்த்த வரன்!

By  | 

எழுபதுகளில், வாரமலர் ஒன்றின் பத்திரிகையாளர் குழு, ஜெயாவை சந்திக்க திட்டமிட்டிருந்தது.
வாரம் ஒரு திரையுலக பிரபலத்தை, பணிவாக பறக்கும் சிறிய ரக விமானத்தில் குறுந்தூர பயணம் செய்ய அழைத்துச் சென்று, அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்து, அதை தொடராக எழுதி பிரசுரிக்க எண்ணியிருந்தனர்.
முதல் தொடரிலேயே மிகப் பெரிய பிரபலத்தை அறிமுகப்படுத்தினால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதற்காக பத்திரிகையாளர்கள் ஜெயாவை தெரிவு செய்து நாடினர்.
இது போன்ற துணிகரமான செயல்களில் இருந்து எப்போதும் பின்வாங்காத ஜெயா, மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.
ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் குறித்த திகதியில் விமானப் பயணத்தை மேற்கொள்ள அவரால் முடியவில்லை.
“இந்த வாரம் முடியாவிட்டால் என்ன…? அடுத்த வாரம் தொடரை பிரசுரியுங்கள்” என்று கூறி பயணத்தை தள்ளிப் போட்டார்.
தொடர் வெளியாகப் போவதாக முன்கூட்டியே விளம்பரப்படுத்தியிருந்ததால் எப்படியாவது பிரசுரித்தேயாக வேண்டிய கட்டாயத்தில் பத்திரிகையாளர் இருந்தார்.
அதனால் சுருளி, மனோரமா ஆகிய நடிகர்களை அழைத்துச் சென்று அவர்களின் அனுபவங்களை எழுதி முதல் தொடரை ஆரம்பித்துவிட்டார்.
இரண்டாம் வாரத் தொடர் எழுதும் போது தான் ஜெயா விமானப் பயணம் செய்தார். ஆனால் அவருக்கு ஏற்கெனவே முதல் தொடர் வெளியானது பற்றி தெரியாது.
தான் தான், முதல் வார அறிமுகம் என்று நினைத்துக் கொண்டிருந்த ஜெயாவுக்கு, அடுத்த பத்திரிகை வெளிவந்த பின் தான் விபரம் புரிந்தது. வந்ததே கோபம்…!
அந்த பத்திரிகையாளரை அழைத்த ஜெயா,
‘முதல் பயணம் என்னுடையதாகதான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முதல் பகுதியில் வேறொருவரை வைத்து எழுதி இருக்கிறீர்களே…. இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை..?” என்று கோபமாக கூறினார்.
என்னதான் வெளியே அவ்வப்போது சிலரிடம் கோபமாக நடந்து கொண்டாலும் பிடிவாதம் பிடித்தாலும், அம்மாவிடம் மட்டும் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வார்.
பிள்ளைகள் எவ்வளவு வளர்ந்தாலும் அன்பான தாய்க்கு அவர்கள் என்றுமே குழந்தைகள் தான். அப்படித்தான் சந்தியாவுக்கும் ஜெயா…
ஆனால் உற்றாரும் உறவினரும் ஜெயாவை எப்போதோ பருவ வயதுப் பெண்ணாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். வயதும் 23 ஆகிவிட்டது.
அவர்களின் பார்வையில் தவறில்லை… அவர்களின் கேள்விகளுக்கு சந்தியாவிடம் பதிலுமில்லை.
படப்பிடிப்பிலேயே நேரத்தை செலவழிக்கும் மகளிடம் இதைப் பற்றி எப்படிப் பேசுவது, அதை எப்போது பேசுவது என்று சந்தியா தயங்கினார்.
ஒரு நாள் இரவு…
“அம்மு, ஒரு முக்கியமான விசயம்…” என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தார். (இடையிடையே இருமல்….)
தாயுடன் இருந்ததை விட தனிமையுடன் அதிகம் வாழ்ந்தாலும் தாயை விட வேறு யாரையும் உயிராக எண்ணியதில்லை.
முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் தன் தாயைப் போலவே தானும் இருப்பதாக உணர்ந்தவர், அன்று சந்தியாவின் முகம் வாடியிருப்பதை கண்டதும் அவருக்குள் ஒரு பதற்றம்.
“என்னம்மா விஷயம்?” என்று கேட்டார்.
“அம்மு, படப்பிடிப்புகளில் நீ பரபரப்பாக இருந்ததால் உடனடியாக உன்னிடம் சொல்ல முடியவில்லை. சில நாட்களுக்கு முன் மாசினகுடி காட்டுக்கு நாம் சென்ற போது உன்னை பார்க்க உன் அத்தைகள் வந்திருந்தார்களே… அவர்கள் காரில் என்னுடன் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். உனக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கிறதாம். பையனும் நமக்கு துரத்து சொந்தம். அவர் யார் என்று தெரிந்தால் நீ திகைத்துப் போவாய். உனக்கு நன்கு அறிமுகம் ஆனவர் தான். எப்போதும் உன்னுடன் கலகலப்பாக பேசுபவர்….” என்று அந்த நபரின் பெயரையும் சொன்னார். (அவர் யார் என்ற தகவல் எனக்கு கிடைக்கவில்லை.)
“இப்போது என்ன அவசரம்? முதலில் வீடு கட்டி முடிந்து கிருகப்பிரவேசம் நடக்கட்டும்…” என்று உடனே பேச்சை மாற்றிவிட்டார்.
எதிர்பார்த்த பதிலே ஜெயாவிடமிருந்து வர, விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்ந்து திருமணத்தை வலியுறுத்தினார்.
சுந்தியா பேசும் போது இருமலும் மூச்சிரைப்பும் எட்டிப் பார்த்ததை அவதானித்த ஜெயாவின் அடிமனதில் ஆயிரம் கேள்விகள்…
“அம்மா ஏன் திடீரென்று இப்படி உணர்ச்சிவசப்படுகிறார்?
என் திருமணத்தில் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டியதன் அவசியம் என்ன?
அம்மாவின் உடல்நிலையில் ஏன் இந்த மாற்றம்…..?
ஆனால் என் மனதில் இருக்கும் அனைத்தையும் இன்றே அம்மாவிடம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும்…”

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *