Articles

150 ரூபாயில் ஆரம்பித்தத் தொழில்…

By  | 

கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்னர், செங்கலடியில் இருந்து, கணவரின் வதிவிடமான மலையகத்தை நாடி இடம்பெயர்ந்து வந்த பெண்மணிதான் அழகிரி நிர்மலா.

இவர் மலையகத்துக்கு வந்ததில் இருந்து இன்று வரை, அவர் வசித்துவரும் லிந்துலை மற்றும் அதை அண்டிய பிரதேச மக்களுக்கும் சுவையான முறுக்கு வகைகளை செய்துகொடுத்து, அதன் சுவையோடு லயிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
முறுக்கு வியாபாரத்தால் கிடைக்கிற வருமானத்திலேயே தனது குடும்பமும் வாழ்வதாக கூறும் இவரை சந்திக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. அச்சமயம் அவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட சில விடயங்களாவன…

“எனது பிறப்பிடம் மட்டக்களப்பிலுள்ள செங்கலடி. திருமணம் முடித்த பின்னரும் சில காலங்கள் நாங்கள் அங்கேயேதான் இருந்தோம்.
கடந்த ஒன்றரை வருட காலமாகத்தான் கணவரின் பிறப்பிடமான மலையகத்துக்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் எனது பிறப்பிடத்தை விட்டு விலகி வந்ததற்கு காரணம், மட்டக்களப்பு பகுதிகளில் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாகவே இருந்தது.

அங்குள்ள கிராமப் பகுதிகளில் எத்தனையோ அசம்பாவிதங்கள் மற்றும் பலவிதமான பிரச்சினைகளுக்கு மத்தியில் வளர்ந்துவந்த நான், அப்படியான சூழலில் எனது பிள்ளைகளையும் வளர்க்க விரும்பவில்லை.
அதனால்தான் அவர்களை அழைத்துக்கொண்டு மலையகத்தை நம்பி குடும்பமாக வந்து சேர்ந்தோம்.

பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு, வெளியிடத்துக்கு வந்த பிறகு, முன், பின் பழக்கமில்லாததால் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. இந்த ஒன்றரை வருடமாக 7500 ரூபாய்க்கு வாடகை வீட்டில்தான் இருக்கிறோம்.
எந்தவிதமான உதவியும் எங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. மட்டக்களப்பில் இருந்த காலப்பகுதியில் முறுக்கு தயாரித்து, விற்று வருமானம் ஈட்டிக்கொண்டிருந்தேன்.

மலையகத்துக்கு வந்ததும் என்ன செய்வது? பிள்ளைகளை எப்படி வளர்த்தெடுப்பது என்று யோசித்தபோதுதான் மறுபடியும் எனது கைத்தொழிலை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.

ஆனாலும், தொழிலை ஆரம்பிப்பதற்கு அவ்வளவாக பணவசதி இருக்கவில்லை. ஆதலால் பக்கத்து வீட்டாரிடம் 150 ரூபாயை கடனாக பெற்று, அந்தப் பணத்தில் அரை போத்தல் தேங்காய் எண்ணெயும், ஒரு கிலோ மா வாங்கி, அதில் முறுக்கு போட்டு, கடைக்குக் கொடுத்து ஒரு தொகை பணத்தை பெற்றுக்கொண்டேன். அதன் பின்னர் படிப்படியாக வியாபாரத்தை வளர்த்துச் சென்றேன்.

பின்னர், எனது மகள் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 158 புள்ளிகள் பெற்று சித்தியடைந்தாள். அதன் காரணமாக பிரதேச செயலகத்தினூடாக 20 ஆயிரம் ரூபாய் பரிசாக கிடைத்தது. அந்தப் பணத்தையும் வியாபாரத்துக்காக பயன்படுத்திக்கொண்டோம்.

இப்படியாக 150 ரூபாயில் ஆரம்பமான இந்த முறுக்கு தொழில், இன்றைக்கு இறைவன் அருளால் எந்தக் குறையும் இல்லாமல் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
எனது கணவரின் தாய், தந்தை இருவருமே இறந்துவிட்டார்கள். எனக்கு அப்பா மட்டுமே இருக்கிறார். அவரையும் நானே அரவணைக்கிறேன்.

இப்போது எனக்கு 40 வயது. தொழில் நேரங்களில் உடலாலும் மனதாலும் ஏதேனும் பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டு சோர்வடைந்தால் எதையுமே நான் பொருட்படுத்துவதில்லை. சோர்வுகளுக்கு இடம்கொடுத்துவிட்டால் வேலை நேரம் குறைந்துவிடும் அல்லவா!

இங்கே முறையான பதிவும் தரச் சான்றிதழும் பெற்றுள்ள நிலையில், முறுக்குகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரித்து, அவற்றை பக்குவமாக பொதியிட்டு, கணவன் கையில் கொடுத்துவிடுவேன்.

அவர் அதை ஓடர் கேட்டிருந்த இடங்களுக்கு ஒரு முறுக்கு பெக்கட் 50 ரூபாய் எனும் அடிப்படையில் டயகம, அக்கரப்பத்தனை, கொட்டகலை, ஹட்டன், நானுஓயா போன்ற இடங்களுக்கு எடுத்துச் சென்று, கொடுத்து, பணத்தை பெற்றுக்கொண்டு திரும்பி வருவார்.

இப்படியாக மலையகப் பகுதிகளுக்கு முறுக்கு வகைகளை வியாபாரத்துக்காக கிலோ கணக்கில் அனுப்பி வைக்கிறேன். இன்னும் எத்தனையோ இடங்களிலும் குறிப்பாக, திருமணம் போன்ற விசேட நிகழ்வுகளுக்காகவும் எங்களுடைய முறுக்குகள் தேவையென்று ஓடர் கொடுக்கிறார்கள். இப்படியாக தொடர்ந்துகொண்டிருக்கும் இத்தொழில் பெரியளவில் வளர்ச்சி காண வேண்டும் என்பதே எனது ஆசை.

நாங்கள் தயாரிக்கும் முறுக்குகளை வாங்கி சாப்பிடுபவர்கள், மிகவும் சுவையாக இருப்பதாக கூறி மேலும் முறுக்கு பெக்கட்டுகளை கொள்வனவு செய்துகொண்டு போகிறார்கள்.

உண்மையில், இந்தத் தொழிலுக்கு கணவரின் பங்களிப்பு அதிகமாகவே கிடைக்கின்றது.
முன்பு வசித்த பகுதியை விட நானும் எனது குடும்பத்தினரும் மலையகத்தை அதிகமாகவே நேசிக்கின்றோம். மேலும் பிள்ளைகளுக்கும் எங்களுக்கும் பாதுகாப்பான இடமாக மலையகத்தை உணர்கின்றோம்.
மலையகப் பகுதியில் காலநிலை, இயற்கை சூழல், ஆரோக்கியமான வாழ்க்கை இப்படி எல்லாமே சிறப்பாக கிடைக்கின்றது.

ஆனாலும், எங்களுக்கென்று சொந்தமாக வீடு ஒன்றில்லை. அதுதான் இப்போதைய பிரச்சினையாக உள்ளது.

இந்த சமயத்தில் எல்லா பெண்களுக்கும் நான் சொல்வது ஒன்றுதான். நம்மை பெண்கள்தானே என்று எவரும் துச்சமாக எண்ணிவிடும் அளவுக்கு நாம் நடந்துகொள்ளவே கூடாது. முடிந்த வரை நம்மாலும் முடியும் என்று தன்னம்பிக்கையுடன் எதையும் துணிந்து செய்யும் தைரியத்தை நமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

தன்னை நம்பி வந்தவர்களை மலையகம் என்றுமே கைவிட்டதில்லை என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். ஆக மலையகத்தை எண்ணி நானும் பெருமையடைகிறேன்…

சி. துஷியந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *