Tips

நீங்களும் மீன் தொட்டி வைக்கலாமே!

By  | 

மீன் தொட்டியை ஆயத்தப்படுத்தல்

உங்களுக்குத் தேவையான அளவில் கண்ணாடித் தொட்டி வாங்கும் பொழுதே AERATOR, FILTER போன்றவையும் வாங்கிக் கொள்ளுங்கள்.சிறிய கூழாங்கற்கள், இயற்கை செடிகள் வாங்கிக் கொள்ளவும்.
இரண்டு இன்ச் வரை இடம் விட்டு தண்ணீர் நிரப்பிக் கொள்ளவும் .குளோரின் கலந்த தண்ணீர் என்றால் சேகரித்து இரண்டு நாட்கள் வரை வைத்திருந்து பின்னர் உபயோகப்படுத்தலாம் .
ஒரு சதுர அடி தொட்டியில் 2 தங்க மீன்கள் மட்டுமே வளர்க்க வேண்டும். இந்த அளவு ஒவ்வொரு வகை மீன்களுக்கும் மாறுபடும்.தொட்டியில் நீரின் வெப்பநிலை 25 டிகிரி வடி 27 டிகிரி க்கும் மிகாமல் பார்த்துக் கொள்ளவும். குளிர் காலங்களில் ஹீட்டர் உபயோகப்படுத்தலாம்.
தொட்டிக்குள் குறைந்தது 10 மணி நேரமாவது மின் விளக்கு எரிந்த வண்ணம் இருக்க வேண்டும்.தொட்டியை நேரடியாக சூரிய ஒளி விழும் இடத்தில் வைக்கக் கூடாது.

மீன்களை தெரிவு செய்தல்

மீன்கள் வாங்கும் போது கவனமாக வால் பகுதி பிளவு பட்டு இருக்காமல், உடலில் காயம் எதுவும் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். எந்த மீன் இனம் தனித்து வாழும்? எவை கூட்டத்தோடு வாழும்? எந்த இனம் வேறு இனத்தோடு சேரும் என்ற விவரங்களை எல்லாம் சேகரித்து ஆலோசித்து மீன் வாங்கி வளர்த்தால் தான், அவை ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழும். இட பற்றாக்குறை ஏற்படாத வகையில் கணிசமான தொகையில் மீன் வளர்க்க வேண்டும்.
தொட்டியில், மேல்தளம், நடுத்தளம், கீழ்தளம் என்று இடம் பிரித்து அங்கு வாழும் வகை மீன்களை இனம் கண்டு வளர்க்க வேண்டும். நடுத்தளத்தில் வாழும் மீன்கள் கூட்டமாக வாழ விரும்பும். கீழ்த்தளத்தில் வாழும் மீன்கள் பெரும்பாலும் சண்டை மனப்பாங்கு உடையவை. ஆகையால் அவற்றை குறைவான எண்ணிக்கையில் வாங்கி, மற்ற மீன்களை தொந்தரவு செய்யாதவாறு கண்காணிக்க வேண்டும்.

மீன்களுக்கு தீணி இடுதல்

ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே இரை போடவும் .ஒரு மீனுக்கு அதன் கண் அளவிற்கு மட்டுமே இரை போட வேண்டும் .
பொதுவாக 3 அல்லது 5 நிமிடங்களில் இரையை சாப்பிட்டு விடும் .மீன்கள் சாப்பிடவில்லை என்றால் அதை நோய் தாக்கியிருக்கிறது என்று அர்த்தம்.மேலும் தொட்டியின் ஓரத்தில் நீந்தாமல் இருந்தாலும் அதற்கு நோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.
அதிக அளவு இரை போட்டால் தண்ணீரின் தரம் பாதிக்கப்படும்.
நாம் வகை வகையாக விரும்பி உண்ணுவதை போல், மீன்களுக்கும் வெவ்வேறு சுவைகளில் கிடைக்கும் உணவுகளை அளிக்க வேண்டும். வாரத்தில் ஐந்து நாள் உலர்ந்த வகை உணவுகளையும், ஒரு நாள் குளிரேற்றிய (அ) உயிருணவையும் கொடுத்து, மீதம் உள்ள ஒரு நாள் உணவே இல்லாமல் பட்டினி கூட போடலாம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
மீன் தொட்டியில் உணவை இடும் போது மீன்கள் துள்ளி வந்து உற்சாகமாக சாப்பிட்டால், அவை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக பொருள்.

தூய்மை காத்தல்:

புதிதாக மீன்கள் வாங்கி வந்து தொட்டியில் போடும் முன்பு அவற்றை அரை லிட்டர் தண்ணீரில் மூன்று ஸ்பூன் கல் உப்பு கலந்த நீரில் டிப் செய்து போடவும். ஒட்டுண்ணி ஏதாவது இருந்தால் அவை இறந்து விடும்.
மீன் தொட்டிக்குள் கைகளை விடுவதோ, தொட்டிக்கு மிக அருகில் சென்று சத்தமிடுவதோ கூடாது.
மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்தமாக வைத்திருப்பது இன்றியமையாதது. தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்வதினால் மீன்கள் ஆரோக்கியத்துடன் வாழும் நிலை உருவாகும். Bio filter வைத்திருந்தால் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை மாற்றவும். இல்லையென்றால் ஒரு வாரத்திற்கு ஒரு முறை மாற்றவும்.
முக்கியமாக மீன் தொட்டியை சுத்தம் செய்வதற்கு எண்ணெய், சோப்பு, வேறு விதமான ரசாயன சலவை பொருள் போன்றவற்றை கண்டிப்பாக உபயோகப் படுத்துதல் கூடாது. இதனால் மீன்கள் இறந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.
மீன் இறந்தவுடன் உடனடியாக தொட்டியை விட்டு நீக்கி விட வேண்டும். . ஏனென்றால், மீன்கள் இறந்த உடனேயே அழுக ஆரம்பிக்கும். இதனால், தொட்டியில் இருக்கும் மற்ற சிறு மீன்கள் பாதிப்படையும்.
மீன் தொட்டியில் இருந்து நீக்கிய அழுக்கு நீரை கீழே கொட்டி விரயம் ஆக்காதீர்கள். உங்கள் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு இந்த நீர் ஒரு பயனுள்ள உரம் ஆகும்.

குறிப்பு-
அழகிய மீன்கள் நீந்துவதைப் பத்து நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தால் மனம் புத்துணர்வு பெறும். மன அழுத்தம் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *