Children

உங்கள் குழந்தைகளிடமும் இந்த அறிகுறிகள் உள்ளனவா? எச்சரிக்கை!

By  | 

உங்கள் குழந்தைகள் உங்கள் பாதுகாப்பில் இல்லாத சந்தர்ப்பங்களில் அவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகலாம், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களைவிட தெரிந்தவர்களிடமிருந்தே சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள்.

பாலியல் துன்புறுத்தல்கள் பெரும்பாலும் அறிமுகமானவர்களிடமிருந்துதான் வருவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. எதிர்பாராத தருணத்தில் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து வரக்கூடிய பாலியல் சீண்டல்கள் மோசம் என்றால், தெரிந்தவர்களிடமிருந்தே வரும் அப்படியொரு செய்கை, இளையோருக்கு மனிதர்கள் மேல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.

உங்கள் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளானார்களா என்பதை எப்படிக் கண்டறிவது?

  1. யாருடனும் பேசாமல் ஒதுங்கி இருக்கக்கூடும்.
  2. ஒரு குறிப்பிட்ட நபரைப் பார்க்கும்போது பதற்றப்படக்கூடும்; பயப்படக்கூடும்.
  3. சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் இருக்கலாம்.
  4. எதிலும் ஆர்வமில்லாமல் இருக்கக்கூடும்.
  5. குற்றவுணர்வுடன் தலை குனிந்தபடி தவறுசெய்துவிட்ட முகபாவனையுடன் இருக்கக்கூடும்.
  6. உடலை முழுவதும் மறைக்கும் படியோ சில நேரம் ஓர் ஆடைக்கு மேல் இன்னோர் ஆடைகூட அணியக்கூடும்.

தொடுதலும் உணர்வும்

குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே எது நல்ல தொடுதல், எது தவறான தொடுதல் என்று அறிய கற்றுக்கொடுக்க வேண்டும்.

உடலின் ஒவ்வொரு பகுதியையும் யாரோ தொடும்பொழுது தொடுதலையும் தொடும் நபரையும் பொறுத்து நம் உணர்வு மாறும். எந்த உறவாக இருந்தாலும் நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுக்கக்கூடிய தொடுதல்தான் நல்ல தொடுதல்; நமக்குப் பயத்தையும் பதற்றத்தையும் கொடுக்கக்கூடிய தொடுதல் மோசமான தொடுதல் என்று குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

நல்ல தொடுதல்

நமக்குப் பிரியமானவர்களும் நம்மிடம் அன்பாக இருப்பவர்களும் தலையை லேசாகத் தடவிக்கொடுத்தாலோ முதுகில் தட்டினாலோ கைகளைக் கோத்துக்கொண்டாலோ தோளோடு அணைத்துக் கொண்டாலோ மிகவும் உற்சாகமாக இருக்கும். தொடுகிறவர், தொடப்படுகிறவர் இருவருக்கும் ஆரோக்கியமான மகிழ்ச்சியைக் கொடுப்பது நல்ல தொடுதல்.

மோசமான தொடுதல்

யாராக இருந்தாலும் நம்மை, நாம் விரும்பாத இடத்தில் குறிப்பாக பாலுறுப்புகளைத் (மார்பு், பிறப்புறுப்பு) தொடுவதும் நம் கைகளைப் பிடித்து அவரது உடலின் மேல் வைக்கச் சொல்வதும் மோசமான தொடுதல். தான் தொட்டதை மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லித் தொடுவதும் மோசமான தொடுதல்.

குழந்தைகள் முக்கியமாக நினைவில் கொள்ளவேண்டியது இதுதான் என்று சொல்லுங்கள். ஒருவரது தொடுதல், மோசமான தொடுதல் என்றால் அதற்காகக் குழந்தைகள் வெட்கித் தலைகுனிய வேண்டியதில்லை என்று சொல்லுங்கள். தவறு குழந்தைகளுடையதல்ல. அவர்களைவிட வயது, அதிகாரம், உறவு முறை போன்றவற்றால் பெரியவர்கள் அவர்களுக்குப் பிடிக்காத விதத்தில், பிடிக்காத இடத்தில் தொட்டால் அதை மறுக்கும் உரிமை குழந்தைகளுக்கு உண்டு என்று சொல்லுங்கள்.

நல்ல தொடுதல், மோசமான தொடுதல் ஆகியவற்றில் பாலியல்ரீதியான இச்சைகளும் கலந்திருக்கும்பொழுது அந்தத் தொடுதல் ஒருவேளை அவர்களுக்குத் தற்காலிக பரவசத்தைத் தரலாம். ஆனால், நிம்மதியைத் தராது. நிறைய கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் எழுப்பும். ஆகவே, எவ்வளவு நெருக்கமானவரிடமிருந்து வந்தாலும் நல்ல தொடுதல், மோசமான தொடுதலை அடையாளம் கண்டுகொள் என்று குழந்தைகளிடம் சொல்லுங்கள்.

ஆனால், இதைப் புரிந்து கொள்ளாமல், “அவனை/அவளைப் பார்க்காதே, பேசாதே, வெளியே போகாதே” என்று ஒரேயடியாகக் கட்டுப்பாடு விதிக்கவும் கூடாது. கண்டுகொள்ளாமல் விடவும் கூடாது.

என்ன செய்ய வேண்டும்?

ஏதாவது தவறாகத் தோன்றினால் ‘முடியாது’, ‘கூடாது’ என்று சொல்லச் சொல்லி குழந்தைகளைப் பழக்குங்கள். அந்த நபரிடம் அவர் தன்னைத் தொடுவது தனக்குப் பிடிக்கவில்லை என்று அழுத்தம் திருத்தமாக சொல்லச் சொல்லுங்கள். இப்படிச் சொல்லும்பொழுது, அவர்கள் உடல் நன்கு நிமிர்ந்து இருக்க வேண்டும். கூனிக்குறுகாமல் கண்களை நேருக்கு நேர் பார்த்துச் சொல்ல வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள்.

வார்த்தைகள் தங்கு தடையில்லாமல் உறுதியாக, பயமில்லாமல் வர வேண்டும்.அந்த நபருடன் தனியாக இருக்க நேரும் தருணங்களைத் தவிர்த்துவிடச் சொல்லுங்கள்.

உரக்கக் கூச்சல் போடவோ உதவிக்கு பிறரை அழைக்கவோ வேண்டும் என்று சொல்லுங்கள். எதிர்பாராத தருணத்தில் தொடுபவரிடமிருந்து வேகமாக விலகிடச் சொல்லுங்கள்.

மற்றவர்களுக்கு தெரிய நேருமோ என்ற கூச்சம் வேண்டாம் என்பதையும் சொல்லுங்கள். “ஏனென்றால் அத்து மீறியது நீ அல்ல, அவர்தான். உன் உடல் மீதான உரிமை உனக்குத்தான். உன்னை நீயே நம்பு” என்றெல்லாம் சொல்லுங்கள்.

பொருத்தமற்ற விதத்தில் யாராவது தொட்டால், அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையைக் குழந்தைக்கு ஏற்படுத்துங்கள்.

அறிமுகம் இல்லாதவர் யாராக இருந்தாலும் உங்களை அவர்கள் தொடும் முறை பிடிக்கவில்லை என்றால் அதை உறுதியான வார்த்தைகளாலும் உடல் பலத்தாலும் சொல்லிவிட வேண்டும். பயந்து அழுவதும் கூனிக் குறுகி நிற்பதும் எந்தவிதத்திலும் பிரச்சினையைத் தீர்க்காது என்பதைச் சொல்லிக்கொடுங்கள்.

எல்லா நேரங்களிலும் நாம் குழந்தைகளோடு இருக்க முடியாது. எனவே, அறிமுகமானவர் – நெருங்கிய உறவினர் அத்துமீறி நடந்தால் அவர்களுடன் தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்துவிடச் சொல்லுங்கள். குழந்தைகள் தனியாக இருக்க நேரிடும் நேரம் பற்றிய தகவல்களை யாரோடும் பகிர வேண்டாம் என்று சொல்லுங்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *