Antharangam

மனதிற்கு நெருக்கமானவர்கள் கையை பிடிப்பது ஏன் தெரியுமா?

By  | 

உடல்வலி என்பது எல்லோருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை தான். எடை அதிகம் கொண்ட பொருட்களை நீண்ட நேரத்திற்கு தூக்குவதாலோ, அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியை மேற்கொள்வதாலோ வலி ஏற்படுவது இயல்பான விஷயம். ஆனால், சில சமயம் இந்த உடல் வலி சில நோய்களுக்கான அறிகுறியாகவும் இருக்கிறது.

தலைவலி, முதுகுவலி, கழுத்துவலி, மூட்டுவலி, தசைவலி போன்ற பொதுவான வலிகள் தவிர மற்றொரு வித்தியாசமான வலி தான் நரம்புகளில் ஏற்படக்கூடிய வலி ஆகும். இது நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகள் பலவீனமடையும்போது ஏற்படக் கூடியதாகும். இதற்கு நரம்புநோய் வலி (Neuropathic Pain) என்று பெயர். உடல் வலியை தாங்கமுடியாமல் பலர் மருத்துவமனைக்கு படையெடுப்பது உண்டு. ஆனால், மருந்து மாத்திரை இல்லாமலே எளிமையாக உடல் வலியை குறைக்க முடியும் என்று சமீப ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆமாம்…வலியை அனுபவிக்கும் சமயங்களில் நம் மனதிற்கு நெருக்கமானர்களின் கையை பிடித்தாலே போதும். வலி குறைந்து விடுமாம். கொலராடோ பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் இது தெரியவந்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பாவெல் கோல்ட்ஸ்டைன் என்ற ஆராய்ச்சியாளர் இந்த முறையைக் கண்டறிந்துள்ளார். இதை அவர் கண்டுபிடித்த பின்னணி சுவாரஸ்யமான சம்பவம் ஆகும்.

கோல்ட்ஸ்டைனின் மனைவி பிரசவத்தின்போது வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அப்போது தன் மனைவியின் கைகளை கோல்ட்ஸ்டைன் ஆதரவாக பிடித்துக் கொண்டாராம். இதனையடுத்து, பிரசவ வலி குறைந்து மிகவும் எளிமையாக உணர்வதாக அவரது மனைவி கூறியுள்ளார். இந்த கூற்றில் உண்மை உள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் கோல்ட்ஸ்டைனுக்கு அதிகரித்துள்ளது. உடனே இது தொடர்பாக ஆராய்ச்சி பணிகளில் அவர் கவனம் செலுத்தினார்.

இந்த ஆய்விற்காக சுமார் 22 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் மூளையின் செயலாற்றலைக் கணக்கிட EEG கப்ஸ் பொருத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த ஜோடிகள் தனி அறையில் இருக்கும்போதும், ஒரே அறையில் தொடாமல் இருக்கும்போதும், கை கோர்த்து இருக்கும்போதும் அவர்களின் மூளையின் செயலாற்றல் கணக்கிடப்பட்டது. பெண்கள் மிகுந்த வலியை அனுபவிக்கும்போது ஆண்களின் தொடுதலால் அவர்களின் வலி குறைகிறது என்பது ஆய்வில் நிரூபணம் ஆனது.

தொடுதல் உணர்வின் மூலம் பகிரும் அனுபவம் ஏற்படுகிறது. இதனால் வலியானது இருவருக்கும் பகிரப்படுவதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. எளிமையான உதாரணம் ஒன்றின் மூலமாக இதை விளங்கிக் கொள்ளலாம். வலி இருக்கும்போது துணையின் தொடுதலை உணர்வதால், வலியின் தாக்கம் தொடப்படுபவரின் உடலில் குறைகிறது. இதனால் அவர் தனியாக இல்லை என்கிற உணர்வை உடல் அடைகிறது. இதன் காரணமாக வலியின் தாக்கம் குறைவதாக தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *