Entertainment

அனுபவ பாடம் சொல்லும் கிராமத்து மருத்துவச்சியுடனான ஓர் சந்திப்பு

By  | 

‘நான் அறுபது அறுபத்தைந்து பேருக்கு பிரசவம் பார்த்திருக்கன். ஆனா இதுவரைக்கும் யார்கிட்டேயும் ஒரு சதம் வாங்கினது இல்ல. இத நான் புண்ணியமாதான் செய்திட்டு இருக்கேன்.நாம் உயிர் என்று நம்புகின்ற ஒன்றை மாத்திரமே ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்ற முடியாது என்பதை தவிர ஏனைய விடயங்களை ஆங்கில மருத்துவத்தால் செய்ய முடி­யும் என்ற நிலைதான் இன்று உள்ளது.

அதேபோன்று இன்று இந்த மருத்துவத்தால் ஒரு தாயின் வயிற்றில் உருவான கரு ஆணா? பெண்ணா? எத்தனை குழந்தைகள் என்று கண்டறிந்து கூறக் கூடியதாகவும் இருக்கின்றது. இவ்வசதியை பயன்படுத்தி பல தம்பதிகள் தமக்கு உருவான குழந்தை, பெண் குழந்தையாக இருந்தால் அதனை கருவிலேயே அழித்துவிடுகின்ற நிகழ்வுகளும் நமது ஊர்களில் இடம்பெறுகின்றன.

அது சரி, எதற்காக இப்போ இதெல்­லாம் இங்க சொல்றீங்கன்னு நீங்க எண்ணுவது புரிகின்றது. ஆனால், நாங்க இந்த ‘இன்றோ’ கொடுக்­கிற­­துக்கு காரணம் மேற­்­­சொன்ன விடயங்க­ளெல்லாம் இன்னைக்கு இருக்கின்ற நவீன மருத்து­வத்தாலும் அதிநவீன மருத்துவ சாதனங்களாலும் மாத்திரம் சாத்திய­மானவையாகும்.
ஆனால், எந்தவிதமான மருத்துவ உபகரணங்களோ கண்டுபிடிப்புக்களோ இல்லாத இற்றைக்கு ஜம்பது ஆண்டு­களுக்கு முன்னர், நம்ம ஊர்களில் இருந்த பெண்கள் ஒரு கர்ப்பிணி­யின் வயிற்றில் உருவாகி இருக்கும் கரு­வானது ஆணா, பெண்ணா, அது எத்தனை குழந்தைகள் என்பதை­­யெல்லாம் மிக சரியாக சொல்லி­யிருக்கின்றார்கள் என்றால் எங்கள் பாட்டி வைத்தியத்தின் வலிமை எத்தகை­யது என்பதை கணித்துக­்­­கொள்ளுங்கள்.

நாங்கள் கூறுகின்ற இப் பாட்டி­கள் பலரும் இப்போது உயிரோடு இல்லை. இருக்கும் ஒரு சிலரும் தற்போது பல்வேறு சட்ட பிரச்சினை­களால் பிரசவிக்கும் வேலையை செய்வதில்லை. இந்நிலையில் மருத்து­வச்சி ஒருவரின் அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லலாம் என்ற எண்ணத்தில் சந்தித்துப் பேசினோம்.
இவரை பற்றிச் சொல்ல வேண்டு­மானால், இவர் படித்தது வெறும் ஜந்தாம் தரம் வரை மாத்திரமே. தற்போது பனை ஓலையில் பன்ன வேலைகள் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தி வரும் இவர், தமது ஊரில் அறுபத்தைந்துக்கும் அதிகமான கர்ப்பிணிகளுக்கு சுக பிர­சவம் செய்தவர் என்கி­றார்கள்.

யாழ்ப்பாணத்திற்கு சொந்த­மான தீவுக் கூட்டங்களின் பெரிய தீவுகளில் ஒன்றுதான் புங்குடுதீவு. இங்கே மூன்றாம் வட்டாரம் சங்கத்தாகேணி என்ற ஊரில் வசிப்பவர் இந்த மருத்துவச்சி சுந்தரலிங்கம் புவனேஸ்வரி.

இளமை காலம்
எங்க வீட்ல நான் தாய்க்கு தலைப்­பிள்ளை. எங்களோட அப்பா எனக்கு பத்து வயது இருக்கும்போதே இறந்திட்டார். அதனால நான் ஜந்தாம் வகுப்பு வரைக்கும்தான் படிச்சேன். மற்ற தங்கைகள் ஓரளவு மேல் படிப்பு படிச்சாங்க.
அதுக்கு பிறகு நான் வேலைக்குப் போகத் தொடங்கிட்டேன். கூலி வேலை, பன்ன வேலை போன்ற வேலை செய்திருந்தேன். நான் திருமணம் முடிச்சதும் எனக்கு ஆறு பெண் பிள்ளைகள்.

மருத்துவச்சியான வரலாறு…
‘எங்க மாமா அவரை பரியாரி சின்­னத்தம்பர் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். அவரோட கொஞ்ச காலம் உதவிக்கு நின்­றேன். அப்படி இருக்கும்போது அவரிட­மிருந்து தமிழ் கை வைத்தியங்கள பழகியிருந்தேன். நோவு, காயம், வீக்கம் போன்றவற்றுக்கு என்ன மூலிகை கொடுக்கனும்னு தெரியும்.

அதுக்கு பிறகு அந்த நாளையில பிரசவம் நடக்கும்போது வைத்திய­சாலையில் உதவிக்கு போவேன். பெரிய டாக்டர் இருந்தா உள்ள விடமாட்டாங்க. மற்றபடி நான் இருப்பேன். இப்படி போகிறப்போ அதைப் பார்த்து நானும் பழகிட்டேன். அதுக்கப்புறோம் நானே பிரசவம் பார்க்க தொடங்கிட்டேன்.

புங்குடுதீவுல எல்லா ஊர்லயும் நான் பிரசவம் பார்த்திருக்கேன். பிரசவத்தின்போது நஞ்சு விழா விட்டால் என்ன செய்யனும், மாக் கொடி (தொப்புல் கொடி) சிக்கினா எப்படி எடுக்கனும் எல்லாம் தெரியும்.நல்லெண்ணெய் போட்டுதான் வயிற்ற உலக்கிறது. பிரசவிக்க கஸ்ரப்பட்டா வெந்தயம் உள்ளி அவிச்சு கொடுப்போம். அப்போது வயிற்று குத்து அதிகமாகி குழந்தை பிறக்கும். அப்டியும் இல்லாட்டி அன்னைக்கு பிரசவம் இல்லை.ஒரு முறை, ஆஸ்பத்தி­ரில பிரசவம் பாக்குற நெர்ஸ் ஒருவர் என்னை ஆஸ்பத்திரில வேலைக்கு சேர்த்து விடுறதா சொன்­னாங்க. ஆனா நான் போகல்ல’.

புண்ணியமா தான் செய்றேன்
‘நான் அறுபது அறுபத்தைந்து பேருக்கு பிரசவம் பார்த்திருக்கன். ஆனா இதுவரைக்கும் யார்கிட்டேயும் ஒரு சதம் வாங்கினது இல்ல. இத நான் புண்ணியமா தான் செய்திட்டு இருக்கேன். அந்த புண்ணியம் எனக்கு கிடைச்சிருக்கு.அதனால் தான் என்னோட மகள் ஒருத்தி இந்தியால இருந்தபோ பிரச­வத­்­­தன்னைக்கு சரியா கஸ்ரப்­பட்டாங்க. பதினைந்து மணித்தியாலம் கஸ்ரப்­பட்டிருக்கா. ஆனாலும் என் பிள்ளைக்­கும் அவளோட பிள்ளைக்கும் கட­வு­ளேன்னு எதுவும் ஆகாம சுக பிர­ச­வமா நடந்தது.
அத்தோட இப்படி செய்ய கிடைச்­சதே நான் செய்த புண்ணியம்தான். அதனால நான் யார்கிட்டேயும் காசு வாங்குறதில்ல’.

பிறக்க போற பிள்ளை என்னன்னு வயிற்ற பார்த்து சொல்லுவேன்.’தாயோட வயிற்ற பார்த்து அவங்களுக்கு எத்தின பிள்ளையின்னு சொல்லுவேன். அது மாதிரி தாயின் வயிற்று தொப்புலை பார்த்து பிறக்க போறது ஆண் குழந்தையா, பெண் குழந்தையான்னு சொல்லுவேன்.கடவுள் புண்ணியத்துல இது வரைக்கும் நான் சொன்னது எதுவும் தப்பாகல்ல. அதுமாதிரி நான் செய்த எந்தப் பிரசவமும் வீணா போகவும் இல்லை. எல்லோரும் சுகப் பிரசவம்தான். இன்னைக்கு நான் பிரசவம் பார்த்த குழந்தைகளே திருமணம் முடித்து அவங்களும் குழந்தை பெத்துகிட்டாங்க’.

இப்போ நான் போறதில்ல
‘எனக்கு இப்போ 72 வயதாயிட்டு, கண் பார்வையும் கொஞ்சம் போயிட்டு. அதனால நான் இப்போ பிரசவம் பாக்க போறதில்ல. அதோட இப்போ நாங்க பிரசவம் பார்த்தால் கோட், பொலிஸ் என்று விசாரிக்கிறாங்க.

ஒரு முறை ஒரு பிள்ளைக்கு பிரசவவலி. அம்புலன்ஸ்க்கு சொல்லியும் அது வரல்ல. வலி அதிகமானதால என்ன கூப்பிட்டாங்க. நான் போய் பிரசவம் பார்த்து அது சுகப் பிரசவம். ஆனா அதுக்கு கொஸ்பிட்டல்ல இருந்த நெர்ஸ்சம்மா என்னை பொலிஸுக்கு வா என்று கூப்பிட்டாங்க. ஆனா நான் போகல்ல. இதுவரைக்கும் இத்தனை பிரசவம் பார்த்தும் நான் போகாத பொலிஸுக்கு இப்போ போகனுமா?

அதோட ஏன் இனி வீணான பிரச்சினை என்று இப்போ ஒரு ஏழு வருசமா அந்தப் பிரசவம் பாக்கிறத விட்டுட்டேன் தம்பி’ என ஒரு நீண்ட பெருமூச்சுடன் கூறி முடித்தார் கிராமத்து வைத்தியரான அந்தப் பாட்டி.

தற்போது தனது பிள்ளைகளுடன் வீட்டிலிருக்கும் இவர் பனை ஓலையில் பெட்டிகள், பாய்கள் போன்றவற்றை செய்து அவற்றை கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றார். கிராமங்களில் இருந்த பாட்டி வைத்தியர்களுள் மீதமாக­வுள்ள ஒரு சிலரில் இவரும் ஒருவர்.

இன்றைய பிரசவங்களில் இருக்கும் பரிசோதனைகள் சத்திரசிகிச்சைகள் ஆலோசனைகள் என்பவற்றுடன் ஒப்பிடுகையில் அன்று எதுவுமே இல்லை. தொட்டுப் பார்த்து கருவில் உள்ள குழந்தை பற்றியும் அதன் வளர்ச்சி மற்றும் பிரசவ திகதியை கணிக்கும் அறிவு மருத்துவச்சிகளிடம் இருந்தது. கத்திகள் இன்றி காயங்கள் இன்றி எல்லாம் சுக பிரசவமாயும் இருந்தன.

எனினும், நாமோ நவீனம் தொழில்நுட்பம் என ஓடி இயற்கை முறைகளையும் செயற்கைக்கு மாற்றிக் கொண்டிருக்கின்றோம்.இவர் போன்றவர்களிடம் கற்க வேண்டிய விடயங்கள் எத்தனையோ உள்ளன. இவர்கள் பிரசவம் பார்க்க புத்தகம் படிக்கவில்லை. எல்லாம் அனுபவ பாடங்களே.

ரி.விரூஷன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *