Articles

மக்களால் நான் மக்களுக்காகவே நான் 01: ஆள்வது தமிழகத்தை… பிறந்தது மைசூரில்…!

By  | 

சினிமா முதல் அரசியல் வரை தனக்கென தனித்துவமான இடத்தை தக்க வைத்துக் கொண்டு இன்றளவில் புரட்சித் தலைவியென எல்லோராலும் அழைக்கப்படும் ஜெயலலிதாவின் திறமைகளை கண்டு அதிசயிப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை.

ஜெயலலிதா தமிழில் பேசினாலோ ஆங்கிலத்தில் பேசினாலோ அதை ரசித்துப் பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் உண்டு. ஆங்கிலம் தெரியாதவர்கள்கூட இவர் ஆங்கிலத்தில் பேசினால் மெய் மறந்து கேட்குமளவுக்கு கவர்ச்சிமிக்க பேச்சு. தான் பேசும் எந்த மொழியாயினும் அதற்குரிய உச்சரிப்பு, தொனியை கையாளும் அழகே தனிதான். இவ்வளவு நேர்த்தியாக தமிழ் பேசும் இவரது பிறப்பிடம் தமிழ்நாடு அல்ல.

***

1973ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கர்நாடகா என அடையாளப்படுத்தப்பட்டு வரும் இந்தியாவின் தென் பகுதியில் உள்ள மாநிலம், அதற்கு முன்னரான காலங்களில் மைசூர் என்றே அழைக்கப்பட்டது.

அக்காலத்தில் நிலவிய மன்னராட்சியின் போது பிராமண குலத்தைச் சேர்ந்த ‘நரசிம்ஹன் ரங்காச்சாரியார்’ என்பவர் மைசூர் அரச பரம்பரையில் தோன்றிய மன்னரான ஜெயசாம ராஜேந்திரா உடையார் என்பவரின் அரச குடும்ப வைத்தியராக பணி புரிந்துவந்துள்ளார். பிராமண குலத்தைச் சேர்ந்த இவரது குடும்பம் மைசூரில் வசித்து வந்தாலும் இவர்களின் பூர்வீகக்குடி திருச்சி ஸ்ரீரங்கமாகும். பணி விசுவாசத்தின் காரணமாக ‘ஜெய’ என்ற பெயரடியை தன் பரம்பரையைச் சேர்ந்தவர்களின் பெயருடன் சேர்த்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்ட ரங்காச்சாரி தன் மகனுக்கு ஜெயராம் என பெயரிட்டார். காலப்போக்கில் ஜெயா என்பது  பரம்பரை பெயராக மாறியது. 1935ஆம் ஆண்டு ஜெயராமுக்கும் ஜெயாம்மாள் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிகழ்ந்தது.

அதே காலப்பகுதியில் ஸ்ரீரங்கத்திலிருந்து மைசூருக்கு குடிபெயர்ந்த பிராமணரான ரங்கசாமி ஐயருக்கு அம்புஜவள்ளி, வேதவள்ளி, பத்மவள்ளி என மூன்று மகள்களும் மற்றுமொரு மகனும் வாழ்ந்து வந்தனர். இவர்களில் வேதவள்ளி என்பவரை 1937ஆம் ஆண்டு ஜெயராம் இரண்டாவது முறையாக மறுமணம் செய்தார். இதை ஏற்றுக்கொள்ளாத முதல் மனைவி ஜெயாம்மாள் ‘கணவனின் சொத்துக்களில் எனக்கும் பங்கு உண்டு. ஆகவே எனக்கு அவர் ஜீவனாம்சம் தர வேண்டும்’ என வழக்கறிஞர் வேணுகோபால் என்பவர் மூலம் தன் கணவர் மீது மைசூர் நீதிமன்றத்தினூடாக வழக்கொன்றை தொடர்ந்தார். இதுதான் ஜெ பரம்பரையினர் சந்தித்த முதல் வழக்கு.

அந்தச் சூழலில்தான் அம்மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில், பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை என்னும் ஊரில் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி, மைசூரிலுள்ள செலுவம்பா மருத்துவமனையில், பிற்பகல் 2.34 மணியளவில், சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில், ஜெயராம் வேதவள்ளி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பெற்றோர் இட்ட பெயர் கோமளவள்ளி (ஜெயலலிதாவின் இயற்பெயர்). இவருக்கு ஜெயக்குமார் என்றொரு அண்ணனும் இருந்தார். (அவர் காலமாகி பல ஆண்டுகள் ஆகின்றன)

இந்நிலையில் தொடரப்பட்ட வழக்கு முதல் மனைவிக்கு ஆதரவாகவே அமைந்தது. 1949 ­ 1951 ஆண்டளவில் ‘முதல் மனைவியான ஜெயாவுக்கு ஜீவனாம்சமாக 8000 ரூபாயை ஜெயராம் வழங்க வேண்டும்’ என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

**

அந்தண குலத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதற்கு இரண்டு பெயர்கள் சூட்டும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. அதன் காரணமாக பாட்டியின் பெயரான ‘கோமளவள்ளி’ என்ற பெயரும், பின்னர் ஒரு வயதாகும்போது ‘ஜெயலலிதா’ என்ற தனித்துவமான பெயரும் இவருக்கு இடப்பட்டது. அவ்வூரில் அந்தக் குடும்பத்துக்கு ஜெயா விலாஸ், லலிதா விலாஸ் என்ற இரு இல்லங்கள் இருந்ததாகவும் அதன் நினைவாக ‘ஜெயலலிதா’ என்று பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜெயாவுக்கு 2 வயதான போது ஜெயராம் மரணமடைந்தார். அதன் பின்னர் ஜெயராம் வாழ்ந்து வந்த வீட்டின் மீதும் உரிமை கோரினார் முதல் மனைவி. அதற்கு வேதவள்ளி மறுக்க அதன் மீதும் வழக்கொன்று தொடர்ந்ததாகவும் அது தொடர்பான பழைய ஆவணங்கள் வழக்கறிஞர் வேணுகோபாலிடம் உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்திகள் வௌியிட்டிருந்தன.

அதன் பின்னர் வேதவள்ளி, தான் வாழ்ந்த வீட்டின் ஒரு பகுதியை விற்றுவிட்டு, மகளுடன் பெங்களூருக்கு இடம்பெயர்ந்தார். அங்கு தன் தாய் தந்தையருடன் வேதவள்ளியும் மகள் ஜெயாவும் வசித்து வந்தனர்.

(தொடரும்…)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *