Articles

மக்களால் நான் மக்களுக்காகவே நான் 02: சந்தியாவின் பிரிவும் ஜெயாவின் ஏக்கமும்!

By  | 

1950ஆம் ஆண்டு…

2 வயது சிறுமியான ஜெ, பெங்களூரில் வசித்து வந்த போது அவரது குடும்பத்தை வறுமை ஆட்கொண்டிருந்தது. ஜெயாவின் தாய் வேதவள்ளி, சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு முதலியவற்றை கற்று, அதன் மூலம் கிடைக்கப் பெற்ற தொழிலொன்றை செய்து வந்ததால் பொருளாதார சிக்கலை சமாளித்து வந்தார். சிறு வயதிலிருந்தே கலைகளின் மீது ஈடுபாடு கொண்ட ஜெயாவின் 3ஆவது வயதில் பரத நாட்டியத்தை முறைப்படி பயில ஒழுங்கமைத்துக் கொடுத்தார்.

தாய் எந்நேரமும் தன்னுடனேயே பொழுதைக் கழிக்க  வேண்டும் என்ற எண்ணத்தால் உறங்கச் செல்லும்போது கூட தாயின் சேலை முந்தானையை கையில் இறுக்கமாக சுற்றிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஜெ. அப்படிச் செய்யாமல் அவர் ஒருநாளும் உறங்கியது கிடையாது.

**

1948ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்த வேதவள்ளியின் தங்கையான அம்புஜவள்ளி விமானப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்ததுடன் திரைப்படங்கள், நாடகங்கள் முதலியவற்றிலும் வித்தியாவதி என்ற பெயரில் நடித்து வந்தார்.

**

1952ஆம் ஆண்டில் வேதவள்ளி தன் தங்கையின் உதவியுடன் நடிப்பதற்காக சென்னைக்கு சென்றார். ஆரம்பத்தில் நாடகக் கம்பனிகளிலேயே நடித்து வந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் தோன்றும் கதாபாத்திரங்களுக்கு பின்னணிக்குரல் வழங்கியதுடன் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து முன்னேறினார். 1953ஆம் ஆண்டு முதல் வேதவள்ளி வெள்ளித்திரையில் சந்தியா என்றழைக்கப்பட்டார்.

சந்தியா நடிப்புத்துறையில் மிகவும் பரபரப்பாக இருந்ததால் சென்னையிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இதனால் ஜெ தன் தாயை பிரிந்து தாத்தா, பாட்டி மற்றும் சித்தியான பத்மவள்ளி ஆகியோரின் அரவணைப்பில் வளர்ந்தார்.

பெங்களூரில் உள்ள பிஷப் கொட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் தனது கல்வியை ஆரம்பித்த ஜெ, கல்வியில் திறமைசாலியாகவும் வெட்கமும் குறும்புத்தனமும் துடிப்பும் நிறைந்தவராகவும் விளங்கினார். தாயின் அன்பு கிடைக்கப் பெற்றாலும் அவர் தன்னுடன் இல்லையே… என்ற ஏக்கம் ஜெயாவின் மனதில் உண்டானது. இடையிடையே தாயை நினைத்து அழுத சந்தர்ப்பங்களும் உள்ளன.

சந்தியா சென்னையில் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டிருந்தமையால் அடிக்கடி பெங்களூருக்கு சென்று தன் மகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பெங்களூருக்கு சென்று அடுத்த நாளே திரும்பிவிடுவார்.

எப்போதாவது தன் மகளை பார்க்க சந்தியா பெங்களூருக்கு சென்றால் ஜெ., க்கு கொண்டாட்டம்தான். அதே சமயம் மறுபடியும் தன்னை விட்டுவிட்டு அம்மா சென்னைக்கு சென்றுவிடுவாரோ என்ற பயமும் கவலையும் அதிகமாகவே ஜெ., க்கு இருந்தது.

அப்போது ஜெ., க்கு 5 வயது…

சந்தியா சென்னையிலிருந்து பெங்களூருக்குச் சென்றார். தாயை கண்டவுடன் அந்த நாளை ஆனந்தமாய் கழித்தார் ஜெ. அன்றைய தினமே சென்னைக்கு திரும்ப வேண்டிய அவசியம் இருந்தது. மகள் விழித்திருக்கும்போது சென்றால் அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிடுவார் என்பதால் மகளை தூங்க வைத்துவிட்டு பின்னர் செல்லலாம் என நினைத்தார் சந்தியா.

“நாம் நித்திரைக்கு சென்றுவிட்டால் அம்மா நம்மை விட்டு சென்றுவிடுவார்…” என்று மனதுக்குள் கணக்குப் போட்ட ஜெ, அம்மா அணிந்திருந்த சேலை முந்தானையை வழக்கம் போல தன் கையில் சுற்றி முடிச்சுப் போட்டுக் கொண்டார். இனி தனக்கு தெரியாமல் தன்னை விட்டுவிட்டு அம்மா செல்லமாட்டார் என்று எண்ணியவர் நன்றாக உறங்கிவிட்டார்.

நள்ளிரவு கடந்தது. மகளின் ஆழ்ந்த உறக்கத்தை அவதானித்த சந்தியா தன் சேலை முந்தானையை மகள் விழித்துக் கொள்ளாதபடி அவிழ்த்துவிட்டு அதற்குப் பதிலாக  தங்கையின் முந்தானையை ஜெ., யின் கையில் சுற்றி கட்டிவிட்டு, தன் பெற்றோரிடமும் தங்கையிடமும் மகளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறி சென்னைக்கு பயணமானார்.

உறங்கச் செல்லும்போது கூட தாயின் சேலை முந்தானையை கையில் இறுக்கமாக சுற்றிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஜெ.

காலை விடிந்தது. தூக்கத்திலிருந்து விழித்துப் பார்த்த ஜெ அம்மா அருகில் இல்லை… தனக்கு தெரியாமல் மீண்டும் சென்றுவிட்டார் என்பதை அறிந்து அழ ஆரம்பித்தார். மூன்று நாட்களாகியும் அவரது அழுகையும் கவலையும் குறையவில்லை. பின்னர் பாடசாலை கல்வி, நண்பர்களுடனான பழக்கம், பிற செயற்பாடுகளில் ஈடுபட அந்தக் கவலையும் அழுகையும் மறைந்து போனது.

இப்படி தாயும் மகளும் ஓரிரு நாட்கள் சேர்வதும் பல நாட்கள் பிரிந்து வாழ்வதும் வழக்கமாயிற்று…

 

(தொடரும்…)

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *