Articles

மக்களால் நான் மக்களுக்காகவே நான் 03: கல்வித்திறனும் கலையார்வமும்!

By  | 

சென்னையில் அம்மாவுடன் சேர்ந்து வாழ்ந்தும் அவருடன் பேசுவதற்கு, பழகுவதற்கு, பொழுதுகளை பகிர்ந்து கழிப்பதற்கான வாய்ப்புகள் ஜெ.,க்கு அவ்வளவாக கிடைக்கவில்லை.

“நான் எழுதிய ஆங்கிலக் கட்டுரைக்காக இன்று பாடசாலையில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்தக் கட்டுரையை உங்களுக்கு காட்டுவதற்காகவே நான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன். நேரம் சென்றதால் அப்படியே உறங்கிவிட்டேன்” என்றார் ஜெயா.

தாயைப் பிரிந்து பெங்களூரில் பாடசாலைக் கல்வியை தொடர்ந்து வந்த ஜெ.,யின் வாழ்க்கையில் ஓர் ஆனந்தத் திருப்பம்.

1958ஆம் ஆண்டு…

ஜெயாவின் தாய் சந்தியாவின் தங்கை பத்மவள்ளிக்கு பெங்களூரில் திருமண வைபவம் நிகழ்ந்தது. அதன் பின்னர் 10 வயது நிரம்பிய தன் மகளையும் சென்னைக்கு அழைத்துச் சென்றுவிட்டார் சந்தியா.

சென்னையில் உள்ள சர்ச் பார்க் பிரசண்டேஷன் கொன்வென்ட்டில் (மெட்ரிகுலேஷன் பள்ளியில்) அனுமதி பெற்று கல்வியைத் தொடர்ந்தார்.

பாடசாலையில் கல்வியை மட்டுமல்லாமல் கோபால கிருஷ்ண சர்மாவிடம் கர்நாடக சங்கீதத்தையும் பயின்று வந்தார். அத்துடன் நடனம், மேலை நாட்டு இசைக்கருவியான பியானோ, கதக், மோகினியாட்டம் மற்றும் நாடகக் கலை முதலிய கலைகளையும் திறமையாய் கற்று வந்தார் ஜெ.

பாடசாலையில் எந்தக் கலை நிகழ்ச்சி இடம்பெற்றாலும் அதில் ஜெயாவின் நடனம் இல்லாமல் இருக்காது. எந்த நடனத்தை ஏற்று ஆடினாலும் பாராட்டுகளும் கைதட்டல்களும் குவிந்துவிடும். “ஜெயா இன்றைக்கு நீ ஆடிய நடனம் படு சூப்பர” என்று பாடசாலை ரசிகர் வட்டம் சொன்னதும் ஜெ துள்ளிக் குதித்துக் கொண்டு வீட்டுக்கு செல்வார்.

வீட்டுக்குச் சென்றதும் தனக்கு கிடைத்த பாராட்டுக்களையும் அன்புமொழிகளையும் கூறி தன் அம்மாவிடமும் முத்தப் பரிசுகளை பெற்றுக் கொள்வார்.

இன்பமான நிகழ்வுகளாகட்டும் துன்பகரமான விடயமாகட்டும் அனைத்தையும் தன் தாயாரிடமே பகிர்ந்து கொள்ளும் வழக்கமுடைய ஜெ, “என் தாய்தான் எனக்கு தெய்வம்” என்று அடிக்கடி கூறுவார்.

பெங்களூரில் இருந்த போது தாயை பிரிந்து துன்புற்ற ஜெ, சென்னையில் அம்மாவுடன் சேர்ந்து வாழ்ந்தும் அவருடன் பேசுவதற்கு, பழகுவதற்கு, பொழுதுகளை பகிர்ந்து கழிப்பதற்கான வாய்ப்புகள் ஜெ.,க்கு அவ்வளவாக கிடைக்கவில்லை.

ஜெ காலையில் நித்திரை விட்டெழுவதற்கு முன்னதாகவே படப்பிடிப்புக்குச் செல்லும் சந்தியா, இரவில் மகள் தூங்கியதன் பின்னரே வீட்டுக்கு வருவார்.

அப்படியொரு சந்தர்ப்பத்தில், ஜெ எழுதிய ஆங்கிலக் கட்டுரையொன்று, அப்போதைய பம்பாயில் (தற்போதைய மும்பையில்) வெளியான ‘இல்லஸ்ட்ரேட்டர் வீக்லி’ என்ற ஆங்கில பத்திரிகையில், சிறுவர் பகுதியில் பிரசுரமாகியிருந்தது. அதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வாழ்த்து மடல்களை அனுப்பியிருந்தனர். அந்தக் கட்டுரைக்கு பாடசாலையில் முதல் பரிசும் கிடைத்தது.

தனக்கு பெருமையை தேடிக் கொடுத்த ஆங்கிலக் கட்டுரையை அம்மாவுக்கு காட்ட வேண்டும் என சந்தியா வீட்டுக்கு வரும்வரை தூங்காமல் காத்திருந்தார் ஜெ. ஒவ்வொரு நாளும் தன் அறையில் போடப்பட்ட கட்டிலில் சீக்கிரமாகவே படுக்கச் சென்றுவிடும் ஜெ அன்றைய தினம், வரவேற்பறையில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து காத்திருந்தவாறே உறங்கிவிட்டார்.

வழக்கம் போல இரவு மிகத் தாமதமாக வீட்டுக்கு வந்த சந்தியா, வரவேற்பறையில் சோபாவின் மீது மகள் உறக்கத்தில் இருப்பதை ஆச்சரியமாக பார்த்தவாறு ஜெ.,யின் அருகில் சென்றார். ஒரு பயிற்சிக் கொப்பியை ஜெயா அணைத்துப் பற்றியிருந்ததையும் அவதானித்தார்.

ஜெயாவை உறக்கத்திலிருந்து எழுப்பி, “அறையில் கட்டில் இருக்கும் போது எதற்காக சோபாவில் தூங்குகிறாய் அம்மு…” என்று கேட்டதுடன் கையில் இருக்கும் கொப்பியை பற்றியும் சந்தியா விசாரித்தார். “நான் எழுதிய ஆங்கிலக் கட்டுரைக்காக இன்று பாடசாலையில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்தக் கட்டுரையை உங்களுக்கு காட்டுவதற்காகவே நான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன். நேரம் சென்றதால் அப்படியே உறங்கிவிட்டேன்” என்றார் ஜெயா. அதன் பின்னர் மகளை எண்ணி பெருமை பாராட்டினார் சந்தியா.

பாடசாலையில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளை எழுதவும் பேசவும் கற்றுக் கொண்டார்.

வகுப்பில் ஆங்கிலம் மற்றும் சரித்திரப் பாடங்களை கற்ற ஜெயா, இலக்கியங்களின் மீதிருந்த அதிகமான ஆர்வத்தால் இலக்கிய நுல்களையும் தேடிப் படித்தார்.

பாடசாலை விட்டால் வீடு… வீடு விட்டால் பாடசாலை… இதுதான் அவரது வாழ்க்கை முறை. பாடசாலை விட்டு வீட்டுக்கு சென்றவுடன் கல்வி கற்பதும் புத்தகங்களை வாசிப்பதுமாகவே இருப்பார். அப்படியும் பொழுது போகாவிட்டால் வேறு ஏதாவது செயற்பாடுகளில் ஈடுபடுவார்.

ஆனால் தாயுடன் படப்பிடிப்புத் தளத்துக்கு சென்று அவர் நடிப்பதை பார்க்க வேண்டும் என்ற எண்ணமோ விருப்பமோ ஒருபோதும் ஜெயாவுக்குத் தோன்றியதில்லை. அனைத்து துறைகளிலும் ஈடுபாடு கொண்ட ஜெ.,க்கு நடிப்புத் துறையில் மட்டும் ஏனோ நாட்டம் இருந்ததேயில்லை.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *