Life Style

படுக்கை அறை அழகாக மிளிர அலங்கரிப்பது எப்படி?

By  | 

வீட்டில் படுக்கையறையைச் சரியான முறையில் அமைத்திட வேண்டும். அது மட்டுமன்றி வீட்டில் உள்ள கணவன் – மனைவி உறவு நல்ல முறையில் இருந்திடவும் ஒரு வீட்டில் படுக்கையறையைச் சரியான முறையில் அமைத்திட வேண்டும்.

* படுக்கை அறைகளில் சிறிய அளவிலான கட்டில் மற்றும் மெத்தைகளை பயன்படுத்தலாம். இவ்வாறு சிறிய கட்டில்களை உபயோகிப்பதனால் அறையின் கார்பெட் ஏரியா (பரப்பளவு) விசாலமாக காட்சியளிக்கும். இதனால் அறையில் தேவையான பொருட்களை வைத்துக் கொள்வதற்கும், நடமாடுவதற்கும் சவுகரியமாக இருக்கும்.

* படுக்கை அறைகள் தூங்குவதற்காக மட்டுமில்லாமல் உடைகளை மாற்றிக் கொள்ளவும், அலங்காரம் செய்யவும் பயன்படுகின்றன. இவ்வாறு உடைகளை மாற்றும் போது அழுக்கு துணிகளை சேமித்து வைக்க பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தலாம். அந்த கூடைகளை படுக்கை அறையின் மூலை முடுக்குகளில் வைக்காமல் கட்டிலின் அடியில் மறைவாக வைத்தால் வெளியில் தென்படாது. அறையை துணிகள் ஆக்கிரமித்து இருப்பது போல் தோன்றாது. மேலும் புதிய உடைகளை அடுக்கி வைக்க ஏதுவாக சுவற்றுடன் இணைந்த அலமாரிகளை அமைப்பதினால் அறை அழகாகவும், பெரிதாகவும் தோற்றமளிக்கும்.

* கட்டிலுடன் ரேக்குகள் இடம்பெற்று இருந்தால் அதில் போர்வைகளை மடித்து வைத்து விடலாம். தலையணைகள் வைப்பதற்கும் இடவசதி இருந்தால் கூடுதல் சவுகரியமாக இருக்கும். அறையும் பார்ப்பதற்கு அழகாக தென்படும்.

* வண்ணங்கள் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்த கூடியவை. ஆகவே படுக்கை அறைக்கு குறிப்பிட்ட வண்ணங்களை தேர்வு செய்து பயன்படுத்துவது அறைக்கு அழகை மட்டுமல்ல மனதிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். பொதுவாக படுக்கை அறையில் அடர் நிறங்களை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக வெளிர் வண்ணங்களான வெள்ளை, மஞ்சள், இளம் பச்சை போன்ற நிறங்களை பயன்படுத்துவது ரம்மியத்தை கொடுக்கும். அறையை விசாலமாகவும் காட்சி படுத்தும்.

* சீலிங் விளக்குகளுக்கு பதிலாக சுவர் விளக்குகளை பயன்படுத்துவது அறையின் அழகை அதிகரிக்கச் செய்யும். அதிலும் பளிச்சென்று வெளிச்சத்தை பரவவிடும் விளக்குகளை தவிர்த்து மென்மையாக ஒளிரும் விளக்குகளை பயன்படுத்த வேண்டும். மேலும் அலங்கார மேஜை, கலை ஓவியங்கள் போன்றவைகளின் மேல் மென்மையான ஒளி விழுமாறு விளக்கு களை அமைப்பது அறையை ஜொலிக்க வைக்கும்.

* கண்ணாடிப் பொருட்கள் அதிகமாக இடம்பெறும்படி படுக்கை அறையை வடிவமைக்க வேண்டும். அந்த கண்ணாடிப் பொருட்களின் மீது ஒளி விழுந்து பிரதிப்பலிப்பது அறையை எழில் சூழ்ந்த வெளிச்சத்தால் நிரப்பும்.

* பல்வேறு வகையான கலைப் பொருட்களை சுவற்றில் இடம்பெற செய்தும் படுக்கை அறையை அழகுபடுத்தலாம். மேலும் கலை ஓவியங்களை வண்ண விளக்கு அலங்காரத்தின் மூலம் உயிர் பெறச் செய்யலாம்.

* அறையின் வண்ணத்திற்கு ஏற்ப படுக்கை விரிப்பு, ஜன்னல் திரைச்சீலைகளை தேர்வு செய்தும் படுக்கை அறையின் அழகுக்கு அழகு சேர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *