Articles

மக்களால் நான் மக்களுக்காகவே நான் 04: சிவாஜியை ஈர்த்த தங்கச்சிலை!

By  | 

 பாடசாலை நாட்கள் தவிர்ந்த விடுமுறை நாட்களில் மட்டுமே நடிக்க வைப்பதாக பார்த்தசாரதி உறுதியளித்ததால்தான் ஜெ நடிப்பதற்கு சம்மதித்தார்…

1960ஆம் ஆண்டு…

வீட்டிலிருக்கும் போது ஜெயா வானொலியில் ஏதேனும் இசையை கேட்டால் அதற்குத் தகுந்த படி நடனமாடுவார். இவர் இவ்வாறு நளினமாக நடனமாடுவதை பல முறை பார்த்து ரசித்த தாய் சந்தியா, இவருக்கு நடனக்கலை பயிற்சி வழங்க வகுப்பொன்றை ஏற்பாடு செய்ய எண்ணியிருந்தார்.

அதே காலத்தில் கே.ஜே. சரசா என்பவர் அன்றைய தமிழ் சினிமாவில் பிரபல நடன அமைப்பாளராக பணியாற்றி வந்தார். பிரபல நட்டுவனாரான உழவூர் ராமைய்யாப் பிள்ளையின் தூரத்து உறவுமுறையான நடன ஆசிரியை சரசா, ‘சரசாலயா’ என்ற பெயரில் நடனப் பள்ளியொன்றை உருவாக்கி நிர்வாகித்து வந்தார்.

அங்கு ஆண், பெண் பேதமின்றி பல்வேறுபட்டவர்களுக்கும் சிறந்த முறையில் நடனப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அந்தப் பள்ளியில்தான் சந்தியா, மகள் ஜெயாவை சேர்த்தார்.

சரசாலயா பள்ளியில் கே.ஜே.சரசாவிடம் பரதநாட்டியத்தை வெகு சீக்கிரத்தில் கற்றுக் கொண்டதுடன் சரசாவிடம் பாராட்டையும் பெற்றார்.பாடசாலையில் பல இந்திய பாரம்பரிய நடனக்கலைகளை கற்ற ஜெயா ஒரியன்டல் என்ற மேலை நாட்டு நடனத்தை ஆசிரியர் திரு. சோப்ராவிடம் பயின்றார்.

பாரம்பரிய நடனங்களிலும் மேலை நாட்டு ஒரியன்டல் நடனத்திலும் தேர்ச்சி பெற்ற ஜெயாவுக்கு அரங்கேற்ற வேளையும் வந்தது.

1960ஆம் ஆண்டு, மே மாதம்…

அப்போது ஜெயாவுக்கு 12 வயது.

மயிலாப்பூரில் உள்ள ரசிகா ரஞ்சனி அரங்கில் ஜெயாவின் நடன அரங்கேற்ற விழாவை சரசாவும் சந்தியாவும் ஏற்பாடு செய்தனர். அவ்விழாவுக்கு ஏராளமானோர் வருகை தந்திருந்தனர்.

விழாவை தலைமையேற்று நடத்துவதற்காக அப்போதைய மைசூரின் முதல்வர் B.D. ஜாட்டி மற்றும் தமிழ் சினிமாவின் பிரபலமான நட்சத்திரமாக அப்போதே கொடி கட்டிப் பறந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

ஜெயாவின் நடன நிகழ்ச்சியும் ஆரம்பமானது. அவரது அற்புதமான நடனமும் முக பாவமும் விருவிருப்பான நடன அசைவுகளும் நடிகர் திலகத்தை ஈர்த்தது.ரோஸ் கலந்த சிவப்பழகுடைய ஜெயாவை பார்த்து, சிவாஜி ‘தங்கச்சிலை ஜெயலலிதா’ என புகழாரம் சூட்டி வாழ்த்திவிட்டுச் சென்றார்.

அரங்கேற்ற விழாவும் நிறைவு பெற்றது. ஜெயாவை அறிந்தவர்கள் மட்டுமே அதுவரை பாராட்டு தெரிவித்தது போக விழாவுக்கு வந்த பொது மக்களும் வாழ்த்து தெரிவித்தது ஜெயாவுக்கு புதுவித மகிழ்ச்சியையும் அதிக கலைத்தாகத்தையும் ஏற்படுத்தியது. கலையுலகத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலெழுந்தது.

அதன் பின்னர், சர்ச் பார்க்கில் படித்துக் கொண்டிருந்த போதே ஆங்கிலம் மற்றும் தமிழ் நாடகங்களிலும் நடிக்க ஜெயாவுக்கு வாய்ப்புகள் வந்தன.

பிற்பட்ட கால சினிமாவில் நகைச்சுவை நடிகரும் குணச்சித்திர நடிகரும் விசில் பாட்டால் பிரபலமானவருமான திரு Y.G. மகேந்திரனின் தந்தையான Y.G. பார்த்தசாரதி, அன்றைய திரைப்படத்துறையில் நடிகராகவும் நாடகக் குழுவின் உரிமையாளராகவும் இருந்தார்.

Y.G.P.யின் பல நாடகங்களில் சந்தியாவும் அவரது தங்கை வித்யாவதியும் (ஜெயாவின் சித்தி) நடித்து வந்தனர். அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஜெயாவும் நாடகங்களில் சில காட்சிகளில் நடிப்பதற்காக இணைத்துக் கொள்ளப்பட்டார்.

பாடசாலை நாட்கள் தவிர்ந்த விடுமுறை நாட்களில் மட்டுமே நடிக்க வைப்பதாக பார்த்தசாரதி உறுதியளித்ததால்தான் நடிப்பதற்கு சம்மதித்தார் ஜெ.

பார்த்தசாரதி குழுவினர் நடாத்திய ஓர் ஆங்கில நாடகத்தில் ஆங்கிலம் பேசத் தெரியாத பிரெஞ்சுப் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்தார் ஜெயா. அந்த நாடகத்தில் நகைச்சுவை நடிகர் ‘சோ’ தான் வில்லன்.

அந்த நாடகத்தின் மூலம் ஜெ.,க்கு சோவிடமும் பார்த்தசாரதியிடமும் நற்பெயர் கிடைத்தது.

இப்படி வாய்ப்பளிக்கப்பட்டு பல நாடகங்களில் நடித்து வந்தார் ஜெ. அவற்றில் ‘Tea House of the August Moon’, ‘Under Secretary’, ‘மாலதி’ ,  ‘The Whole Truth’ ஆகியன சிலவே.நாடகங்களில் மிளிர்ந்த ஜெயாவுக்கு அடுத்த கட்டமாக வெள்ளித்திரை வாய்ப்பு தேடி வந்தது.

(தொடரும்…)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *