Interview

தமிழர்களின் பாரம்பரியம் சொல்லும் வடக்கின் மாட்டுவண்டில் சவாரி

By  | 

இலங்கையின் வடபகுதியில் பெரும்பாலான கிராமங்களில் இளை­ஞர்களது பெருங் கனவுகளில் ஒன்றாக இருப்பது தாமும் மாட்டு­வண்டில் சவாரிகளில் வெற்றி­யீட்டியவர்களாகவும், அதில் மிகவும் பெயர் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே.

ஒவ்வொரு வார இறுதியிலும் நடைபெறும் இம்மாட்டுவண்டில் சவாரி போட்டிகளை நேரில் சென்று பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும். இளைஞர்கள் பலரும் எவ்வளவு ஆர்வத்துடன் இச் சவாரிகளில் பங்கு­பற்றுகின்றார்கள் என்பதை. ஆம், அந்­தளவிற்கு இம்மாட்டு­வண்டில் சவாரி­யானது எமது பாரம்­பரியத்தோடு ஒன்றித்து போன வீர விளை­யாட்­டுக்களில் ஒன்றாக காணப்­படுகின்றது.

குறிப்பாக தொழில் நடவடிக்கைக­ளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த காளை மாடுகளை காலப்போக்கில் மக்கள் தமது வீர விளையாட்டு­களுக்­காகவும் பயன்படுத்தத் தொடங்கிய­தன் மூலமாக தோற்றம் பெற்ற ஒன்றே இப்போது நாம் பார்க்கப் போகும் மாட்டுவண்டில் சவாரிப் போட்டிகள்.

ஒரு காலத்தில் மாடு கட்டி வண்டில் பூட்டி சவாரி செய்த ஒரு வயதானவர் இச்சவாரி பற்றி கூறுகையில், ” எங்க அப்பா சொல்வார் யாழ்ப்பாணத்துல குதிரை வண்டில பாதிரியார் போன­போது எங்கட மாட்டு வண்டி அந்தக் குதிரை வண்டியை முந்திக்­கொண்டு சென்றது” என்றார்.

இப்படியாக வேகமாக ஓடக்கூடிய மாடுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்குப் பயிற்சி கொடுத்து அவற்றை வண்டில்­களில் பூட்டியே இப்போட்டிகளை நடத்துகின்றார்கள். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, ‘சைக்கிள், கிரைன்டர்கள், அலுமாரிகள், தங்கச்சங்கிலி’ போன்ற பொருட்கள் பரிசாகவும் வழங்கப்படுகின்றது.
அந்த வகையில் இம்மாட்டுவண்­டில் சவாரிகள் தொடர்பாக அறிந்திரா­­­தவர்களும் அறிந்துகொள்ளும் வகை­யில் யாழ்ப்பாணத்தில் போட்டிகளை நடத்தும் மாட்டுவண்டில் சவாரி சங்கத் தலைவர் நீர்வேலி கிரி, அள­வெட்டியூர் சவாரிக்­காரன் சின்னத்துரை மகேந்திரன் மற்றும் பலரிடமும் கேட்டு இதன் முழு­மையை மித்திரன் வாசகர்களுக்காக தந்திருக்­கின்றோம்.

சவாரியின் ஆரம்ப கால நிலை
ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாணத்­திலும் வடக்கின் ஏனைய இடங்களிலும் வண்டில் சவாரிகள் வீதிகளில்தான் இடம்­பெற்றுள்ளன. இதன்போது இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட வண்­டில்­களை ஓட்ட பந்தயம் போல ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தி ஓட விடுவார்கள். 5 தொடக்கம் 6 கிலோ மீற்றர் வரையான தூரத்தில் வண்டில்­கள் ஓடி அதில் முன்னணியில் வரும் வண்டில்கள் தெரிவு செய்யப்படும்.

மாட்டுவண்டில் கயிற்றினைப் பிடித்து ஒருவர் வண்டிலை செலுத்த மற்றையவர் மாட்டினை தட்டிக­்­­கொடுத்து இருவருமாக ஓடிச் செல்­வார்­கள். சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் வீதிகளில் வண்டில் சவாரி நடந்தால் வீதியால் செல்லும் வாகனங்­கள் சவாரிக்கு வழிவிட்டு போட்டியை நடத்த ஒத்துழைப்பதுடன் அதற்கு அன்றிருந்த பொலிஸ் அதிகாரிகளும் மாவட்ட அதிபரும் ஒத்துழைத்தி­ருந்தார்கள். இவ்வாறாக இடம்பெற்ற இச் சவாரி­யானது காலப் போக்கில் வீதிகளில் நடத்த முடியாமல் போகவே அதன் பின்னர் இவற்­றுக்கான சவாரி தரவை­கள் (சவாரி திடல்கள்) உருவாகப்­பட்டன.

சவாரி மாட்டின் தனித்துவம்
சவாரிக்காக எல்லா மாடுகளை­யும் வண்டில்­களில் பூட்ட முடியாது. சவாரிக்­குரிய மாடுகள் தனித்து­வமான­தாக இருக்க வேண்டும் என்கிறார்கள் சவாரிக்­காரர்கள். இதற்காக மன்­னார் நாட்டு மாடு­களும் தெற்கு வன்னி மாடுகளுமே பெயர் பெற்றதாக இருப்ப­தாகக் கூறும் இவர்கள் அம்மாடுகள் அழகாகவும் மிடுக்­காகவும் இருக்க வேண்டும் என்கி­றார்கள்.

மேலும் அவற்­றின் முகமானது நீளமான­தாக­வும், அகன்ற நெற்றி கொண்ட­தாகவும், கொம்பு வளைந்து ஒன்றை­யொன்று அண்மை­யான­தாகவும், நெஞ்சு விரிந்த­தாகவும், கால்கள் அம்பு போன்ற வடிவத்திலும் பெரிய கண்களை உடையதாகவும் இருக்க வேண்டுமாம்.

இவ்வாறான மாடுகளை சிறிய வயதிலேயே வாங்கி அதற்காக பயிற்சியளிக்கப்பட்டே சவாரிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு சவாரி முடிந்த பின்னர் குளங்கள், கடலில் நீச்சல் பயிற்சிகளும் வழங்கப்­படுகின்றன. உடலில் இருக்கும் அலுப்புக்கள் போவதாகவே இவை செய்யப்­படுகின்றன.

அத்துடன் சவாரி ஓடிய மாடுக­ளுக்கு கால் மற்றும் அதன் மூட்டுக்­களில் உள்ள பிடிப்புக்களை நீக்கு­வதற்காக சவாரியின் பின்னர் அவை தோட்ட வேலைகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றன. அத்தோடு ஏனைய மாடுகளைப் போல் அல்லாது அளவான உணவு, நீர் என்பனவும் முறை­யாக கவனிக்கப்பட்டே இவை சவாரிக்கு ஏற்ற மாடுகளாக வளர்க்கப்­படுகின்றன.

சவாரி திடல் அமைப்பு
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் போன்ற இடங்களில் பல சவாரித்திடல்கள் காணப்படுகின்றன. வட்டுக்கோட்டை கொட்டதரவை, பொன்னாலை மான்பாஞ்ச வாய்க்கால், நீர்வேலி, புத்தூர், ஆவரங்கால், மாதகல், கிளி­நொச்சியில் வட்டகச்சி, முல்லைதீவில் விசுவமடு, உழவனூர், முரசுமோட்டை, கோணாவில், அக்கராயான், மன்னா­ரில் திருக்கேதீச்­சரம் அருகில் போன்ற இடங்களில் இத் தரவைகள் காணப்படுகின்றன.

இச் சவாரி திடலுக்காக தேர்ந்தெடுக்கப்­பட்டுள்ள நிலமானது மாடுகள் நன்றாக கால்களைப் பதித்து ஓடக்கூடியவாறு காணப்படும். நிலத்தின் கீழ் மிக மேல்மட்டமாக பாறைகள் இருக்கும் நிலங்கள் தேர்ந்­தெடுக்கப்படுவதில்லை. அத்துடன் திடலின் மொத்த நீளம் 400 மீற்றர்களாகவும், அகலம் 50 மீற்றர்களாகவும் காணப்படும்.

வண்டிலின் அமைப்பு
சவாரிக்கு பயன்படுத்தப்படும் வண்டிலுக்கும் மற்றைய வண்டி­லுக்­குமிடையில் பாரிய வேறு­பாடு­ கள் காணப்படுகின்றன. மாடு­­களானது இலகுவாக இழுத்­துக்­கொண்டு ஓடக்­­கூடியவாறு சவாரி வண்­டில்கள் பார­­மற்ற­தாக செய்யப்­படுகின்றன. இதற்காக பல்வேறு மரங்கள் பயன்படுத்­தப்­படுகின்றன.

சக்கரத்தின் வளைய சட்டம் பூவரச மரத்தில் செய்யப்­படுகின்­றது. இது 7 1/4 சுத்துடையதாக காணப்படும். சக்கரத்தின் குடம் முதிரை மரத்தாலும், அச்சுகுத்தி மா மரத்தாலும், தட்டு பலா மரத்தாலும், கிறாதியின் கடச்சல்சட்டம் முதிரை மரத்தாலும் பனை மரத்தாலும், துலா பனை மரத்தாலும், நுகம் மஞ்ச­முன்னாவினாலுமாக பார­மற்றதாக செய்யப்படுகின்றன.

சவாரி நடத்தப்படும் முறை
ஒரேநேரத்தில் ஒரே நேரில் (ஒன்றன் பின் ஒன்றாக இல்லை) நான்கு வண்­டில்கள் நிறுத்தப்பட்டு போட்டி­கள் நடத்­தப்படும். ஒவ்வொரு வண்டில்­களுக்கும் இடை­யில் 12 மீற்றர் இடை­வெளி காணப்­படும். இந்த இடை­வெளி­­­­யானது வண்டில்கள் ஒன்றோடு ஒன்று மோதாதவாறு செல்வதற்காக விடப்படுகின்றது. சராசரியாக ஒரு போட்­டிக்காக 120 சோடி மாடுகள் அதாவது, 240 மாடுகள் போட்டிக்காக கொண்டு வரப்படும். இவ்வாறு கொண்டு வரப்படும் மாடுகள் நான்கு பிரிவு­­களாகப் பிரிக்கப்படும். அதாவது, A,B,C,D ஆகிய நான்கு பிரிவு­களாக போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்­வொரு பிரிவி­லும் பரிசுகள் வழங்­கப்­படும். இதில் D பிரிவில் இரண்டு பற்களை போட்ட மாடுகள் வண்­டில்­­களில் கட்­டப்­படும். (பற்கள் போடுவதன் அடிப்­­படையிலேயே அதன் வயது கணிக்கப்­படும்) C பிரிவில் இரண்டு பற்களுக்கு மேல் போட்ட மாடுகள் கட்டப்படும். B பிரிவில், C பிரிவில் ஓடிய மாடுகள் இளம் கட்டிளமை மாடுகள்.
A பிரிவில் பூட்டப்படும் மாடுகளே அதி உச்ச வேகமுடைய நன்கு வளர்ந்து முதிர்ந்த மாடுகள். இம்மாடுகள் பெரும்­பாலும் மிடுக்­காகவும், நிமிர்ந்ததாகவும் காட்சியளிக்கும். இவை பந்தயம் ஆரம்­பமாக முன்னரே எல்லை கோட்­டில் நின்று ஓடுவ­­தற்கு தயாராக முறுக்கிக்­கொண்டி­­ருப்­பதையும், அதனை அடக்க சவாரிக்­காரர்கள் திண்டாடுவதையும் நேரில் சென்று பார்த்தால் தெரிந்து­கொள்ளலாம். அத்துடன் இவை 19 செக்கன்களில் 400 மீற்றர் தூரத்தை கடக்கக்கூடிய வல்லமை மிக்கவை.

மாடுகளையும் வண்டிலினையும் செலுத்தும் முறை
போட்டியின் ஆரம்பத்திற்காக எல்­லைக் கோட்டில் மாடுகள் கட்­டப்பட்ட வண்டில்கள் நிறுத்­தப்பட்டிருக்கும். இதன்போது போட்டி­யின் நடுவர் வெள்ளை அல்லது சிவப்பிலான கொடியினை அசைத்தவுடன் மாடுகள் தட்டிக்­கொடுக்கப்பட்டு வேகமாக செலுத்­தப்­படும். இதன்போது முன்னரை போல இருவர் வண்டிலை செலுத்­து­வ­தில்லை. ஒருவரே வண்டி­லையும் மாட்டினையும் செலுத்தி செல்வார்.

இப்போது வண்டிலை செலுத்து­பவர் வண்டிலின் துலா கம்பில் படுத்­­திருந்தவாறு தனது இரண்டு கால்­களையும் வண்டில் கீழ் அடி தளக் கட்டையில் உதைப்பு கொடுத்த­வாறு செலுத்துவார். இதன்­போது வண்டிலில் கட்டப்­பட்ட இரண்டு மாடுகளில் எந்த மாடு பாதையை விட்டு தவறி செல்­­கி­றதோ அந்த மாட்டிற்கு தடி­யாலோ (விடுகை தடி எனப்­படும்) அல்லது கையாலோ தட்டிக­்­­கொடுத்து ஓட்டிச்செல்வார்கள்.
இதில் ஓட்டிச்செல்பவர் எழுப்பும் சத்தத்தை வைத்துத்தான் எவ்வாறு ஓடிச்செல்ல வேண்டும் என்பதை மாடுகள் புரிந்துகொள்கின்றன.

கழைகட்டும் சவாரி
வாரந்தோறும் ஒவ்வொரு ஞாயிற்­றுக்கிழமைகளிலும் மாலையில் நடத்­தப்படும் இச் சவாரியானது வெறுமனே போட்டியல்ல அது எமக்கு ஊர் கூடிய திருவிழா எ­ன்கிறார் அளவெட்டியூர் சவாரிக்­காரன் சின்னத்துரை மகேந்திரன்.

ஆம், வடக்கின் பல ஊர்களிலி­ருந்­தும் தமது மாடுகளையும், வண்­­டில்­களையும் சொந்த பந்தங்­­களை­யும் ஏற்றிக்கொண்டு இவர்­கள் சவாரி திடலுக்கு வந்திடு­வார்கள். அங்கே பரந்த வெளி­யான தரவை­களின் ஓர் இடத்தில் லொறிகளும் அதற்கருகில் வண்­டில்­களும் மாடுகளும் வந்த­வர்களும் இருப்­பதை காணும்போது திருவிழா போன்றே இருக்கும்.

1990களில் வெளி­வந்த கிராமப்புற தமிழ்த் திரைப்­படங்­களில் பட­மாக்கப்­பட்ட காட்சி­கள் போன்ற உணர்வு ஏற்பட்டி­­ருக்கும்.இவற்றை விட கிளி­நொச்சி, முல்­லைத்தீவு போன்ற மாவட்டங்களில் உள்ள ஊர்களில் சவாரிகள் நடக்கும் போது அங்கே சவாரிக்காக வரும் வெளி­யூராருக்கு அவ்வூர் மக்கள் சமைத்து உணவு கொடுத்து வரவேற்­கும் ஒரு பாரம்பரிய மரபும் காணப்படுகின்றது.

பாதுகாக்கப்பட வேண்டிய இப் பாரம்பரியம்
இவ்வாறு காலம் காலமாக நடத்­தப்­­பட்டு வருகின்ற பாரம்­பரியம் மிக்க இச்சவாரிகளை, இது ஒரு மிருகவதை எனவும், எனவே, இதனை தடை செய்ய வேண்டும் எனவும் பிரசாரம் செய்து வருகின்றார்கள்.

இதன் உண்மையை ஆராய்ந்து பார்த்தால் இங்கே குறிப்பிடப்­படு­வது போன்று மாடுகள் வதை செய்யப்­படவில்லை. மாடுகளை வளர்க்கும் ஒவ்வொரு­வரும் இவற்றை தமது குடும்பங்­களில் ஒருவ­ரா­கவும், தமது பிள்ளை­களுக்கு நிகராகவுமே வளர்த்து வருகின­்­­றார்கள். எவ்வாறு பாட­சாலை­யில் ஆசிரியர், மாணவ­னுக்கு அறிவை போதிக்கவும், ஒழுக்­கத்தை போதிக்க­வும் சிறு தண்­டனை கொடுக்கின்றாரோ அது போலவே சவாரிகளின்போதும் ஏனைய வேலைகளின்போதும் இம் மாடு­களுக்கு விடுகை தடியால் அடிக்கப்­­படுகின்றது.

அத்துடன் சவாரியினை பொறுத்­­­தள­­வில் அதற்கென்று மாவட்ட ரீதியாக சங்கங்கள் காணப்­­படுகின்றன. அச்சங்கத்தின் பிரதான நிபந்தனை­யான மாடுகள் சித்திர­வதை செய்யப்படக் கூடாது என்பதுடன் அவ்விதிகளுக்கும் கட்டுப்­பாடுகளுக்கும் உட்பட்டே சவாரி­கள் நடத்தப்­படுகின்றன.

ஏற்கனவே வெளிநாட்டு வியா­பார கம்பனிகள் நலன்சார்ந்து செயற்­படும் சில தன்னார்வ நிறு­வனங்கள் தமிழ்­நாட்டில் ஜல்லிக்­கட்டை நிறுத்தி அதனூடாக தமிழ் நாட்டிற்கே உரித்தான தனித்துவ­மான மாட்டினங்களை அழிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து கடுமையாக முயற்சித்திருந்தன.

அதேபோன்று இப்போது இங்­கும் சில தன்னார்வாளர்கள் இச்சவாரி­களுக்கு எதிராக குரல்கொடுக்கத் தொடங்கி­யிருக்கின்­­றார்கள். ஆனால், அதற்கு நாம் இட­மளிப்போமானால் அது நம் பாரம்­பரியத்தையும் எம் பாரம்­பரிய மாட்டினத்தையும் நாமே அழிப்ப­தற்கு வழி கொடுத்த­தாகவே அமை­யும் என்பதுடன் பின்னர் எம் உறவு­களில் ஒன்­றான மாடு­­களை மிருக காட்சிசாலை­களில் மாத்தி­ரமே காணக்கூடிய­தாக­வும் இருக்கும்.

சந்திப்பு, படங்கள்: ரி.விரூஷன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *